அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது போனால் தமிழ் மக்கள் வீதியில் இறங்கி அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பறநட்டகல் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அவர் தென்னங்கன்றுகளை வழங்கினார். இந்த வைபவத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி தொடங்கி இம்மாதம்வரை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பவைகளை வழங்கினால் தன்னால் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவரது இக்கூற்று மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்தால் தனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியாது என்று சொல்லியிருப்பது எமக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினை என்பதை ஜனாதிபதி தன்னுடைய சுயநலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறாரா, என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது. இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் தலைவர்களும் இனப்பிரச்சினையைச் சரியாக அணுகவில்லை. நான் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பேன் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜனாதிபதியே இப்போது இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன் மூலம் தமிழ் மக்களுக்கும் இனப்பிரச்சி;னையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்தும் அரசாங்கம் இரட்டைவேடம் பூண்டிருக்கின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது வெறும் தேர்தல் பிரச்சாரமா? பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கென்று சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொண்டு எமது மக்களை நிர்க்கதியாக்கி இன்று தனது சுயலாபத்திற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பதைக் கொடுக்கமாட்டேன் என்று சொல்வது சரியானதா? இலங்கையின் ஜனாதிபதி என்றால், அது அம்பாந்தோட்டைக்கு மட்டும்தானா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆள்நடமாட்டமே இல்லாதிருந்த கிளிநொச்சியில் இராணுவத்தினர் அளித்த சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்டு வடக்கு-கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் நான்தான் ஜனாதிபதி என்று சொல்லியிருந்தார். இனப்பிரச்சினைக்குப் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த பட்ச தீர்வையாவது முன்வைக்க முடியாது, அவ்வாறு செய்தால் தான் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாது என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி கூறுவது ஏன்?
சொர்க்கத்திற்குப் போவதற்கான ஒரு மந்திரத்தை அடியார் ஒருவாருக்கு அவரது குருநாதர் ஓதிவிட்டு இதை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் நீ நரகத்திற்குச் செல்வாய் என்று சொல்லியபோது அந்த அடியார், ‘கேட்பவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றால் நான் ஒருவன் நரகத்திற்குப் போவதில் பெருமைப்படுகின்றேன்’ என்றாராம். ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதி இந்த நாட்டில் சமபங்காளிகளாக விளங்கும் தமிழ் மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகளை வழங்கினால் தான் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாது என்கிறார். தன்னலமற்ற சேவையைப் புரியவேண்டிய ஆட்சிப்பொறுப்பிலுள்ளவர் இப்படிச் சுயநலமாகச் சிந்திப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் ஜனாதிபதியின் இக்கூற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமலிருப்பதானது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் கிராமத்தை வலுப்படுத்துவதற்காகவே அவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த அரசாங்கத்துடன் பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் அரசாங்கம் எமக்கு உரித்தானவற்றை வழங்க மறுத்தால் நாம் கூனிக்குறுகி நிற்காமல் ஜனநாயக மரபின் அடிப்படையில் அறவழிப்போராட்டங்களை நடத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அனைத்து அறவழிப்போராட்டங்களிலும் மக்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். அதன் மூலம் எமது ஒற்றுமையையும் எமது உரிமைப்போராட்டத்தில் உள்ள நியாயத்தையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவோம். என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் வவுனியா பிரதேசசபையின் தவிசாளர் சிவலிங்கம், உறுப்பினர்கள் கதிர்காமு பரமேஸ்வரன், தர்மலிங்கம், பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பறநட்டகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமைதாங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக