09 டிசம்பர் 2011

சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் அவசியம் இல்லை.

தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழினம் தனித்துவமான இனம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட இறைமையுள்ள பண்டைய இனம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகவே ஜெயானந்தமூர்த்தி தனது கண்டனத்தைத் வெளியிட்டுள்ளார்.
ஜெயானந்தமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழர்கள் சிங்களவர்கள் விரும்புத் தீர்வைப் பெற்றுக் கொள்வதாயின் அதை அரை நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருக்க முடியும். அது எமது நோக்கமல்ல. தனிநாடே எமது இனத்திற்கான ஒரே தீர்வு. அதற்காகவே இன்று நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அதன் வலி எமது இனத்திற்கே தெரியும். அதைவிடுத்து தமது அரசியல் இலாபத்திற்காக தனித்துவமான இனத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன்.
இலங்கயின் வடகிழக்கு அனுராதபுரம், கண்டி உட்பட பெரும்பாலான பகுதிகளை பண்டைய காலம் தொட்டு தமிழர்களே ஆட்சி செய்துவந்தனர். அதிலும் வடகிழக்கு தமிழர்களின் தாயகம். ஆனால் எமது தாயகம் சிங்கள இனத்தினால் சட்டத்திற்கு முரணாக பறிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது.
எனவே தமிழர்களை தமிழர்களே ஆழக்கூடிய தனிநாட்டை கோரும் உரிமை தமிழர்களுக்கு உண்டு. இந்த வரலாற்று உண்மைகளை மறந்துவிட்டு இன்று தமிழினம் சிறுபான்மை இனம், சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே தமிழர்கள் பெறவேண்டும் என்றெல்லாம் கருத்துத் தெரிவிப்பது தமிழினத்தைப் புண்படுத்தும் அதேவேளை சிறுமைப்படுத்தும் செயலாகவும் உள்ளது.
இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தின் சுதந்திரப்போராட்டமே தவிர பயங்கரவாதப் பிரச்சினை இல்லை என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எந்த ஒரு இனத்தின் சுதந்திரப்போராட்டமும் தோற்றதில்லை. சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இறுதியில் அப்போராட்டம் வெற்றி பெற்றதே வரலாறு. அதுபோன்றே எமது சுதந்திரப்போராட்டமான தமிழீழப் போராட்டமும் இன்று சில பின்னடைவுகளைச் சந்தித்து தற்காலிகமாக மௌனித்திருந்தாலும் அது தனது இலக்கை நோக்கி தொடரவே செய்யும் என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாத்திரமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வைப் பெற்றுக்கொள்ளவே தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இக்கருத்தை கூட்டமைப்பின் ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவற்றுக்கொல்லாம் மேலாக திரு.சம்பந்தன் அமெரிக்காவில் வைத்து வடகிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானதல்ல அதை நாம் கேட்கவில்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்களுடன் இவர்கள் சிறிலங்கா அரசுடனோ அல்லது சர்வதேச மட்டத்திலோ தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேச்சு நடத்த முற்படுவார்களானால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி நேரிடும்.
தமிழ் மக்கள் தனியான தமிழீழத்திற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது. அது தமிழர்களின் இலட்சிய அவா. அந்த இலட்சியத்தைக் குழிதோண்டிப் புதைத்து அதன் மேல் நடக்க முற்பட்டால் அதற்கான தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்கியே தீர்வார்கள். என்பதையும் இக்கட்டத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
புலம் பெயர் மக்கள் ஒரே கொள்கையுடனும் உறுதியுடனும் தமிழீழம் என்ற இலட்சியத்தை நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இலங்கையின் மனித உரிமை மீறல், இனப்படுகொலை என்பனவற்றை சர்வதேசத்திற்கு முன் கொண்டுவரும் இக்கால கட்டத்தில் தமது அரசியல் நோக்கத்திற்காக இலங்கை அரசைக் காப்பாற்றும் நோக்கில் இவர்கள் செயற்படுவதையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜெயானந்தமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக