04 டிசம்பர் 2011

கூட்டமைப்புக்கும் அரசதரப்பிற்குமான பேச்சுக்களில் இழுபறி நிலை.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காது போனால், ஏற்கனவே உடன்பட்டவாறு, பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமாக இருக்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளதால், சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை நியமிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கருத்துகள் இரண்டு கூட்டங்களில் அரச தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும் நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன் வைத்த இந்தக் கருத்து பேச்சுக்களில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில்,“பேச்சுக்களை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இருக்கிறது.
அதேநேரம் ஏற்கனவே எழுதப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையை கௌரவிக்கும் படியும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும், மக்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அரசியல்தீர்வை அமைவதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அரசை வலியுறுத்துகின்றோம்.
கடந்த நவம்பர் 16ம் திகதி அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்ற இருதரப்புப் பேச்சுக்களின் போது அரசியல் தீர்வொன்றினை உருவாக்குவதில் கலந்துரையாட வேண்டிய அம்சங்களை இரு தரப்புகளும் அடையாளம் கண்டறிந்தன.
குறிப்பிட்ட ஒழுங்கில் இந்த அம்சங்கள் குறித்து கலந்துரையாட இரு தரப்புகளும் உடன்பட்டதுடன், இந்த நோக்கத்திற்காக பேச்சுக்களை நடத்துவதற்காக இம்மாதம் (டிசம்பர்) 1ம், 6ம், 14 ம் மற்றும் 15 ம் திகதிகள் கால அட்டவணைப்படுத்தப்பட்டன.
கால அட்டவணையும் கலந்துரையாட வேண்டிய அம்சங்களும் அடங்கிய பிரசுரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இம் மாதம் 1ம் திகதி கூடிய போது ஆரம்பத்திலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காத பட்சத்தில் இருதரப்பு பேச்சுக்களை ஏற்கனவே உடன்பட்டபடி முன்கொண்டு செல்ல முடியாதெனச் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பேச்சுக்களில் அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் உடன்பாடு ஏற்பட்டவுடன், அது முன்னரே பிரேக்கப்பட்டபடி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் வைக்கப்படும், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழு நடவடிக்கைளில் இணைந்து கொள்ளும்” என இரு தரப்பினடையேயும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டுக்கு அமைச்சர் ஜி.எல். பீரிசின் வேண்டுகோள் முரணாயுள்ளது என்பது அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.
இந்த உடன்பாடு கடந்த செப்ரெம்பர் 11 ம் திகதி நடைபெற்ற கூட்டு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கடுத்து அக்டோபர் 20 ம் திகதி நடந்த கூட்டத்திலே அவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதற்கடுத்ததாக நடைபெற்ற நவம்பர் 16ம் திகதி கூட்டத்தில் டிசம்பர் முற்பாதியில் நான்கு கூட்டங்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விடயம் நவம்பர் 24 ம் திகதி அமைச்சர் ஜி.எல். பீரிசினால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஞாபகப்படுத்திய போதும் அரசு இக்காரியத்தை நிதானித்துச் செய்ய காலஅவகாசம் கோரியதுடன் அதன் விளைவாக இன்று (டிசம்பர் 3) ஒரு புதிய பேச்சுக்கு நாள் குறிக்கப்பட்டது.
இன்று அரசதரப்பு பிரதிநிதிகளின் நிலைப்பாடு தெளிவற்றதாகவும் ஒரு முடிவுக்கு வராத நிலையிலுமாக இருந்ததாகவும் இரா.சம்பந்தன் தனது அறிக்கையில கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக