06 ஜனவரி 2012

பாடசாலையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்டவர் பசில் ராஜபக்ஸ!

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான ஆலோசகர்கள் எவரும் இல்லை. சிறிலங்காவில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம். இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2007 மே 15ம் நாளன்று கொழும்பில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த தகவல் குறிப்பை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
"பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான ஆலோசகர்கள் எவரும் இல்லை. சிறிலங்காவில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம்.
ஏனென்றால், ஆட்களை விலைக்கு வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர் அவர். மகாவலி அபிவிருத்தி அமைச்சில் பணியாற்றியபோது, எவ்வொரு திட்டத்திலும் தனக்கு 10 வீதம் தரகுப்பணம் கேட்பதால் பசில் ராஜபக்ச "திருவாளர் பத்து வீதம்" (Mr. Ten Percent) என்ற செல்லப்பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
பெரும்பாலான அரசியல் விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அதிபர் பசில் ராஜபக்சவுடன் தான் கலந்துரையாடுகிறார்.
2005 அதிபர் தேர்தலின் போது தமிழ் வாக்குகளை நசுக்குவதற்கு விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு செய்து கொண்டது மற்றும் 2007இல் அமைச்சரவை மாற்றம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும்கட்சிக்குள் இழுத்துக் கொண்டது போன்றவற்றில் பசில் ராஜபக்ச செல்வாக்கு செலுத்தியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட கல்வியறிவு மற்றும் துறைசார்ந்த அனுபவங்கள் ஏதும் இல்லாதபோதும் சிறிலங்கா அதிபருக்கு இவரே ஆலோசனைகளை வழங்குகிறார்.
மாத்தறையிலும் காலியிலும் பசில் ராஜபக்ச கல்வி கற்றுள்ளார். காலியில் கல்வி கற்றபோது அவர் பலமுறை பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அவரது பாடசாலை நண்பர்கள் கூறியுள்ளனர்.
1970ம் ஆண்டு பெலியத்தை தொகுதியில் மகிந்த ராஜபக்ச முதல் முறையாகப் போட்டியிட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பசில் அவருக்கு ஆதரவாகப் பணியாற்றியிருந்தார்.
ஆனால் 1977இல் ஐதேகவில் இணைந்த பசில் தனது சகோதரருக்கு எதிராகவே வேலை செய்தார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்காக பணியாற்றிய போது அவர் திருவாளர் பத்து வீதம் என்ற செல்லப்பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
தற்போதுள்ள பதவியிலும் கூட அவர் குறிப்பிடத்தக்க ஊழல்களை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
1977இல் ஐதேகவில் இணைந்து பசில் பின்னர், சில ஆண்டுகளில் மீண்டும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டார். எனினும் 1990இல் மீண்டும் அவர் ஐதேகவுக்குத் தாவினார்.
மீளவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரமுனைந்த போது, அவரை கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள சந்திரிகா குமாரதுங்க மறுத்து விட்டார்.
அதன்பின்னர் தான் பசில் அமெரிக்கா சென்றிருந்தார்.
2005 தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்ட போதே அவர் மீண்டும் சிறிலங்கா திரும்பினார்." என்று றொபேட் ஓ பிளேக் அனுப்பிய தகவல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக