12 டிசம்பர் 2011

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கனடா கடுமையாக நடக்கும்.

கனடியப் பிரதமர் ஹார்ப்பர் தலைமையிலான அரசானது மனிதவுரிமைகளை, மதவுரிமைகளை மதிக்காத எவரையும் இனிவரும் காலங்களில் கண்டிப்பான அணுகுமுறையுடனே நடாத்தும் என கனடிய விளையாட்டுத்துறை அமைச்சரான பால் கோசல் கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட வருடாந்த நிகழ்வில் பேசும் போது குறிப்பிட்டார்.
கனடிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேசும் போது இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக கனடியப் பிரதமர் அக்கறை செலுத்துகிறார் என்பதை தாங்கள் அண்மைய காலங்களில் காண்பதாகத் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பீற்றர் சில்வமன் பேசுகையில்
உலகம் எப்போதுமே ஒரு துண்ப நிகழ்வு இடம்பெறும் போது அது மீண்டும் இடம்பெறாது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் ஆனால் உலகின் போக்கில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியவில்லை என்றும், யூதர்களான தாங்கள் 1940க்களில் பட்ட துன்பத்தையொத்த ஒரு நிலையில் ஈழத் தமிழர்கள் இருப்பதை தான் நன்கு உணர்ந்தே கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து செயற்பட ஒத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததோடு தனது மனைவி கூட ஜேர்மனியிலிருந்து ஹிட்லரால் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர், அகதி முகாம்களில் வசித்து உயிர் தப்பியவர் என்பதையும் நினைவு கூர்ந்ததோடு, இதுவரை நடந்தவற்றிக்கு சிறீலங்கா அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பலம், தகுதி என்பன புலம்பெயர்ந்த தமிழர்களிடமே இருக்கிறது என்றும் அவர்கள் அதனைச் செய்யாவிட்டால் எஞ்சியிருக்கும் தமிழர்களிற்கு பாதிப்பு ஏற்படும் போதும் உலகம் மௌனமாக இருக்க வழி செய்தவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மாறிவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
உலகின் போக்கை மாற்ற புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இன்று தேவையானது கனடிய மனிதவுரிமை மையம் போன்ற ஒரு தலைமையும் உலகை வெல்லக்கூடிய ஒரு படிமுறையான சாதக வேலைத் திட்டமுமே என்றும் குறிப்பிட்டார்.
கனடாவில் இருக்கும் பதின்ம வயதைக் கடந்த தமிழர்கள் ஆளுக்கு 50 ரூபா வீதம் இதற்காக அன்பளிப்புச் செய்தாலே ஆகக் குறைந்தது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழின ஆண், பெண்பாலரிடமிருந்து எவ்வளவு நிதி கிடைக்கும் என்பதை கருத்திற் கொண்டு செயலாற்ற வேண்டும் எனவும்,
பணமே சிறீலங்கா போன்ற நாடுகளிற்கு எதிரான படிமுறைத் திட்டங்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான முதன்மைக் காரணி என்றும் யுதர்கள் தங்கள் நாட்டிற்குச் செய்தது போல கனடியத் தமிழர்களும் ஒன்றுபட்டு, ஒருமித்து சிறீலங்கா அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஆவன செய்து இனி இருக்கும் ஈழத் தமிழ்ச் சந்ததியையாவது காப்பாற்ற உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் ஈழத்தமிழர்களின் நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
யூத இனத்தவரான பீற்றர் சில்வமன் மேலும் கூறுகையில் ஒருநாள் கனடிய மனித உரிமைமையமானது [ www.chrv.ca ] சிறீலங்காவின் ஆட்சி பீடத்துடன் கனடியத் தமிழர்களின் பிரதிநிதிகளாக ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்காக அழுத்தங்கொடுத்துப் பேசக் கூடிய இராசதந்திர அமைப்பாக மாற வேண்டும் அதுவே ஈழத்தமிழர்களின் உச்சக்கட்ட அரசியல் சாணக்கியம் என்றும் அத்தகைய அழுத்தமே எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களை எழுச்சிபெற வைக்கும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக