02 டிசம்பர் 2011

நிபுணர்குழு குழு அறிக்கையை நிராகரித்தவர்கள் இப்போ பதிலளிக்கப் போகிறார்களாம்!

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கு மூத்த இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியமித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவினர், இந்த அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை விரைவில் அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் சில பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கும்.
புதிய அறிக்கையை சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து தயாரித்து வருகின்றன.
பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாத வகையில் மனிதாபிமானப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரமான விளக்கங்ளை இந்த அறிக்கை கொண்டிருக்கும்“ என்றும் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக, போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்ததுடன், அந்த அறிக்கைக்குப் பதிலளிக்கப் போவதில்லை என்றும் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக