சாந்தவேல் (39 வயது) பிளம்பிங்க் வேலை பார்த்த ஒரு கூலி தொழிலாளி, மனைவி மற்றும் இரு மகள்களுடன் (12 வயது, 9வயது) வாழ்ந்து வந்தவர். முதன் முறையாக சபரிமலை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து முகப்பேரை சேர்ந்த சந்திரா குருசாமியிடம் பணம் செலுத்தி ஜனவரி 6ம் தேதி சபரிமலை சென்றார். ஆனால் இரண்டு நாள் கழித்து அவரது மனைவிக்கு கேரள காவல் துறையினர் கூப்பிட்டு உங்கள் கணவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்ற தகவலை சொல்லியிருக்கிறார்கள். அவரது மனைவியும் சொந்தகாரர்களும் கிளம்பி கோட்டயம் சென்ற பொழுது காவல்துறையினர் சரியான தகவலை தராமல் முறையாக காவல்துறை குற்றத்தை பதிவு செய்யாமல் ஒரு வெள்ளை காகிதத்தில் விபத்து என்று மட்டும் எழுதி கொடுத்து கணவரை கூட்டி செல்லும் படி சொல்லிவிட்டனர்.
அங்கிருந்து இரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 11ம் தேதி அனுமதித்துள்ளார்கள். அதன்பிறகு சிகிச்சை பலனின்றி சாந்தவேல் மரணம் அடைந்தார். கேரள மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் வழியில் தனது மனைவியிடம் அவர் சொல்லிய தகவல் “டீக்கடையில் வாக்குவாதம் நடந்தது அப்பொழுது என் மீது சூடுதண்ணியை எடுத்து ஊத்திவிட்டார்கள்” என்பது தான் இதை தவிர வேறு எந்த தகவலும் தெரியவில்லை. கூட்டிசென்ற குருசாமியும் இவரை காணவில்லை என்றோ தேடும் முயற்சியோ செய்யாமல் கூட்டிசென்ற மற்ற 79பேருடன் திரும்பி வந்துவிட்டார். சாந்தவேலை தேடும் எந்த விதமான முயற்சியையும் சந்திரா குருசாமி மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சாந்தவேலின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கொலையை செய்த கொலைகாரர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், தமிழுணர்வாளர்களும் அவர் உடலுடன் போராட்டம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் அங்கு குழுமியிருந்த மல்லை சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், மே பதினேழு திருமுருகன், வழக்குரைஞர்கள் அங்கயற்கன்னி, வடிவாம்பாள், தோழர் அதியமான் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சுமார் நூற்றிற்கு மேற்பட்டோர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர். பின்பு பின்வாசல் வழியாக வந்த காவல்துறையினர் சாந்தவேலின் உடலை கைப்பற்றிகொண்டு சென்றனர். பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக