சுமார் 380 அகதிகளுடன் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் நேற்றுக் கவிழ்ந்ததில் 300 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர்.
கிழக்கு ஜாவா கடற்பகுதியில் கவிழ்ந்த இந்தக் கப்பலில் பயணம் செய்த 76 அகதிகளை மீட்டுள்ளதாக ஜாவா அவசரகால மீட்பு பணியகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
மரத்தினாலான இந்தப் படகில் அளவுக்கதிகமானோர் பயணம் செய்துள்ளதாகவும், இராட்சத அலைகளால் தாக்கப்பட்டு அது கவிழ்ந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இநதப் படகில் பல்வேறு நாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் மூழ்கிய இந்தப் படகில் 40 சிறுவர்கள் வரை பயணம் செய்ததாக, தப்பிப் பிழைத்த ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கூறியுள்ளார்.
அங்குமிங்குமாக சாய்ந்த கப்பல் உடைந்து நீரில் மூழ்கியதாகவும், அப்போது உடைந்து போன பாகங்களை பற்றிப் பிடித்தவாறு தத்தளித்துக் கொண்டிருந்த தம்மை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படகில் பயணம் செய்த 200 இற்கும் அதிகமானோர் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிறிலங்காவில் இருந்தும் அண்மையில் அகதிகள் அவுஸ்ரேலியா நோக்கி சென்றுள்ள நிலையில் இந்தப் படகில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டனரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக