24 டிசம்பர் 2011

ஐ.நா இன்னும் ஏன் மெளனம் காக்கிறது?இன்னர் சிற்றி பிரஸ் விசனம்.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அவர், ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்யும் பணி நடப்பதாகவும், அதுகுறித்து மேலதிகமாக சொல்வதற்கு ஏதும் இருந்தால் தாம் பின்னர் கூறுவதாகவும் பதிலளித்துள்ளார்.
இதன்பின்னர், பான் கீ மூனின் அதிகாரிகள் பலரிடம் விசாரித்ததில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்யுமாறு ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்களம் மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு ஆகியனவற்றிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக