நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதியில் புலிகளையும், தமிழர்தரப்பையும் குற்றம் சாட்டிக்கொண்டு முடிக்கப்படும் என நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி இருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தின் பின்னரான மூன்று வருடங்களினை ஆய்வுசெய்து அதை மையமாக வைத்துக் கொண்டு இந்த நாட்டில் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டிற்குத் தீர்வு காண நினைக்கின்றது.
ஆனால் அது சாத்தியமல்ல. தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை காலத்திற்குக் காலம்வந்த சிங்கள அரசாங்கங்கள் ஆரம்பித்து விட்டன. எனவே பிரித்தானியர் இங்கிருந்து வெளியேறிய காலத்திருந்தான ஆய்வினை சர்வதேசம் செய்யவேண்டும்.இந்த நிலையில் யுத்தத்திலும், இன அழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்த தரப்பான அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவொன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதே நிலைப்பாட்டையே கூட்டமைப்பும் எடுக்கவேண்டும், கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைகளையும், ஜ.நாவின் நிபுணர்குழு அறிக்கையினையும் வரவேற்பதாக கூறிக் கொண்டிருக்கின்றது.ஆனால் உண்மையினை கண்டறியவேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கேநடந்த உண்மை கூட்டமைப்புக்குத் தெரியும், எனவே பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டும்.கடந்த ஒரு வருடகாலமாக இந்த அறிக்கையினை எதிர்பார்த்திருந்து சர்வதேசம் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றது எனவே சர்வதேசம் இனியாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக