02 டிசம்பர் 2011

இலங்கையில் சர்வாதிகாரம் வளர்ச்சிபெற்று வருகிறது.

25 வருட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக் கூறவேண்டிய தேவை, கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பாய்ர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர் உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கை மனித உரிமை மீறல் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில் வெளிவிவகாரக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சில நாடுகள் சமரசத்தை, புனர்வாழ்வை ஏற்படுத்த 10 வருடங்கள் எடுத்ததாகவும் எனினும் அது நம்பகத்தன்மை அற்றது எனவும் ஜோன் பாய்ர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் போர் குற்றச்சாட்டையும் மறுத்து தமது படையின் மீதான விசாரணையையும் மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போர் தொடர்பில் ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை இலங்கையை மிகவும் ஆழமாக தொந்திரவு செய்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
புலிகளுடனான யுத்தத்தின் போது இடம்பெற்ற போர் குற்றம் குறித்து மேற்குலக நாடுகள் பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
இலங்கையில் யுத்தம் முடிந்து தமிழ் சிறுபான்மையின மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களில் அர்த்தமுள்ள எதனையும் காண முடியவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்கை கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் போது பொது மக்கள் மீது எரிகணைத் தாக்குதல், வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், 2013ம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்போம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பாய்ர்ட் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக