31 டிசம்பர் 2011

புலிகளின் முக்கியஸ்தர்கள் இரகசிய தடுப்பு முகாமில்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலநறுவை மின்னேரிய முகாமிலேயே இவர்களும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
பொலநறுவை மாவட்டம் மின்னேரியாப் பகுதியில் பாரிய பரப்பளவில் அமைந்துள்ள பிரதான முகாம் பகுதியில் இரு வேறு தனிப்பட்ட முகாம்களில் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ச்சியான சித்திரவதைகள் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, அவர்களின் அசையும் அசையாச் சொத்துகள், அவற்றை பராமரிப்பவர்கள், அல்லது கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள், தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், அவ்வப்போது புலம் பெயர் தமிழ்ர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் யாவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடிக் கட்டுப்பாட்டுள் அவருக்கு மிக நெருங்கிய புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
எனினும் இவை குறித்த ஆதாரபூர்வமான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருப்பதாக கூறும் குறித்த செய்தியாளர்,அவற்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக