10 டிசம்பர் 2011

முன்னாள் போராளிகள் அவமானப் படுத்தப்படுகிறார்கள்"வேதனையில் கொதித்தார் விஜயகலா மகேஸ்வரன்.

"நீங்களும் மனிதர்கள்தானே! உங்களுக்கு சகோதரர்கள் இல்லையா?, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா? ஏன் இப்படி எங்கள் தமிழ்ச் சகோதரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்?" நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்றுக் கொதித்தெழுந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். அரச தரப்பினரைப் பார்த்து அவர் ஆக்ரோஷமாகச் சீறினார். புனர்வாழ்வு வழங்கப்படுவதாகக் கூறிக் கடந்த இரண்டரை வருடங்களாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் 104 பேர் நேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் வெள்ளை நிற ரீசேர்ட்டுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அந்த ரீசேர்ட்டுகளில் பெயர்களும், அடையாளங்களும் இடப்பட்டிருந்தன. பெண் போராளிகளுக்கு அவர்கள் அணிந்திருந்த உடையின் மேல் இந்த ரீசேர்ட் அணிவிக்கப்பட்டிருந்தன. இதனால் அவர்கள் பல நிற குட்டைப் பாவாடைகளின் மேல் வெள்ளைநிற ரீசேர்ட்கள் அணிந்திருந்ததைப் போன்று தோன்றியது.
வெள்ளை நிற ரீசேர்ட்டுகளுடன் அவர்கள் பார்வையாளர்கள் கலரியில் அமர்ந்திருந்தமை காட்சிக்கு இருத்தியிருந்ததைப் போல் இருந்தது என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலைப்பட்டனர். முன்னாள் போராளிகள் இவ்வாறு காட்சிப் பொருள்களாக அமர்த்தப்பட்டிருந்ததை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா ஆவேசம் வந்தவர்போல் எழுந்து ஆத்திரத்துடன் கொட்டித் தீர்த்தார்.
"இங்கே என்ன நடக்கின்றது? இங்கே காட்சிப் பொருளாக அழைத்து வரப்பட்டுள்ளவர்கள் எனது சகோதரிகள். கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்கள் குற்றம் இழைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக இவர்களை இப்படி அவமானப்படுத்தக்கூடாது. நாடாளுமன்றத்திற்கும் அழைத்து வந்துவிட்டோம் என்று பெருமைபடக்கூடாது. இது எங்களுக்கு பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது" என்றார் விஜயகலா.
போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீள இணைக்கிறீர்கள் என்று கூறும் அரசு, அவர்களை சாதாரண பெண்களைப் போன்று சிவில் உடையில் அழைத்து வருவதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "திட்டமிட்டே அவர்களை வேறுபடுத்திக் காட்டி அவமானப்படுத்துகின்றார்கள்" என்றும் அவர் கூறினார்.
"முன்னாள் போராளிகளுக்குத் தளபதியாக இருந்தவருக்கு கோட்டைமாட்டிவிட்டு பிரதி அமைச்சராக குந்தவைத்துள்ளீர்கள். அவர் சூடு, சொரணையின்றி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். இதனைப் பார்த்து கண்டித்து வேதனைப்படவேண்டிய இஸ்லாமிய உறுப்பினரோ பாராட்டுகின்றார்.(ஏ.எச்.எம்.அஸ்வர் ஆரம்பத்தில் பாராட்டினார்) இது வேதனைப்படக்கூடிய ஒரு விடயம். இன்று இவர்களை இங்கு அழைத்துவந்து அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று முழங்கினார் விஜயகலா மகேஸ்வரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக