24 டிசம்பர் 2011

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து கூட்டமைப்பு உடன் வெளியேறவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளனர்.
உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும். என புதிய இடதுசாரி கட்சி வலியுறுத்தி உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச்செயலாளரும் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் நகரசபைகளுக்குக்கூட காவற்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கியமான அதிகாரங்களை வழங்குவதற்கு மஹிந்த அரசு மறுப்புத் தெரிவிக்கின்றது. ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவே அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது. நிலைமை அப்படியிருக்கையில், அரசு மழுப்பல் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?
13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்யவுள்ளோம் என அரசு கூறுவது அபத்தமானது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். பிரதான எதிர்க்கட்சியில் இனவாதப் போக்குடையவர்கள் இருப்பதும் மஹிந்த அரசுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்.
அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் எனக் கூறிக்கொண்டு பேச்சைத் தொடர்பவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. கூட்டமைப்பு, உடன் பேச்சு மேடையிலிருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறி தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பெரும் கூட்டங்களைத் தெற்கில் நடத்தவேண்டும். அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம் என விக்ரமபாகு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக