30 டிசம்பர் 2011

லலித் வீரராஜுவை கடத்தியது அரசாங்கமே"சந்திரசேகரன்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தோழர் லலித் வீரராஜூற்கு யாழில் ஆபத்து இருந்ததை மக்கள் விடுதலை முன்னணி முற்கூட்டியே உணர்ந்திருந்தது என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அரசின் அராஜகமே லலித் வீரராஜை கடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் போராட்ட இயக்கம் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது. அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு ஊடக மாநாடு ஒன்றை நடத்த தயாராகிய பொழுது யாழ் அச்சுவேலிப் பகுதியில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த குகன் என்பவருடன் லலித் வீரராஜ என்பவரும் மர்ம நபர்களினால் கடத்தப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரனிடம் குளோபல் தமிழ் செய்தியாளர் உரையாடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரிவினைவாத குழுவினரே லலித் வீரராஜை ஆபத்திருந்த யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அவர் கடத்தப்படும் நிலையை உருவாக்கியது என்றும் ஆர். சந்திரசேகரன் கிளர்ச்சிக் குழுவினர் மீது குற்றம் சாட்டினார்.
லலித் கடத்தப்பட்ட பின்னர் இதுவரையில் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று குறிப்பிட்ட சந்திரசேகரன் இராணுவமும் காவல்துறையினரும் கட்டுப்பாட்டில் உள்ள சூழலில் இந்த அராஜகத்தை அரசே செய்திருக்கிறது என்றார். நாட்டில் சமாதானம் வந்து விட்டது என்றும் வடக்கில் எல்லாம் சரியாகிவிட்டது என்றும் சொல்லும் நிலையில் இந்தக் கடத்தல் அரசின் அராஜகத்தை வியப்போடு வெளிக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
லலித் ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் செயற்பட்டவர் என்று குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அக்கால கட்டத்தில் அவர் பலமுறை அச்சுறுத்தப்பட்டார், கைது செய்யப்பட்டார், தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு யாழில் ஆபத்து இருந்ததை உணர்ந்த மக்கள் முன்னணி அவரை யாழில் கட்சிச் செயற்பாடுகளை தற்காலிகமாக தவிர்க்கும்படி கூறியிருந்தது என்றார்.
ஜே.வி.பியின் பிளவு காரணமாக லலித் விரராஜ் பிரிவினைவாத குழுவுடன்; இணைந்தாக குறிப்பிட்ட சந்திரசேகரன் அவருக்கு யாழில் ஆபத்து இருப்பதை தெரிந்தும் பிரிவினைவாதக் குழுவினர் தனியாக அனுப்பி அவரை அரசு கடத்தும் சூழலை ஏற்படுத்தி விட்டது என்று கிளர்ச்சிக் குழுவினர்மீது குற்றம் சாட்டினார்.
லலித் கடத்தப்பட்ட இந்த விடயத்தில் இது லலித்திற்கு மாத்திரம் நடந்த அவருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை எனத் தெரிவித்த சந்திரசேகரன் வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட பிரச்சினை என்றும் கடத்தப்பட்ட 20க்கு மேற்பட்ட இளைஞர்களின் பிரச்சினை என்றும் குறிப்பிட்டார்.
லலித்திற்காக மாத்திரமின்றி கடத்தப்பட்ட ஒட்டுமொத்த இளைஞர்களுக்காகவும் மக்கள் விடுதலை முன்னணி உரிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக