07 டிசம்பர் 2011

அமெரிக்காவில் திரையிடப்பட்ட "இலங்கையின் கொலைக்களங்கள்"மற்றும் இலங்கையின் போலி ஆவணப்படம்.

சனல்-4 தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படமும் அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட Lies Agreed Upon ஆவணப்படமும் ஒரே அரங்கில் நேற்று திரையிடப்பட்டதுடன் அதுபற்றிய விவாதம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
‘சிறிலங்காவின் உள்நாட்டுப் போர்: ஊடக சுதந்திரங்களும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான பதிலும்‘ என்ற தலைப்பில் நியுயோர்க்கில் பார்க் அவென்யூவில் ஆசிய சொசைற்றியில் இந்த நிகழ்வு நேற்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
இரு ஆவணப்படங்களும் திரையிடப்பட்ட பின்னர், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லும் மக்ரே, முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழுவைச் சேர்ந்த பொப் ரெம்லர் ஆகியோருடன், கொழும்பிலிருந்து வெளியாகும் ‘தி நேசன்‘ வார இதழின் ஆசிரியர் மலிந்த செனிவிரட்ண இணைய வழியிலும் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
நியூஸ்வீக் இன்ரநசனல் இதழின் ஆசிரியர் துன்கு வரதராஜனின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா அரச மற்றும் அனைத்துலக சமூகப் பிரதிநிகளும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரசின் தரப்பு நியாயங்களை ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன எடுத்துக் கூறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தநிகழ்வில் பங்கேற்று விளக்கமளிக்க ஒப்புக்கொண்ட பாலித கொகன்னவோ அல்லது சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்முறையாக இரு ஆவணப்படங்களும் ஒரே அரங்கில் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடத்தப்பட்டள்ளதுடன் இணையமூலம் நேரலையாகவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக