14 ஜனவரி 2012

தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே அமெரிக்க,இந்திய இராஜதந்திரிகள் வருகிறார்கள்!

இந்திய அமெரிக்க ராஜதந்திர குழுக்கள் இலங்கை வருவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்ல மாறாக அம் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவேயாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தத்தை இவர்கள் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்திருப்பதாவது
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதன் பரிந்துரைகளை நிறைவேற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வருகிறார்.
இதேபோன்று அமெரிக்க ராஜதந்திரிகளும் இதற்காகவே வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ், வர்த்தக சமூகத்தையும் திருப்திப்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் மக்களின் காணிகளைக் கொள்ளையடித்து முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
அத்தோடு இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்வதை சம்பந்தன் எம்.பி. தலைமையிலான கூட்டமைப்பு எதிர்க்காது. ஏனென்றால் கூட்டமைப்பும் முதலாளித்துவக் கொள்கையை ஆதரிக்கிறது. எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய அமெரிக்க பிரதிநிதிகளின் வரவால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழ் மக்கள் தமது காணிகளை இழக்கும் நிலைமையே உருவாகும் எனறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக