06 டிசம்பர் 2011

மகிந்த ஐ.நா.வில் உரையாற்ற எழுதிக்கொடுத்த பிரித்தானிய நிறுவனம்!

ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார்.
அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிநபர்களை பொறுப்புக் கூறுவதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனிதஉரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
“சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நாங்கள் ஒரு குழுவை வைத்து பணியாற்றினோம். நாங்களே கடந்த ஆண்டு ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் நிகழ்த்திய உரையை எழுதிக் கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது“ என்று பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வில்சன் கூறியுள்ளார்.
அத்துடன் 2010ம் ஆண்டில் சிறிலங்கா அதிபர் லண்டன் வருவதற்கு முன்னர் தமது நிறுவனம் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் நவ சமசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோரை தமது நிறுவனம் சந்தித்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
ஆனால் தாம் சிறிலங்கா அரசுடனான தொடர்புகளில் சட்டவிரோதமாக எதையும் செய்யுமாறு ஆலோசனை கூறவில்லை என்றும் டேவிட் வில்சன் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக ஊடகங்களில் சிறிலங்காவுக்கு சார்பாக செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும் பொறுப்பை பெல் பொட்டிங்கர் நிறுவனமே ஏற்றிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக