அரசுடனான தீர்வுப் பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகளின் பாணியையே பின்பற்றுகின்றனர். தனித்தீர்மானம் எடுக்கமுடியாமல் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் சக்திகளால் அவர்கள் தடுமாறுகின்றனர். நாமும் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.இவ்வாறு நேற்றுக் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை வெளியிட்டார் ஜனாதிபதி.
அப்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு இடம் பெறவேண்டும் என்பது முக்கியமானது. இதற்கு உறுப்பினர்களின் பெயரை அனுப்புமாறு நாம் தெளிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், புலிகள் செய்ததைத்தான் கூட்டமைப்பும் செய்கிறது. பேச்சு மேசையில் அமர்வார்கள். பிறகு ஏதாவது நிபந்தனையை விதித்துவிட்டு வெளியேறுவார்கள். பிறகு வருவார்கள், பேசுவார்கள். நாமும் மிகப் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
தமிழ்க் கூட்டமைப்பினரின் மனநிலை மாறவேண்டும். போர்ச்சூழல் மனநிலையிலிருந்து அவர்கள் விலகவேண்டும். நான் பேச்சுக்கு செல்லாமைக்கும் இதுதான் காரணம். தீர்மானங்களை எடுக்கக்கூடிய ஒரு தரப்புடன்தான் நாம் தீர்மானங்களை எடுக்கலாம். ஆனால், கூட்டமைப்பினர் இப்படியான நிலையில் இல்லை. தனியாக ஒரு தீர்மானத்தை அவர்களால் எடுக்கமுடியாத நிலைமை இருக்கிறது. அவர்கள் வெளித்தீர்மானத்திற்கு உட்பட்டு செயற்படவேண்டிய நிலையில் இருக்கின்றனர். புலிகளின் அடிவருடிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் அவர்களின் பின்னணியில் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக