05 டிசம்பர் 2011

கோத்தபாயவிடம் பேசச்சொன்ன கடத்தல்காரர்கள்!

பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த ருவன் சந்திமால் டீப் நேற்றுமுன்தினம் மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினராலேயே அவர் கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேவி ருவான் என்று அறியப்பட்ட தனது கணவரது கடத்தல் பற்றிய முறைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் இழுத்தடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கெரில்லா பாணியில் மறைந்திருந்து தம்மைத் தாக்கிய கடத்தல்காரர்களில் ஒருவர் தனது கணவரைச் சுட முனைந்தாகவும், அவர் மீது தனது கணவர் கல் ஒன்றை வீசியதாகவும் நேவி ருவானின் மனைவி கூறியுள்ளார்.
நினைவிழக்கும் வரை கடத்தல்காரர்கள் தனது கணவரைத் தாக்கியதாகவும், அதன் பின்னர் அவரை வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களில் சிலர் வரக்காபொல நகரில் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி கோத்தாபயவுக்கு மட்டுமே தெரியும் என்றும் தாம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதே சந்தேகம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் நேவி ருவானி மனைவியான லக்சிகா சாமலி.
சிறிலங்கா பாதுகாப்புஅ மைச்சின ஆலோசகராக இருந்த துமிந்த சில்வாவின் நெருங்கிய உதவியாளர் என்று நேவி ருவான் ஊடகங்களால் குறிப்பிடப்பட்டு வந்தார்.
துமிந்த சில்வா முல்லேரியா துப்பாக்கி மோதலின் போது படுகாயமடைந்து சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனது கணவரைக் கொன்று விடாதீர்கள் என்று நான் அவர்களிடம் கோரினேன், கடத்தல்காரர்களில் ஒருவர் கோத்தாபய ஐயாவுக்கு தொலைபேசி எடுக்குமாறு கூறியதாகவும் லக்சிகா சாமிலி குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு கோத்தாய பற்றி மட்டுமே தெரியும். எம்மால் அரசாங்கத்தையே சந்தேகிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித றோகண, இது தமக்கும் சிறிலங்கா அரசு மற்றும் படையினருக்கும் சேறுபூசும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே துமிந்த சில்வாவில் மற்றொரு உதவியாளராக செயற்பட்ட நேவி தம்மிகவும் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் தெமட்டகொட சமிந்த, கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் புதைத்ததாகவும், துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் புதைத்தாகவும் கூறியிருந்தார்.
ஒவ்வொரு முறை சடலங்களை புதைக்கும் போதும், பெரியமுதலாளியின் (கோத்தாபய ராஜபக்ச) உத்தரவின் பேரிலேயே இதைச் செய்வதாக தனது முதலாளி (துமிந்த) கூறுவார் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக