23 டிசம்பர் 2011

மகிந்தவுடன் விருந்துண்டு மகிழ்ந்தார் சம்பந்தன்!

வரவு செலவுத்திட்ட வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நிறைவு பெற்ற பின்னர் நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற சம்பிரதாய பூர்வ விருந்துபசாரத்தில் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளுங்கட்சி எதிர்ச்கட்சி உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்தனர். இவ் விருந்துபசாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டு மகிந்தவுடன் உணவுண்டு மகிழ்ந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு முடிந்த பின்னர், சபாநாயகர் அவர்களால் விருந்துபசாரம் வழங்கப்படுவது வழமையாகும். இக் குறித்த சம்பிரதாய பூர்வ நிகழ்விற்கு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு வழங்கப்பட்டது. குறித்த நாளில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த வடகிழக்கிலிருந்து இராணுவ முகாங்கள் எக்காரணங் கொண்டும் அகற்ற முடியாது எனவும், காணி அதிகாரங்களோ பொலிஸ் அதிகாரங்களோ வழங்கப்படமாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இராப் போசனத்தில் கலந்து கொள்வது குறித்து சிந்திக்கவில்லை.
குறித்த இராப்போசனத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சக உறுப்பினர்களைக் கேட்ட போது, பாராளுமன்றில் நடைபெற்ற சம்பவத்தினைச் சுட்டிக்காட்டி நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்ற விடயம் எனத் தெரிவித்திருக்கின்றனர். இது இவ்வாறு இருக்க கூட்டமைப்பின் சம்பந்தன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மகிந்தவுடன் உணவுண்டு மகிழ்ந்தள்ளார்.
தமிழ் மக்களோடும், பத்திரிகைகளோடும் உரையாடும் போது தான் ஒரு தேசியவாதியாகக் காட்டிக் கொள்ளும் சம்பந்தன், மறுபுறத்தில் அரசுடனும் மகிந்தவுடனும் கைகோர்த்துச் செயற்படுவது தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக