தேவைப்படும் காணிகளை அரசுடமையாக்குவதற்கு அதிகாரமளிக்கும் நகர மற்றும் நாடு திட்டமிடல் திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆளும்கட்சி கொரடா தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், மாகாணசபைகளின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அவற்றின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.
மாகாணசபைகளின் பார்வைக்கு இந்தச் சட்டமூலம் அனுப்பப்படாததால் இதனை சட்டமாக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலேயே சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது.
பொருளாதார, சமூக, வரலாற்று, சுற்றாடல் மற்றும் மத காரணங்களுக்காக மாநகர மற்றும் நகரசபைகளுக்குட்பட்ட, எந்தவொரு நிலத்தையும் சுவீகரிக்க சிறிலங்கா அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருந்தது.
கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பில் உள்ள நகர அபிவிருத்தி அமைச்சுக்கே இதன் மூலம் அதிகாரங்கள் வழங்கப்படவிருந்தன.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தாம் நினைத்த காணிகளை அரசுடமையாக்குவதற்கு கோத்தாபய ராஜபக்சக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற முடியாது போயுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக