22 டிசம்பர் 2011

காணி,காவல்துறை அதிகாரமற்ற தீர்வு தேவையில்லை"சுரேஷ் பிரேமச்சந்திரன்.

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புமானால் அப்படியானதொரு தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து ´அத தெரண தமிழிணையம்´ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவியது, இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்று பேச்சுவார்த்தை நடத்துவதானால் அது பயனளிக்காது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசு ஒன்றுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தேவைகளாகும்.
காணி அதிகாரம் இல்லாவிட்டால் மாகாணத்திற்குள் அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது. ஆடு, மாடுகளை வளர்க்க முடியாது. விவசாயம் செய்ய முடியாது. மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்க முடியாது. அதேபோன்று பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டார் மாகாணத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
எனவே இவைகள் இல்லாத ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ம் திருத்தத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை அரசு வழங்க மறுத்தால் 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளியுள்ளதாக அர்த்தம்.
இப்படியிருக்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று ´13 + +´ என்ற தீர்வை முன்வைக்கவுள்ளதாக அரசாங்கம் உலக நாடுகளுக்கு கூறிவருவது எவ்வாறு? என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக