பிரான்ஸ் - ஸ்தான் மைதானத்தில் நடாத்தப்பட்ட மாவீரர் தின நிகழ்வு குறித்த கணக்கு விபரங்கள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னதாக மக்களது பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும் என தலைமைச் செயலகம், தமிழர் நடுவம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இது குறித்து இடம்பெற்ற கணக்காய்வு நிகழ்வில்,
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், புலம்பெயர் நாடுகளில் நாம் நடாத்தும் அனைத்து நிகழ்வுகளிலும், சேகரிக்கும் பணத்திலும் வெளிப்படைத் தன்மை பேணப்படும் என அறிவித்திருந்தோம். அந்த எமது வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டு, மாவீரர் தினம் குறித்த கணக்கு அறிக்கையை வெளிப்படுத்த உள்ளோம் எனத் தலைமைச் செயலகத்தின் பிரஞ்சுப் பொறுப்பாளர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
எமது அழைப்பினை ஏற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் எமது மாவீரர் தின நிகழ்வுகளில் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி, 3000 பூக்கள் விற்ற பணம், மாவீரர் தினத்துக்காகப் பொதுமக்களிடம் பற்றுச் சீட்டுக்கள் மூலம் பெற்ற பணம் ஆகியவற்றுக்கான கணக்கு விபரங்கள் மக்கள் பார்வைக்காக இணையத் தளங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர் நடுவம் தனது ஒரு வருடக் கணக்கு அறிக்கையையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தாம் நடாத்திய தேர்தல் காலத்தில் திரட்டப்பட்ட நிதி தொடக்கம், இது நாள் வரையான அத்தனை கணக்குக்களையும் மக்கள் முன் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே 'வாரம் 1 டொலர்' திட்டத்திற்காக மக்கள் மத்தியில் செல்ல உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முறையையே அமெரிக்கா முதல், அவுஸ்திரேலியா வரையிலான அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அத்துடன், சரியான கணக்கைச் சமர்ப்பிக்காத நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் மக்கள் எந்த வகையிலான பங்களிப்பினையும் வழங்க வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- நாதம் ஊடக சேவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக