முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்தவர்களால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் 240 இற்கும் மேற்பட்ட தெற்குக் குடும்பங்கள் குடியேறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள் என அந்த மக்கள் கூறுகின்றனர். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 240 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை அபகரித்து அடாத்தாகக் குடியமர்ந்துள்ளன.
அத்துடன் முகத்துவாரம் கடற்பகுதியையும் அவர்கள் முழுமையாகத் தமது கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் சொந்தமான வீடுகள், காணிகள் என்பன உள்ளன.
தமிழரின் நிலங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இந்த மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது குறித்து உடனடிக் கவனம் செலுத்தி பிரச்சினைகள் ஏற்படுவதைச் சம்பந்தப்பட்டோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக