குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து, உரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு:
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மக்களுக்கு விரோதமாக, அவர்களது அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு தேவைகளுக்கு முரணாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ளாது. குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் ஒரு போதும் கூட்டமைப்பு அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மாறுபடப் போவதில்லை.
அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தியும், விட்டுக்கொடுத்தும் எதுவித பயனும் ஏற்பட்டிருக்கவில்லை. எமது உரிமைகளை நாங்கள் தானே கேட்க வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் இழுபட்டாலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்.
பேச்சுவார்த்தை மூலமாக எமக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். இதில் நாம் மிகத் தெளிவாகவுள்ளோம். எமது மக்களை மீண்டும் துன்பகரமான வாழ்க்கையைத் தொடர நாம் விரும்பவில்லை.
பேச்சு வார்த்தையின் போது தமது பொறுமையைச் சோதிக்கக் கூடாது என அரசு கூறுகிறது. எமது மக்களின் உரிமைகள், தீர்வுகள் பற்றி நாங்கள் தானே பேசவேண்டும். இதன்போது உள்நாட்டு ரீதியாக, வெளிநாட்டு ரீதியாக, இராஜதந்திர ரீதியாகச் சில தடங்கல்கள் வரலாம். அதுபற்றி நாம் மௌனம் காப்பதாக பொதுமக்களும் சில ஊடகங்களும் எண்ணலாம். எனினும் இத்தகைய மௌனிப்புகளைக் கொண்டு கூட்டமைப்பு தன் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாக எண்ணக்கூடாது.
வடக்குகிழக்கு இணைப்பில்லாது வடமாகாண சபைத்தேர்தல் நடந்தால் அதில் கட்சி ரீதியாகப் போட்டியிடக் கூடாது. தேசியக்குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனச் "சிவில்' சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2012 இல் இந்தத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் சிவில் சமூகத்துடன், துறைசார் வல்லு நர்களுடன் கலந்துரையாடி என்ன அடிப்படையில் போட்டியிடுவது என்பது பற்றி பேசுவோம்.
தமிழ் மக்களுக்கு விரோதமான சக்திகளின் கைகளுக்கு வடக்கு மாகாணம் சென்றுவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருக்க வேண்டும். எம்மை அழிப்பவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவருமே இறக்கவில்லை என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்காகவேனும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடத்தான் வேண்டும். இதுபற்றி சிவில் சமூகத்துடன் கலந்துரையாடப்படும்.
அரசுடன் பேசும் விடயங்களைச் சில தந்திரோபாயங்களுக்காக நாம் வெளியே சொல்லவில்லை. அரசு சிலவற்றைச் சொல்வதனால் சம்பிக்கரணவக்க உள்ளிட்ட பலர் அங்கு பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றனர். இனவெறியையும் ஊட்டுவார்கள். ஆனாலும் அரசுடன் பேசிய எந்த விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சிறையிலுள்ள கைதிகளின் பெயர் விவரங்கள் உள்ளடங்ய பட்டியலை வெளியிடுவதாக அரசு கூறியது. அதேவேளை பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்கிறோம் என்றும் ஜனாதிபதி கூறினார். இது இரண்டுமே நடக்கவில்லை. மாறாக வெலிக்கடை, போகம்பரை, அநுராதபுர சிறைச்சாலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள் எனப் பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக