கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த சிங்கள இளைஞர்கள் எட்டியாந்தோட்டை, எதுராபொல தோட்டம் கீழ்ப் பிரிவில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்றுமுன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.
போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டது.
கடும் கோபத்துடன் திரும்பிச்சென்ற சிங்களவர்கள் தங்களது கோஷ்டியினர் சகிதம் மீண்டும் ஆலய வளாகத்துக்குள் வந்து, தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியால் வீட்டுக்குள்ளேயே உறைந்துப்போயுள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அசுரவேகத்தில் செயற்பட்ட மனோ, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அவிசாவளை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தச் சம்பவத்தை அவர் கொண்டுசென்றுள்ளார்.
எதுராபொல கீழ் பிரிவு தோட்டத்துக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸார் மனோவிடம் உறுதியளித்துள்ளனர். அத்துடன், இச்சம்பவத்தை மனோ கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக