இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்க தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 3 கோரிக்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இனப்பிரச்சினை தீர்வு திட்டத்திற்காக கடந்த 16ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் மாகாண அரசுக்கான காணி உரிமம் போன்ற கோரிக்கைகளை அரச தரப்பு நிராகரித்திருந்தது.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
கூட்டமைப்பு முன்வைத்துள்ள அந்த 3 கோரிக்கைகளும் பிரச்சினைக்குரியது. ஆனால் அந்த மூன்று அம்சங்களைத்தவிர பல பிரச்சினைகள் தமிழர்களுக்கு உள்ளது.
பேச்சுவார்த்தை இடம்பெறும் போது முகத்துக்கு முகம் நேரடியாக உரையாடிவிட்டு, வெளியே சென்று பேச்சுவார்த்தையை முறிவுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக்களை வெளியிட்டு நடந்து கொள்கிறது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு அமைக்கத் தீர்மானித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எந்தவொரு தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை.
என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக