08 டிசம்பர் 2011

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி செயற்படுகிறது.

அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனவும் இதில் தமிழர்கள் பிரச்சினைகள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என்பதால் அவ்வாறான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்கவின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. கட்சித் தலைவர்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்துள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கொள்கை இன வாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என இதன்போது கடும் எதிர்ப்பை வெளியிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான விக்கிரம பாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் தமிழர் விடயங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முதன்மை வகிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் விக்கிரமபாகுக்கும் இடையே இக்கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் சஜித் கூட்டத்திலிருந்து வெளியேறினார். “சிங்களபௌத்த கூட்டமே அங்கு நடைபெற்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினேன்” என்று நேற்று மாலை தெரிவித்தார் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய.
அதேசயம், எதிர்க்கட்சிகளின் இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிட்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிமபாகு கருணாரட்ன கூறியவை வருமாறுஐக்கிய தேசியக் கட்சி, சிங்கள இனவாதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது. அதனை முன்வைத்தே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவே அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு விவகாரம், மீள்குடியேற்றம் உட்படத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என நான் உறுதியாகக் கூறினேன்.
சரத் பொன்சேகாவின் விடுதலையைப் பிரதானமாகக் கொண்டே நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தக் கூட்டத்தில் கூறினார்.இதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டால் அது சிங்கள இனவாத ஆர்ப்பாட்டமாகவே கருதப்படும் எனச் சுட்டிக்காட்டினேன்.
எனது கருத்தை ஏற்க மறுத்த சஜித் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். அவரும் ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் கொள்கையைக் கடைப்பிடித்தே செயற்படுகின்றார் என்று நான் சாடினேன்.சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கியுள்ளனர். அதனை மறந்து பிரதான எதிர்க்கட்சி செயற்படக் கூடாது. அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தமிழர் விவகாரங்களும் உள்ளடக்கபட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு என்றும் நான் வலியுறுத்திக் கூறினேன்.
இந்தக் கூட்டத்தின்போது, சரத்பொன்சேகாவின் விடுதலைக்கு உதவுமாறு கட்சித் தலைவர்களிடம் அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் எனது கருத்தை ஆதரித்துக் கருத்து வெளியிட்டனர் என்றார் விக்கிரமபாகு.இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், ஐ.தே.க. உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண,ரோஸி சேனநாயக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க எம்.பி. உட்பட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக