30 நவம்பர் 2012

புலனாய்வுப்பிரிவினரால் மன உளைச்சல் அடைந்துள்ளதாக சிறீதரன் தெரிவித்துள்ளார்!

குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையால் எனக்கு கொலை அச்சுறுத்தல் - சிறிதரன் எம்பிகுற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை அடிக்கடி அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதை தனக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தலாக தான் கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (30) ஆற்றிய விசேட உரையில் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
´குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தொடர் விசாரணையால் நான் மன உளைச்சலுக்கு  உள்ளாகியுள்ளேன். எமது மனைவி பிள்ளைகளும் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனது மக்களுக்கு பயமின்றி சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு உரிமை உள்ளது. ஆனால் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் மூலம் அதற்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் எமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படுகிறது. இது குறித்து கவனம் செலுத்துமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.
இங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரச்சினை பெரிதாகியுள்ளதென தெரிவித்தார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மிரட்டல்; வைத்தியசாலை விடுதியை விட்டு ஓடினர்!

இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களை, புலனாய்வாளர்கள் மிரட்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என உதயன் இணையம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து அடிதடி நடத்திக் கலைத்தனர். இதன்போது மாணவர்கள், மாணவிகள் பலர் இராணுவத்தினரால் கலைத்துக்கலைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்.
இதில் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவ, மாணவியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நேற்றுமுன்தினம் மாலையே இவர்கள் வைத்தியசாலையின் 24ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த மூன்றுபேர் தம்மைப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்து கொண்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர்களை மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
"நீங்கள் பொலிஸ் வந்து கேட்டால் எங்களுக்கு எதிராகத்தான் றிப்போர்ட் கொடுப்பீர்கள். அப்படிக் கொடுத்தால் நீங்கள் வெளியே நடமாட முடியாது  கவனம்.' என்று கூறி மிரட்டிய புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் மாணவர்களுடனேயே நின்றுள்ளனர்.
மாணவர்கள் வைத்திய பரிசோதனை முடிந்த பின்னர், பொலிஸாரிடம் பதிவு செய்வதற்காகக் காத்திருந்தனர். பொலிஸாரும் இரவு 8 மணிக்கு வருவதாக முதலில் தெரிவித்துவிட்டு பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை.
வாக்குமூலம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் மாணவர்களை மிரட்டியதால், மாணவர்கள் வைத்தியசாலைக்குத் தெரிவிக்காமல் இரவு 10:30 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருடன் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் உதயன் குறிப்பிட்டுள்ளது.

29 நவம்பர் 2012

பங்கு போட்டுக்கொள்ள பண்டமல்ல,விடுதலை வேட்கையின் வீரியமே மாவீரர்!

தமிழரின் தாயக விடுதலைக்கான பயணமானது புதிய உலக ஒழுங்குக்கு அமைய வடிவங்களை மாற்றியமைத்து நெறி பிறழாது இலக்கு நோக்கி பயணிக்கவேண்டிய இன்றைய சூழலில், எதிரியானவன் எம்மையும் எமது இலட்சியத்தையும் பலவீனப்படுத்துவதற்கு மிகத்துல்லியமான செயல்திறன் வாய்ந்த உத்திகளை பயன்படுத்துகின்றான்.
இவற்றை புரியாது எம்மில் பலர் அவனது செயற்பாட்டிற்கு துணை போவது மிகவும் வருந்தத்தக்கது. இந்நிலை மாறி காத்திரமான கருத்துருவாக்கம் ஒன்று ஏற்பட வேண்டுமென்ற வேணவாவில் இப்பத்தி பிரசுரமாகின்றது.
எதிரிகளை அழிப்பதற்கு சாம, தான, பேத, தண்டம் என நான்கு வழிமுறைகள் உன்ளன. சிறிலங்கா அரசு இதில் கடைசி இரண்டையும் மிக நேர்த்தியாகக் கையாண்டு வருகிறது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்று கூறும் விதத்தில் பரிதியின் (ரீகன்) படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப்படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட அரசு சார்பான ஊடகங்கள் புலிகளின் இரு பிரிவினருக்கிடையிலான மோதலே இது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டன.
உள்நாட்டில் இடம்பெற்ற நீதி அமைச்சின் செயலாளர் மீதான தாக்குதல், லலித் – குகன் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் கடத்தல், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார், மற்றும் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல்கள், உள்ளூராட்சி சபைக்கான புதிய கட்டட மாற்றம், சொந்தக் காணியில் மீண்டும் மீளக் குடியமரக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டோர் மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவங்கள் எல்லாவற்றையும் இனந்தெரியாதோரே மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட இவ் ஊடகங்கள் பிரான்ஸில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மட்டும் குற்றவாளிகள் இன்னார் என குறிப்பிட முடிந்தது எவ்வாறு?
0இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே மித்ர பேத வழிமுறையை அரசு மேற் கொண்டு வருகிறது. 1986 – 1987 காலப்பகுதியில் ” தமிழீழத்தின் குரல் ” என்ற வானொலி மூலம் இயக்கங்களுக்கிடையே பரஸ்பரம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
இதன் மூலம் போராட்டம் மீதான சலிப்பை ஏற்படுத்தி கணிசமானோரை போராட்ட அரங்கிலிருந்து வெளியேறும் சூழலை உருவாக்கியது. வடமராச்சியில் மேற்கொள்ளப்பட்ட ” ஒப்பரேசன் லிபரேசன் ” நடவடிக்கையின் போது மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அதே வானொலி அறிவுறித்தியபோதுதான் அதனை இனங்கண்டனர் எம் மக்கள்.
இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்திலும் இதே வழிமுறையில்தான் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியின் இல்லத்தில் ஈ .என் .டி.எல் .எப் வினராலும், யாழ் அசோகா ஹோட்டலில் தற்போதைய யாழ் எம் . பி சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலும், மட்டுநகரில் வாவிக்கரை சாலையில் தற்போது தமிழ்தேசியத் கூட்டமைப்பின் பணிமனையாக இயங்கிவரும் இல்லத்தில் தற்போது மாகாணசபை உறுப்பினராக விளங்கும் இரா .துரைரத்தினம் தலைமையிலும் ஈ . பி .ஆர் .எல் .எப் வினரால் தமிழரின் உயிர்கள் பலியிடப்பட்டன.
1990 யில் ராஸிக் குழு, பிளாட் போன்றவையும் தொடர்ந்து கப்பம் கோரி பிள்ளையொன்றைக் கடத்திய வழக்கில் மதுரைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டக்ளஸ் குழுவினரும் தமிழினப் படுகொலைக்கென்றே களமிறக்கப்பட்டனர்.
மட்டக்களப்பை பொறுத்தவரை சத்துருக்கொண்டான் படுகொலை, பண்டாரியா வெளியில் கப்டன். லக்ஸ்மனை கழுத்து வெட்டி படுகொலை செய்தமை ஆரையம்பதியில் திருமதி.பூரணலச்சுமி சின்னத்துரை, வர்த்தகர் தம்பிராசா, அவரது மகன் குருகுலசிங்கம், மகள் மலர் உட்பட எழுவரின் படுகொலைகள் போன்றவற்றுக்கு டெலோவின் உதவியை நாடியது அரசு அதேபோல வவுனியாவில் புளொட்டின் மலர்மாளிகை படுகொலைகள் பிரசித்தம்.
இதன் பின்னர் சமாதான காலத்தில் பேச்சுவார்த்தைக்கென வெளிநாடு சென்ற கருணாவுக்கு திறமையான முறையில் வலை விரித்தது அரசு ” உங்களைப்போல ஒரு தளபதி எங்களோடுடிருந்தால் எங்களது இராணுவம் எங்கேயோ போயிருந்திருக்கும்” என்று குழையடித்ததில் ஆள் விழுந்து தான் போனார்.
பிரபாகரன் தான் ஒன்று. நாங்கள் எல்லோரும் சைபர்கள் இந்த சைபர்கள் ஒன்றுக்கு பின்னால் இருந்தால்தான் அவற்றுக்கு பெறுமதி ஒன்றுக்கு முன்னால் எத்தனை சைபர்கள் போட்டாலும் வேலையில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செய்த கூத்துகள் பகிரங்கமானவையே.
பின்னர் கோடரிக்காம்பாகி அவர் தமிழின அழிப்புக்குத் துணைபோனதும் எவரும் மறக்க முடியாதவை. வட கிழக்கு உட்பட அனைத்துத் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவராக பிரபாகரன் விளங்கினார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். இன்று இரண்டுமே வெறுமை நிலையில், எனினும் மாவீரர்களின் தியாகங்களை கௌரவப்படுத்தலாவது எஞ்சியிருக்கவேண்டும் என மாவீரர்களின் பெற்றோராகிய நாம் எதிர் பார்க்கிறோம்.
பிரான்சைப் பொறுத்தவரை ஏற்கெனவே நாதன், கஜன் ஆகியோரைப் பலியெடுத்தது சிறிலங்கா அரசு. ஏவியது அரசு என்றாலும் அதில் அம்பாக இருந்தது தமிழ்க் கரங்களே. இப்போதும் அதே மண்ணில் பருதியின் படுகொலை நிகழ்ந்துள்ளது.
1983 ஆண்டு முதல் விடுதலைக்காக இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. குறிப்பாக மன்னார் மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் நிறைந்தவர் இவர். நாயாற்று வெளியில் விக்ரரை இலக்கு வைத்துக் காத்திருந்தது சிறிலங்கா இராணுவம் வழமையாக ஜீப்பின் முன் பக்கம் இருந்து பயணம் செய்யும் அவர் அன்று முன்சென்ற மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.
பதுங்கியிருந்த இராணுவத்தை அவர் கடந்து சென்றார். பின்னால் வந்த ஜீப்பின் மீது படையினர் தாக்குதல் நடத்தினர். விக்டர் வழமையாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருந்த ரோஸ்மன் என்ற போராளி வீரச்சாவை எய்தினார். தொடர்ந்து மோதல் ஆரம்பமானது, அச் சமயம் ரீகன் மடுவில் தனது அணியினருடன் தங்கியிருந்தார். சண்டை ஆரம்பமானதை அறிந்த அவர் தனது அணியினருடன் ஓட்டமாகவே விரைந்தார்.
துப்பாக்கிகள் குண்டுகளுடன் சுமார் 25 கிலோ மீற்றர் ஓடி வருவதென்றால் இலேசான விடயமா ? இவர்கள் வந்து சேர்வதற்கிடையில் படையினர் ஓட ஓட விரட்டப் பட்டுவிட்டனர். ஆயினும் எமது ஒரு அணிக்கு ஆபத்து என்றால் அடுத்த அணி துடித்த அந்த காலங்கள் என்றும் உணர்வு பூர்வமானவை. இன்று ரீகனை படுகொலை செய்தது எமது பொது எதிரியே. ஆனால் அதனை எம்மில் ஒரு பகுதியினர் மீது பழிபோட்டு தமிழரைக் கூறுபடுத்த முனையும் சிறிலங்கா அரசின் முயற்சிக்கு நாம் பலியாகக் கூடாது.
எமது மாவீரர் பட்டியலின் இறுதிப்பெயராக ரீகனின் நாமமே இருக்கட்டும். பிள்ளைகளும் இழந்தவர்கள் என்ற வகையில் வகையில் மாவீரரின் பெற்றோராகிய எமது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென புலம்பெயர் தமிழர்களை வேண்டுகின்றோம்.
தமிழன் ஓரணியாக நின்று மாவீரர்களை போற்றினான் என்ற நிலை மீண்டும் உருவாக வேண்டும் இரத்தமும் சதையுமாக நடைபெற்ற இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் எமது பிள்ளைகளின் தியாகங்கள் அர்த்தமற்றுப் போய் விடக்கூடாது. அதனைப் பெறுமதியாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.
எங்கள் பிள்ளைகள் களத்தில் போராடும் போது இவ்வாறு பிரிந்து நின்று மாவீரர் நாளை அனுஷ்டிப்பீர்கள் என எண்ணவில்லை. இழந்த எம் பிள்ளைகளின் பெயரால் கேட்கிறோம், சுடரேற்றும்போது அருகருகே நின்ற மாவீரர் குடும்பங்களைப் பங்கு போடாதீர்கள்.
போராட்டத்தை நேசிக்கும் நடுநிலையாளர்கள் மாவீரர் நாளைப் பொறுப்பெடுக்கவேண்டும். இதற்கான முயற்சிகளை காசி ஆனந்தன், நெடுமாறன், திருமதி அடல் பாலசிங்கம் போன்றோர் முன்னெடுக்க வேண்டும். இந்த மாவீரர் நாளில் அது முடியாமல் போனாலும் அடுத்த நாளிலிருந்து இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படவேண்டும்.
2013 ஆண்டு மாவீரர் நாளாவது பழையபடி ஒரே இலக்குடன் நடைபெறட்டும். அதுதான் நீங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் கௌரவம். அந்த வகையில் மாவீரர் நாள் உறுதியெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.

தாயாக விடிவிற்காய் தமது உடல் பொருள் ஆன்மா என அத்தனையும் ஆகுதியாக்கிய மான மறவர்களின் பெற்றோர் உரித்துடையோர் சார்பாக தயாளன்.

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!

News Serviceயாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளது.
கடந்த நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும். இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.
பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்" என்று தெரிவித்துள்ளது அமெரிக்க தூதரகம்.

யாழ்,பல்கலைக்கழகத்தினுள் மீண்டும் புலிகள் என்கிறது திவயின!

newsயாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் விடுதலைப்புலிகளின் குழுக்கள் தோன்றியிருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி ஆகிய விடுதிகளில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தது புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினர் குறித்த விடுதிகளை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் புலிகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் நபர்கள் இராணுவ விசாரணைகளை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
அங்கு நடந்த சகல சம்பவங்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள கணனி மூலம் புலிகளின் அணியொன்று வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் திவயின கூறியுள்ளது.

28 நவம்பர் 2012

மாணவர்கள் மீது சிங்களப்படை தாக்குதல்!

நேற்று இராணுவத்தினர் யாழ். பல்லலைக்கழக பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை மாணவர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் தாக்கியும் உள்ளனர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் மாணவர்களில் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாவீரர் தினத்தை யாழ்.பல்கலைக்களக மாணவர்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அனுஷ்டித்த நிலையில் அவர்களை பழிவாங்கும் நோக்குடன் இராணுவத்தினரும்,பொலிஸாரும் இன்று இவ்வாறு நடந்துகொண்டுள்ளனளர்.

'புலி'யூரில் நடந்த மாவீரர் நாள்!

விடுதலை புலிகளின் முதல் வீர மரணப் போராளி சங்கர்... அவர் வீர மரணமடைந்த நாளான நவ 27ம் தேதியே 1989 இல் இருந்து மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.....சேலம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி என்ற பகுதியில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது...
'இங்கு எங்க கிராமத்தில் விடுதலை புலிகள் 80களில் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் பயிற்சி செய்து சென்றுள்ளனர்... அவர்கள் பயிற்சி செய்த தடயங்கள் இன்றும் உள்ளன. இங்கு தலைவர் பிரபாகரனும் வந்துள்ளார்..... அப்பொழுது இங்கு தளபதி பொன்னம்மான் மக்களோடு மக்களாக நெருங்கி பழகினார் அவர் மட்டுமல்ல பயிற்சி செய்த அனைத்து புலிகளும் மக்கள் பிரச்சனையை என்றால் ஓடோடி வந்து உதவுவர்... எங்கள் குடும்ப உறுப்பினர் போல இருப்பார்கள். அவர்களை பொடியன்கள் என்று தான் அழைப்பார்கள்... மூர்த்தி சிறுசு ஆனா கீர்த்தி பெருசு என்பது போல அவர்கள் செயல்கள் தீரம் மிக்கதா இருக்கும்...அங்கே நாட்டுல நடந்த ஒரு சமரில் தளபதி பொன்னம்மான் வீர மரணம் அடைய அது எங்களால் தாங்க முடியவில்லை....அப்பொழுதே கிட்டத்தட்ட 5000 பேர்களுக்கு மேல் ஊர்வலமாக மேட்டூர் வரை சென்று எங்கள் வீர வணக்கம் செலுத்தினோம் அவரோட நினைவா இங்க அவருக்கு நினைவு மண்டபம் கட்டி, நவ 27 அன்று, அவர் உட்பட மாவீரர்கள் அனைவருக்கும் நாங்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம் இங்க புலிகள் பயிற்சி செய்ததால புலிகள் ஊர் என சொல்லி சொல்லி மருவி புலியூர் என்றே பெயர் பெற்றுவிட்டது எங்கள் கிராமம்...அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு 'புலி'யூர் உள்ளதே என்று எங்களுக்கு பெருமையே' என்றார் தி.வி.க தோழர் சூர்யா பிரகாஷ்...மற்றும் அங்கு திரண்ட கருப்பு சட்டையினரும்...
வழக்கமாக மாவீரர் நாள் அன்று ஈழத்தில் மாலை 6.05 மணிக்கு பிரபாகரன் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்வார் பின் உரையாற்றுவார் . 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் ஈழத்தில் மாவீரர்கள் தின உரையாற்றினார் அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் அவர் நவ 27 இல் உரையாற்றுவார் என ஈழ,சர்வதேச தமிழர்கள் எதிர்பார்பதை போல புலியூர் மக்களும் எதிர்பார்த்தே பொன்னம்மான் நினைவு மண்டபம் வந்தனர் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர்... பல குழந்தைகள் பெண் சிறுமிகளே.......
எங்க பிரபாகரன் மாமா சொல்லியிருக்காரு அதனால தான் நாங்க இங்க வர்றோம் அப்பா அம்மா கூட வந்துருக்கோமே...' என்றார் குட்டி பாப்பா யாழினி......
அதன் பின் அங்கே ஈழ பாடல்கள் ஒலிக்கப்பட ,நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது...
புலியூரில் நடந்த மாவீரர்கள் தின வீர வணக்க நிகழ்வு வீரத்தை நெஞ்சில் விதைத்தது.....

நன்றி:நக்கீரன் 

27 நவம்பர் 2012

மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம்!

தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரா் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரா்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினா் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.
எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரா் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.
பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாங்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர்.
பெண்கள் விடுதியினுள் நுழைந்த படையினர் கையில் அகப்பட்டதையெல்லாம் அடித்து உடைத்துள்ளனர். மாணவிகளின் மூடிய அறைகள் தட்டப்பட்டுள்ளன. திறந்திருந்த அறைகளுக்கெல்லாம் அத்துமீறி நுழைந்துள்ளனர். அச்சமுற்ற பிள்ளைகள் கூக்குரலிட்டு ஓலமிட்டுள்ளனர். விடுதியெங்கும் பதற்றமாக இருக்கும் அதே வேளை மாணவிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். பல மாணவிகள் நீண்ட நேரமாக அழுகையை நிறுத்தாமல் அழுத வண்ணமிருப்பதாகவும், அதிர்சியுற்ற மாணவி ஒருவர் இதுவரை மயக்கத்திலிருந்து மீளவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.
இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.
பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

நன்றி:உதயன் 

தீபங்களை சப்பாத்துக் காலால் மிதித்த சிங்களப்படைகள்!

கிளிநொச்சியின் கிராமங்கள் பலவற்றில் மக்கள் தமது சமய அனுஸ்டானங்களின் படி இன்றைய கார்த்திகை தீபத் திருநாள் நிகழ்வுகளை அனுஸ்டித்துள்ளனர். அதன்படி வீடுகளின் முற்றங்கள் சுற்றுப் புறங்களில் வழக்கம் போல் தீபங்கள் ஏற்றி இருந்தனர். இதனை பொறுக்க முடியாத இலங்கைப் படையினரும் புலனாய்வாளர்களும் சிவில் உடையில் துப்பாக்கிகள் சகிதம் சென்று மக்களை கடுமையாக மிரட்டியதுடன் சப்பாத்துக் கால்களால் தீபங்களை உதைந்து தள்ளியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக செல்வாநகர் புதுமுறிப்பு கிராமங்களுக்கு அருகிலேயே – கிளிநொச்சி மாவட்டத்திற்கு உரிய புலிகளின் துயிலும் இல்லம் அமையப்பெற்றிருந்ததால் வழமைக்கு மாறாக இந்தப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
விசேடமாக செல்வாநகர், புதுமுறிப்பு, உதயநகர், டிப்போ வீதியின் இரு மருங்கு ஜெயந்தி நகர் உள்ளிட்ட கிராமப்புறங்களை இலக்கு வைத்த படையினர் அப்பகுதிகளில் ஏற்றப்பட்ட அனைத்து கார்த்திகை தீபங்களையும் துவம்சம் செய்ததாக கிராமப்புற மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாவீரர் நாள்!

இன்று மாவீரர் நாள்.தமிழீழ இலட்சியத்திற்காய் தலைவன் வழியிலே நின்று களமாடி தம் இன்னுயிர்களை ஈகம் செய்த தேசப்புதல்வர்களை கெளரவிக்கும் புனித நாள்.இந்த நாள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை வீறு கொண்டு எழ வைக்கும் புரட்சிகர நாள்.மண்ணையும்,மக்களையும்,மொழியையும் நேசித்து சாவை துச்சமென மதித்து போராடி வீழ்ந்த தேசிய வீரர்களின் நாள் இந்த மாவீரர் நாள்.இன்றைய நாளிலே தளபதிகள்,போராளிகள்,பொதுமக்கள் என அனைவருக்கும் தீபமேற்றி வீரவணக்கம் செலுத்துவதுடன்,எம் தலைவன் வழியிலே தொடர்ந்து பயணிப்போம் என உறுதி பூண்டுகொள்வோம்.
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்.

ராஜீவ் காந்தியை இறுதிவரை புரிந்துகொள்ள முடியவில்லை-ராம் ஜெத்மலானி

புதுடெல்லியில் நடந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பேசியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசு விருந்தினராக புதுடெல்லிக்கு வரவழைத்தார். அவருக்கு பொருளாதார உதவிகளை செய்தார். அதே சமயம், விருந்தினராக வரவழைத்து, எல்லா உதவிகளையும் செய்வோம் என்று நாம் உறுதியளித்ததற்கு மாறாக, தமிழர்களுக்காக போராடியவர்களை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தையும் அனுப்பிவைத்தோம். இது துரோகச் செயலாகும். இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நடத்தையை என்னால் இன்று வரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.
இவ்விழாவில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? இலங்கை போரின் போது இந்திய இராணுவம் இலங்கை அரசுக்கு செய்த இராணுவ உதவிகள் என்ன? என்று விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி சென்ற முறை இந்தியா வந்த போது ம.தி.மு.க. தொண்டர்களுடன் அதை எதிர்த்து போராடினேன் மீண்டும் ஒருமுறை அவர் இந்தியா வந்தால் பிரதமர் வீட்டின் முன் போராட்டம் நடத்துவேன் என்றார்.

26 நவம்பர் 2012

மாவீரர் வாரத்தில் திருமலையில் புலி ஆதரவுச் சுவரொட்டிகள்! படையினர் அகற்றினர்!!

மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக திருமலையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பாதுகாப்புப் படையினர் அகற்றியுள்ளனர்.
திருகோணமலை, உப்புவெளி ஆகிய இரு இடங்களில் இனந்தெரியாதோரால் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளையே பாதுகாப்புப் படையினர் இன்று திங்கட்கிழமை காலை அகற்றியுள்ளனர்.
தமிழீழ மாவீரர் தினம் நாளை செவ்வாய்க்கிழமை நினைவு கூறவுள்ளதை முன்னிட்டே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பல பகுதிகளில் மாவீர்களை நினைவுகூரும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்றை அகற்றிய படையினர் கண்காணிப்பைப் பலப்படுதியுள்ளனர்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை!

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை – பிரதம நீதியரசர்பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என பிரதம நீதிரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல்வாதிகள் தம்மை விசாரணைக்கு உட்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறியடித்து விசாரணைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விசாரணை நடாத்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சார்பற்ற சுயாதீனமான தரப்பினரிடம் இந்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதி விசாரணை நடாத்தும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அச்சமின்றி விளக்கமளிக்கப் போவதாக பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சனைக்கான தீர்வு; ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில் விசேட குழு!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது இலங்கை விவகாரங்களை கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிகளே கையாண்டு வந்த போதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களை கையாளவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும் போது இராஜாங்கத்திணைக்களத்தின் உயர் மட்டப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ள வேளையில் ஆசிய விவகாரங்களை கையாள்வதில் அனுபவமுடையவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே சமயம், அமெரிக்க அரசின் புதிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசும் இராஜாந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வருவதாக அறிய முடிகிறது.
தமிழர் பிரச்சனைக்கான தீர்வில் அமெரிக்க அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொண்டு அக்கறையாகச் செயற்பட இலங்கை அரசு தான் காரணம். அதற்காக இலங்கை அரசுக்கு தாம் நன்றி சொல்ல வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைத் தீர்வில் அமெரிக்கா எமக்கு ஆதரவாக செயற்படும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், அரசின் ஏமாற்றுப் போக்கை இன்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன எனவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

25 நவம்பர் 2012

மஹிந்த மலேசியா செல்லமாட்டார்!

மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவிற்கான விஜயத்தை தவிர்த்துக் கொண்டுள்ளார்.
இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
தவிர்க்கமுடியாத காரணம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள மாட்டார் என மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை மலேசியாவில் இஸ்லாமிய பொருளாதார மன்ற ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செல்லவிருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

24 நவம்பர் 2012

மக்கள் விடுதலை இயக்கமே புலிகள் இயக்கம்-ராஜ்கிரண்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு மக்கள் விடுதலை இயக்கம் என உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என “ராஜீவ் படுகொலை – தூக்குக்கயிற்றில் நிஜம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்..
காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதியுள்ள “ராஜீவ் படுகொலை – தூக்குக்கயிற்றில் நிஜம்” நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை 6 மணியளவில் சென்னை தியாகராய நகர், சர்.பி.டி தியாகராயர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரபல நடிகர் ராஜ்கிரண் முன்னிலை வகித்தார். இந்நூலின் பதிப்பாளர் பேட்ரிசியா, பதிப்பகத்தின் உரிமையாளர் ஆபிரகாம் செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் புலவர் புலமைப்பித்தன் தலைமையுரையாற்ற, பழ.நெடுமாறன் அவர்கள் நூலினை வெளியிட்டு, உரையாற்ற தியாகி கோவிந்தராசு, ஈழத்துக்காந்தி டேவிட் அய்யா ஆகியோர் நூலினை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து இயக்குநர் புகழேந்தி, ஓவியர் புகழேந்தி, வழக்கறிஞர் புகழேந்தி, நடிகர் இராஜ்கிரண், தோழர் டி.எசு.எசு.மணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் உரையாற்றினர்.
நடிகர் ராஜ்கிரண் உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மீண்டுமொரு தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா!

அடுத்த வருடம் மார்ச் மாதம் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றொரு முக்கிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சமூகத்திற்கு கடந்த கூட்டத் தொடரில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் விடயத்தில் இலங்கை அரசு அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதன் காரணமாகவே அமெரிக்கா மீண்டும் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்காகத் தனது ராஜதந்திரிகளை உஷார்ப்படுத்தியுள்ள வோஷிங்டன், நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அமெரிக்காவின் புதிய பிரேரணை மனித உரிமைகள் சபையில் நிறைவேறினால் அதனை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை 24 நாடுகள் ஆதரித்தன. கடுமையான ராஜதந்திர சமருக்கு மத்தியிலேயே அதை அமெரிக்கா நிறைவேற்றியது.
சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்குப் பக்கபலமாக இருந்து அந்தப் பிரேரணையை எதிர்த்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பிரேரணையை 15 நாடுகள் எதிர்த்தன.
இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை இலங்கை பெறவேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தியது.
ஜெனிவாத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்கள் கடந்த நிலையில், ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு கரிசனை காட்டவில்லை என்றும் அது மனித உரிமைகளுக்கோ கடந்த கால சம்பவங்களுக்கோ பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறது என்றும் அமெரிக்கா கருதுகின்றது. இதனாலேயே மற்றுமொரு பிரேரணையைக் கொண்டுவர அது முடிவு செய்துள்ளது.

23 நவம்பர் 2012

அமைதிபேச்சு வார்த்தைதான் இனப்படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது!

போர் என்பது அமைதிபேச்சு வார்தை முறிந்ததால் வந்த ஒன்று அமைதிபேச்சுவார்த்தையும் அதில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் பன்னாடுகள் காக்கதவறியதால் வந்தது போர்.பன்னாட்டு தலையீடு இல்லை என்றால் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்காது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தமிழர்களை காப்பதற்கு என்று ஒருகாவல் அணிஇருந்தது ஒருபடை இருந்தது அதுஇருந்திருக்கும் இந்த இனப்படுகொலை என்பது இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது அமைதி ஒப்பந்தம் என்பது இந்த இனப்படுகொலை செய்வதற்கான முகாந்தரமாகத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.
ஏன் என்றால் உன்னை நம்பி வருகிறேன் உனக்காக சில மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கிறேன் என் எதிரியுடன் சமரசத்தை மேற்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு சமாதானத்தில் இருக்கும் காலகட்டத்தில் உன் எதிரியை நீ பலப்படுத்தி என்னை பலவீனப்படுத்தி எதிரி என்னை தாக்கும் போது நீ பாத்துக்கொண்டு சும்மாய் இருப்பாய் என்றால் இந்த இனப்படுகொலை என்பது திட்டமிட்ட ஒன்று இதைத்தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு கருத்துக்களிலும் முன்வைக்கின்றோம் என்றும் திருமுருகன் தெரிவித்துள்ளார். நாகரீகம் அடைந்த இந்த உலக்தில் ஒரு இனம் இனப்படுகொலையினை சந்திக்கின்றது என்றால் இது திட்டமிடப்பட்ட ஒன்று அமைதி ஒப்பத்தத்தின் முடிவுதான் போர் என்றால் அமைதி ஒப்பந்தந்தான் இனப்படுகொலை.

13 நவம்பர் 2012

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடிமயர்த்த நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகிறது. இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் பிள்ளையான் குழுவும் இதனை செயற்படுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 75வீதம் தமிழர்களும், 24வீதம் முஸ்லீம்களும் ஒரு வீதம் சிங்களவர்களும் உள்ளனர். இதனை மாற்றியமைத்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் இணைந்தால் பெரும்பான்மையாக வரும் வகையில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை மட்டக்களப்பில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக 6ஆயிரம் சிங்கள ஊர்காவல்படையினருக்கு மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை பிள்ளையான் முதலமைச்சராக இருந்த நேரத்தில் கிழக்கு மாகாணசபையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண காணி விவசாய அமைச்சராக இருந்த பிள்ளையான்குழுவை சேர்ந்த நவரத்தினராசா என்பவரே இதற்கான சகல உதவிகளையும் வழங்கியிருந்தார். சிங்கள ஊர்காவல்படையினரை மட்டக்களப்பில் குடியேற்றுவதற்கு உதவியளித்ததற்கு பிரதி உபகாரமாகவே கிழக்கு மாகாணசபையில் மகிந்த ராசபக்சவினால் அவர் நியமன உறுப்பினராக இம்முறை நியமிக்கப்பட்டார்.
தற்போது மட்டக்களப்பு கரையோரப்பகுதியில் பாசிக்குடாவிலும், சவுக்கடியிலும் 5ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தியத்தகண்டிய பகுதியிலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஏறாவூர்பற்று, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுக்குள் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளராக சிங்களவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்திட்டம் பூர்த்தியடைந்தால் கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கமாட்டார்கள்.

கேர்ணல் றீகன் கொலை தொடர்பில் இருவர் கைது!

News Serviceகடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ் - தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறிலங்காவினை அடையாளமாக் கொண்ட இருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரென்சு குற்றத்தடுப்புக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என குற்றத்தடுப்பு நீதித்துறையினரை மேற்கொள்காட்டி பிரென்சு ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகல் முதலாம் நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் நபர் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 33 வயதினைக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபர்களை மையமாக கொண்டு படுகொலையின் பின்னணி குறித்த விசாரணைகளை குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அடிப்படை மனிதவுரிமைகள்,அரசியல் சனநாயக உரிமைகளைப் பேணும் ஜரோப்பிய நாடொன்றில் தனிமனிதப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்மை, பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வினை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்ற நிலையில் உரிய விசாரணையொன்றினை நடத்தி குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-பிரதிநிதிகள் பிரென்சு அரசுத்தலைவர் -தலைமை அமைச்சர் - உள்துறை அமைச்சர் வெளிவிவாரத்துறை அமைச்சர் உட்பட பிரென்சு உயர்நீதித்துறையினை நோக்கி அவசர கோரிக்கையொன்றினை கடிதமூலம் அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

12 நவம்பர் 2012

வாக்குமூலம் பெற வருமாறு அழைத்துக் கொல்லப்பட்ட கைதிகள்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

welikkada_violence_003இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தாய் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.
சிறைச்சாலை கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்குப் பின்னரும் தமது மகன் தம்மோடு தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தமக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
தனது மகனுடன் அதே சிறைக்கூடத்தில் இருந்த மற்றக் கைதிகளும் தமது குடும்பங்களுடன் அதிகாலை 4 மணிவரை தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கூடத்துக்குள் பாதுகாப்பாக இருந்த கைதிகள் அதிகாலை 4 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடனேயே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
இதேவேளை, மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 27 கைதிகளில் சில கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
இரவு 12 மணிக்குப் பின்னரும் துப்பாக்கிகளுடன் இருந்த கைதிகளுடன் மோதல்கள் தொடர்ந்ததாகவும் காலை 4 மணிக்குப் பின்னரே நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே கூறினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுத்து தொடர்ந்தும் மோதலில் ஈடுபட்ட கைதிகளே இராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆயுதமோதலின் போது சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ அணியினர் தற்பாதுகாப்பு என்பதையும் தாண்டி செயற்பட்டுள்ளதாகவும் அரசு இவ்வாறான அசம்பாவிதங்களின் போது இராணுவ உபாயங்களையே கையாள்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சிறை வன்முறை குறித்து பாராளுமன்ற மட்டத்திலான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய புலிகளினால் அச்சுறுத்தல் என்கிறது பாதுகாப்பு அமைச்சு!

ஐரோப்பாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு தரப்புக்களினால் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பரிதி எனப்படும் நடராஜா மதீந்திரன் பரிசில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிதி தரப்பினருக்கும், ஏனைய தரப்பினருக்கும் இடையிலான உட்பூசலே இந்த மரணத்திற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தின நிகழ்வுகளை பரிசில் நடத்துவது தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இந்தக் கொலைக்கான காரணம் என சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளை பொதுவானதாக நடாத்த ருத்ரகுமாரன் தரப்பினரும், நெடியவன் தரப்பினரும் இணங்காமையே இந்த முரண்பாடுகளுக்கான காரணம் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் ஐரோப்பிய பிராந்திய நாடுகளுக்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தல் என்பதனை அம்பலமாக்கியுள்ளது என அவ்வறிக்கை அச்சம் வெளியிட்டுள்ளது.

11 நவம்பர் 2012

பரிதி கொலையை அடுத்து புலிகளின் முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்!

சங்கதிவிடுதலைப்புலிகள் இயக்கத் தளபதி பரிதி பாரிஸில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகள் தளபதிகள் மூவர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக, பிரான்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.
பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் பொலிஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. DCRI (Direction Centrale du Renseignement Intérieur) பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு.
DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் André Beauchamp, ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும், கொல்லப்பட்ட தளபதி ஏற்கனவே பிரான்ஸ் சிறையில் கைதியாக இருந்து தற்போது பெயிலில் உள்ளதால், அவர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், தற்போது கொல்லப்பட்ட பரிதியின் அமைப்பை சேர்ந்த மூவர் தமக்கு உயிராபத்து உள்ளதால் பொலிஸ் பாதுகாப்பு கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, அந்த கோரிக்கையை தமது பிரிவு கவனிப்பதில்லை எனவும், கோரிக்கையை தாம் police nationale பிரிவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறினார் André Beauchamp.
விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் தலைவர் பரிதி கொல்லப்பட்டுள்ளதால், அடுத்த நிலை தலைவர்கள், அதே அச்சுறுத்தல் தமக்கும் உள்ள காரணத்தால் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளார்கள் என்று தெரிகிறது.

கேர்ணல் பரிதி மீதான தாக்குதல் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசு அறிக்கை!

தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் சனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக்கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என தாம் கருதுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி (நடராஜா மதீந்திரன்) மீது நடந்தேறிய படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் மக்களைப் போராட்டம் நோக்கி அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பரிதி அவர்கள் மீது மேற்கோள்ளப்பட்ட இப் படுகொலைத் தாக்குதல் புலம்பெயர் மக்கள் தம் கையிலெடுத்துள்ள சனநாயக அரசியல்வழிவகையில் அமைந்த விடுதலைப்போராட்டம் மீதான தாக்குதல் என்றே கருதப்படவேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்படுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் :
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரும,; தமிழீழ விடுதலைச் செயல்வீரருமான திரு பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் பாரிஸ் நகரில் 08.11.2012 அன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த செய்தியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகுந்த துயரும் தார்மீகக் கோபமும் அடைகிறது.
சிங்களத்தால் ஈழத் தமிழர் தேசம் மீது மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின் அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலையினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் காலகட்டத்தில் இப்படுகொலை இடம் பெற்றிருக்கிறது.
அண்மைக் காலமாக சிறிலங்கா அரசு புலத்துவாழ் தமிழ் மக்கள் மீது இலக்கு வைத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இக் கொலை நடைபெற்ற விதம், இக் கொலைக்கு இருந்திருக்கக்கூடிய நோக்கம், இக் கொலையின் ஊடாக எட்ட முனைந்திருக்கக்கூடிய இலக்கு ஆகிய சூழ்நிலைச் சாட்சியங்கள் ஆவன சிறிலங்கா அரசால் ஏவிவிடப்பட்ட நன்கு பயிற்றப்பட்ட கொலையாளிகளே இக்கொலையின் பின்னணியில் உள்ளார்கள் என்பதனை வெளிப்படுத்துகின்றன.
தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் ஜனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்;புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக் கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என நாம் கருதுகிறோம்.
புலம்பெயர் மக்களைப் போராட்டம் நோக்கி அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பரிதி அவர்கள் மீது மேற்கோள்ளப்பட்ட இப் படுகொலைத் தாக்குதல் புலம் பெயர் மக்கள் தம்கையிலெடுத்துள்ள அரசியல் ஜனநாயக வழிவகையில் அமைந்த விடுதலைப்போராட்டம் மீதான தாக்குதல் என்றே கருதப்படவேண்டும்.
இப் படுகொலையினைப் புரிந்தவர்களையும், இப் படுகொலைக்கான காரணங்களையும் விசாரணைகள் மூலம் கண்டறிந்து குற்றவாளிகளை நீதியின்முன் காலதாமதமின்றி நிறுத்துமாறும் நாடு கடந்த அரசாங்கம்; பிரான்ஸ் நாட்டுக் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இக் கோழைத்தனமான படுகொலையினை மிகவன்மையாகக் கண்டனம் செய்வதோடு தாயக விடுதலைப்பணியில் தன்னுயிரை ஈகம் செய்த பரிதி அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கங்களைச் செலுத்தி நிற்கிறது.
இவரது இழப்பினால் துயருறும் மனைவி, மகள், உற்றார், உறவினர், நண்பர்கள் தோழர்கள், மக்கள் ஆகியோருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது கரங்களை இணைத்துக் கொள்கிறது.
இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை.

10 நவம்பர் 2012

பரிதி அவர்களுக்கு கொளத்தூர் மணி அவர்களின் வணக்க அறிக்கை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளருமான பரிதி என்ற ரீகன் அவர்கள் பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் அளவிலா வேதனையும் அடைந்தேன்.
பரிதி அவர்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர். அதன் பின்னர் கொளத்தூரில் எங்கள் தோட்டத்தில் நடந்த புலிகளின் மூன்றாம் பயிற்சி முகாம் காலத்தில் எனக்கு அறிமுகமானவர். முப்பதாண்டு கால நண்பரை இழந்த வேதனை ஒரு புறம் இருக்க அவர் கொல்லப்பட்டிருக்கும் விதம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்தி முடித்த சிங்களப்பேரினவாதம் - இன்னமும் பல்வேறு வடிவங்களில் தனது இனப்படுகொலையை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தொடரும் சிங்கள பேரினவாதம் தனது கோரக்கரங்களை இலங்கைக்கு வெளியே நீட்டி வெளிநாடுகளில் வாழ்பவர்களையும் கொன்று வருகிறது.
பரிதி அவர்கள் பல ஆண்டுகாலமாக ஈழவிடுதலை இயக்க அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு சிறையில் இருந்தவர். பின்னர் மீண்டும் பொறுப்பேற்று அமைதியாகச் செயல்பட்டு வந்தவர்.
நீண்ட நாட்களாகவே அவர் மீது குறிவைத்திருந்து கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் அவர் மீது ஒரு கொலை முயற்சி நடந்தது. அதில் பிழைத்த அவர் இந்த ஆண்டு அதே நவம்பர் மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்பாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் நாள் நிகழ்வு என்பது தமிழ் மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் நிகழ்வு என்பதால் அந்நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்புடன் இருக்கும் சிங்கள அரசு ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டே வந்துள்ளது. இந்த ஆண்டு தங்களின் நீண்டநாள் குறியான தோழர் பரிதியைக் கொன்று மாவீரர்நாள் நிகழ்வைச் சீர்குலைக்கும் தனது எண்ணத்தைச் செயல்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு இழப்பும் மேலும் உறுதியையே அளிக்கும் என்பதையும் பரிதியின் இழப்பு இந்த மாவீரர் நாள் நிகழ்வை மேலும் எழுச்சி உள்ளதாக மாற்றும் என்பதும் சிங்களர்கள் அறியாதது. வாழ்நாளெல்லாம் தனது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்த நண்பர் பரிதிக்கு எனது வீர வணக்கங்கள்.

கொளத்தூர். தா.செ. மணி
தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்.

09 நவம்பர் 2012

வெலிக்கடை சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு - 5பேர் பலி! பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட 13பேர் படுகாயம்!


வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற கலகத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த பிரதிப் பொலிஸமா அதிபர் ஆர்.டபிள்யு.எம்.சீ ரனவனவும் காயமடைந்துள்ளார். கைதிகள் கற்களையும் ஏனைய பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட படையினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.அதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் ஐந்து பேர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன, கெழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவன சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத் தமிழர்கள் மீதும் இனவழிப்பு அரங்கேற்றப்படுகிறது!

மலையகத்திலும் இன அழிப்பு! தற்போதைய அரசுக்கு முக்கிய பங்குகாலா காலமாக நடைபெற்று வருகின்ற பெருந்தோட்ட இந்திய வம்சாவளி இன அழிப்பு நடவடிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு முக்கிய பங்கு உள்ளதென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளி இன அழிப்பபு  மலையக சமூகத்தின் பாரிய சமூக, அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான  முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே இதனை உணர்ந்து மலையக அரசியல் தலைமைகள் இன அழிப்பிற்கு எதிராக சிந்தித்து சமூக வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் விடை காண முன்வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து மலையக தோட்ட பகுதிகளில் இயங்கும் அரச வைத்தியசாலைகளில் கர்ப்பத்தடை சம்பந்தமாக விஷேட பிரிவுகள் இயங்குவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வேறு எந்த நோய்க்கும் இவ்வாறு விஷேட பிரிவுகள் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் இயங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மலையக  பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் குறித்து பலமுறை மத்திய மாகாண சபை அமர்வில் தனி நபர் பிரேரணை சமர்ப்பித்து மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதி பலன் மிகவும் மோசமான அடிமைத்தனத்திற்கு பெருந்தோட்ட இந்திய சமூகத்தை கொண்டு செல்லும் எனவும் மாறாக சமூக, அரசியல் மாற்றத்தின் மூலம் இந்த அவலம் மாற்றப்பட வேண்டுமெனவும் முரளி ரகுநாதன் கோரியுள்ளார்.

தளபதி பரிதி பிரான்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு!

News Serviceவிடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒரவரான பரிதி நேற்றையதினம் பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார். இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார். மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயவஞ்சகர்களின் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரமறவனுக்கு
எமது வலைப்பூவும் வீரவணக்கத்தை செலுத்தி நிற்கின்றது.

08 நவம்பர் 2012

மனித சுனாமிகளை எதிர்கொள்ள தயார்-மகிந்த

வரவு – செலவுத் திட்டம்நாட்டின் அபிவிருத்திக்கு குழி வெட்டும் அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை, வறுமையை இல்லாதொழிப்பதற்காக கொண்டுவரப்படவிருந்த திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
இவ்வாறான மனித சுனாமிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் எம்முடன் கைகோர்க்குமாறு ஒருமனதோடு அழைப்பு விடுக்கிறேன்.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் வறுமையை போக்குவதே எமது குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - இன்று நாடாளுமன்றில் வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போது இறுதியாக தெரிவித்தார்.(நாட்டை வறுமை ஆக்கியதே நீங்கதானே அதிபரே!)

தமிழ் இளைஞர்களுக்கு ரகசிய ஆயுதப்பயிற்சி!!!

சிங்களமோ,ஆங்கிலமோ பேசத்தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட உதவியாளரின் கண்காணிப்பின் கீழ், ரகசியமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்பயிற்சி குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல், நவம்பர் 2 ஆம் திகதி வரை இந்த ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த பயிற்சிகள் கட்டுக்குறுந்த அதிரடிப்படை முகாமில் வழங்கப்பட்டுள்ளது.
சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் உரையாட முடியாத இந்த இளைஞர்களுக்காக மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரும், அவர்களுடன் சென்றுள்ளார். கோத்தபாயவின் விசேட உத்தரவின் பேரில் எனக் கூறி, அவரது தனிப்பட்ட உதவியாளரான கர்ணல் ஜயந்த ரத்நாயக்கவே இவர்களை கட்டுக்குறுந்த அதிடிப்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜயந்த ரத்நாயக்க, கோத்தபாயவின் நம்பிக்கைகுரிய இராணுவ அதிகாரியாவார்.
பயிற்சியளிக்கப்பட்ட 17 பேரும் போருக்கு பயற்சி வழங்கப்பட்டவர்கள் போல்,உடல் வாக்கு காணப்பட்டுள்ளது. அத்துடன் ரி 56 ரக துப்பாக்கி குறித்து சிறந்த பயிற்சிகளை அவர்கள் ஏற்கனவே பெற்றிருந்த போதிலும், அதிரடிப்படை முகாமில் வைத்து, இலகு ரக துப்பாக்கிகள் மூலமே இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் கையெழுத்திட தனியான ஆவணம் இருந்ததுடன், இதன் மூலம் அவர்கள் ஏதேனும் கொடுப்பனவுகளை பெறும் நபர்கள் என உறுதியாகியுள்ளது.
அதேவேளை இவர்கள் கே.பியின் பாதுகாவலர்கள் என கர்ணல் ஜயந்த ரத்நாயக்க கூறியுள்ளார். கே.பிக்கு இதுவரை இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில், சிங்களத்தில் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாத தமிழ் இளைஞர்கள் அவரது பாதுகாப்புக்கு ஏன்  வழங்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் விசேட படைப்பிரிவின் கர்ணலான ஜயந்த ரத்நாயக்க, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க முடிந்த நிலையில், ஏன் ரகசியமான முறையில் அதிரடிப்படை முகாமில் வைத்து பயிற்சி வழங்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் இரணைமடு பிரதேசத்தில் உள்ள கே.பியின் பாதுகாப்புக்கு இவ்வாறான தமிழ்  இளைஞர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இவர்களை பயன்படுத்த தயாராகி வரலாம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

07 நவம்பர் 2012

13வது இருந்தால் வடக்கில் கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்கும் - விமல், சம்பிக்க புலம்பல்

13வது இருந்தால் வடக்கில் கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்கும் - விமல், சம்பிக்க புலம்பல்அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே 13வது திருத்தத்தை ஒழிக்க பாடுபடுவோம் என அமைச்சர் விமல் வீரவன்சவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்துள்ளனர்.
13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்படுவோம் என்ற கோரிக்கையை முன்வைக்கும் பொருட்டு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து இன்று (07) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச,
இலங்கையின் ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை அரசுக்குள் இருந்து கொண்டே ஒழிக்க ஜாதிக ஹெல உறுமயவுடன் கைகோர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் அவர்களை கட்டுப்படுத்த 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் இன்று குறித்த திருத்தச் சட்டம் தோல்வியை கண்டுள்ளதால் அதனை தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாண சபை தேர்தலை நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் வெற்றிபெற்று காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் கேட்டு நீதிமன்றம் செல்லக்கூடிய அபாயம் உள்ளதால் 13வது திருத்தத்தை ரத்து செய்வது சிறந்தது என இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதனால் அரசுக்குள் இருந்து கொண்டே 13வது திருத்தத்தை இரத்து செய்ய மேலும் அரசியல் குழுக்களை இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

போர்க் குற்றவாளிகளுக்கு ஒபாமா தண்டனை பெற்றுக் கொடுப்பார் - ராமதாஸ்

இலங்கை போர்க் குற்றவாளிகளுக்கு ஒபாமா தண்டனை பெற்றுக் கொடுப்பார் - ராமதாஸ்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட ஜனாதிபதி ஒபாமா 300க்கும் அதிகமான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
அமெரிக்க மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா அமெரிக்க இடையிலான உறவு தழைக்கவும், இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவும், உலகம் முழுவதும் சமத்துவ சமுதாயம் மலரவும் ஜனாதிபதி ஒபாமா பாடுபடுவார் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

அரசின் கூற்றுப்படி கே.பி. குற்றமற்றவர் என்றால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும்.

இலங்கையை அழிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொன்று குவித்த உலகமே தேடும் பயங்கரவாதியான கே.பி. குற்றமற்றவர் என மஹிந்த அரசு தெரிவித்துள்ளமை சரியானால் பிரபாகரனின் 12 வயது மகனைக் கொலை செய்தமை பாரிய குற்றமாகும் என ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசுசார்பற்ற நிறுவனங்களைத் தடை செய்யும் அரசாங்கம் கே.பி.க்கு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார்.
"ஆசியாவின் பழைமையான ஜனநாயக நாடான இலங்கையில் இன்று அரசியல் மோகம் பிடித்தவர்களால் நீதியின் கிரீடம் பறிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
நீதிமன்றங்களால் பிடியாணை வழங்கப்படுவோர் பாதுகாப்பாக உள்ளனர். கே.பி. போன்ற சர்வதேச குற்றவாளி உயர்பதவிகளை வகிப்போருடன் சுதந்திரமாக நடமாடுகிறார். இன்ரர்போல் பொலிஸாரால் பகிரங்க பிடியாணை விடுக்கப்பட்டவர் கே.பி. சி.ஐ.ஏ. இவரைப் பின்தொடர்ந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

06 நவம்பர் 2012

இலங்கைக்கு சார்பாக கதையை மாற்றி நாடகம் போட்டது இந்தியா!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றியுள்ளது.
அதேவேளை இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்குறைப்பு, வடக்குத் தேர்தல் என்பன பற்றி காரசாரமாகக் கருத்து வெளியிட்டிருந்தது.
இலங்கை நிலைவரம் குறித்து ஆராய நியமிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் அங்கம் வகித்திருந்ததால் இந்தியாவின் அன்றைய கருத்து சர்வதேச மட்டத்திலும், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆனால், நேற்று இலங்கை தொடர்பில் நடைபெற்ற இறுதிக்கூட்டத்தில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே முன்வைத்த சிபாரிசுகளை நீக்கியிருந்த இந்தியா அதைப்பற்றி பொருட்படுத்தாமல் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெனீவாவில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள இலங்கை தூதுக்குழுவினர் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்து சந்தித்து நடத்திய இரகசியப் பேச்சுகளை அடுத்தே இந்தியா தனது நிலைப்பாட்டை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டதாக இராஜததந்திர தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் சில நாடுகள் முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்ளும் விதம்  குறித்து கடும் கவலை வெளியிட்டன.
இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை இலங்கை அரசு இன்னும் இரு வாரத்துக்குள் அறிவிக்குமென்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுக்குள் இலங்கை அரசு மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜெனீவாவிலுள்ள இராஜதந்திர தரப்புகள் கூறியுள்ளன.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்,நேற்று  நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
கடந்த முதலாம் நாள் நடைபெற்ற விவாத்தின்போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை நேற்று சமர்ப்பித்திருந்தன.
இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை இலங்கை விவரித்துள்ளது. அதேவேளை, பூகோள கால மீளாய்வுக் கூட்டம் குறிப்பிட்டதொரு நாட்டை இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இந்த நடைமுறைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும் கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு இலங்கை இரண்டு வாரங்களுக்குள் தனது உறுதிமொழிகளை அனுப்பும் என்று தெரிவித்துள்ளார்.

05 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு! காத்திருக்கும் அதிர்ச்சி!!

News Serviceஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 14வது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை இன்று இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்தே வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது.
கடந்த வியாழக்கிழமை 1ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வில் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்த விவாதம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, ஈரான் உள்ளிட்ட ஒரு பகுதி நாடுகள் இலங்கையின் அறிக்கையை ஆதரித்து கருத்துகளை வெளியிட்டன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தன.
அத்துடன், போர்க்குற்றங்களுக்கு நம்பகமான முறையில் பொறுப்புக் கூறுதல், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துல், அரசியல்தீர்வு காணுதல், நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகளை தவிர்த்தல், வடக்கில் படைவிலக்கம், உயர்பாதுகாப்பு வலய நீக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தன.
இந்தநிலையில், இலங்கையின் அறிக்கை மற்றும் நாடுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கைத் தீர்மானம் இன்று மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறவுள்ள அமர்வில் முதலில் பெரு தொடர்பான அறிக்கையின் மீதும் அடுத்து இலங்கை தொடர்பான அறிக்கை மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த அறிக்கையில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது. மனித உரிமைகள் நிலை, பொறுப்புக் கூறல், மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தாமை, வடக்கில் இராணுவக் குவிப்பு போன்ற விடயங்களில் இலங்கை மீது அதிகளவு அழுத்தங்களைக் கொடுப்பதாக இன்று சமர்ப்பிக்கப்படும் அறக்கை அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான விடயத்தில் முரண்படுவது கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பாக எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்களின் தற்போதைய உரிமைப்போராட்டத்தை மலினப்படுத்திவிடக் கூடாதென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை வண.எஸ்.ஜெ.இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,தற்போது நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசு தப்பினாலும் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறும் கூட்டத்தில் பதிலளிக்கும் கடப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு கட்டாயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொள்வதற்காக ஜெனிவா வந்திருந்த இம்மானுவேல் அடிகளார் அங்கு இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்களிடம் இலங்கையின் தமிழர் அரசியல் நிலைவரங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பது,மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது, மீள்குடியேற்றம் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது அனைவரினதும் கடமை என்று குறிப்பிட்ட இமானுவேல் அடிகளார்,உலக நாடுகள் இவை தொடர்பில் கவனத்தை செலுத்தியிருக்கும் ஒரு சூழ்நிலையில் நமது ஒற்றுமை சிதைந்து போய்விடக் கூடாதென்றும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான விடயத்தில் முரண்படாமல் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பென்றும் இம்மானுவேல் அடிகளார் மேலும் தெரிவித்தார்.

04 நவம்பர் 2012

சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்: தருஸ்மன்

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம் என்று இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார்.இலங்கை
தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்தன பரிசீலனையை தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பதை நாம் அவதானித்து வருகின்றோம். அதனை ஆராய வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது.
அதேபோல மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இலங்கை என்ன சாதித்துள்ளது என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம். அதுமட்டுமன்றி இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்;தில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்று விளக்கமளிக்கப்பட வேண்டும். இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப் படுவதே பொறுப்புக் கூறுதல் என்பதன் அர்த்தமாகும்.
அதுமட்டுமின்றி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். நானும் நிபுணர் குழுவின் இரு உறுப்பினர்களும் இந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.

இலங்கை இனப்படுகொலைக்கு தீர்வு காணாதது ஏன்?இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி!

ருவாண்டா அரசு மீது அங்கு இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு தீர்வு காண ஐநா முயன்றது போல் ஏன் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இலங்கை அரசு புரிந்த தமிழ் இனப் படுகொலைக்கு தீர்வு காணவில்லை என ஐநாவின் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ், ஐநா செயலர் பான் கீ மூனிடம் கேள்வி தொடுத்துள்ளது.
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை காண ஏன் ஐநா நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் கேள்வி மேல் கேள்வியால் பான் கீ மூனிடம் வேள்வி செய்துள்ளது.
ஐநாவின் உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்றி பிரஸின் மேற்கண்ட கேள்வியினால் இலங்கை கடும் சீற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவர் மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

03 நவம்பர் 2012

நீதித்துறையில் கைவைத்திருப்பது சிறீலங்கா அரசின் அழிவிற்கான ஆரம்பம்",அமெரிக்கா எச்சரிக்கை!

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்கா, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளது.
குறிப்பாக, சர்வதேச சமூகத்திடம் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் அபாயப் பொறி நிச்சயம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, சர்வதேச சமூகத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் ஜனநாயக விரோத செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்தும் ஈடுபடுமானால் எதிர்வரும் மார்ச் மாத ஜெனிவா அமர்வில் இலங்கை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவருமென பல தரப்பினராலும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து நேற்று ஜெனிவாவில் ஒன்றுகூடிய முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் இலங்கையின் நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளின் அமுலாக்கம், மனித உரிமைகளின் மேம்பாடு என்பன குறித்து சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றாத சூழ்நிலையில், மீளாய்வுக்கூட்டம் ஐ.நாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் நீதித்துறையில் இலங்கை அரசு தலையிட்டிருப்பது மோசமான ஒரு பாதையை காட்டி நிற்கின்றது என இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி இராஜதந்திரிகள் மட்டக் கூட்டத்தில் என்ன தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. 'நீதித்துறையின் சுயாதீனத் தன்மையில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் குறித்து மேற்குலக நாடுகள் கண்டுகொள்ளாமல் விடப்போவதில்லை.இலங்கை அரசு நீதித்துறையில் கைவைத்திருப்பதை அழிவு ஒன்றுக்கான ஆரம்பம் என்பதை மட்டும் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறோம் எனவும் அந்த இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இது குறித்து கருத்து வெளியிட்ட சுவிட்சர்லாந்து அரசின் இராஜதந்திரி ஒருவர், இலங்கையில் நல்லாட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க சர்வதேச சமூகம் முயற்சிக்கும்போது அதை நாட்டுக்கு எதிரான சதி என்று கூறி இலங்கை ஆட்சியாளர்கள் மலினப்படுத்துவது கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போயிருந்த செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு!

News Serviceஅண்மையில் நானுஓயா பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நானுஓயா பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டது.
இந்தச் சடலமானது அண்மையில் கொழும்பு செட்டியார் தெருவில் காணாமல் போன சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரது சடலம் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை செல்வம் அடைக்கலநாதன் அடையாளம் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட 53 வயதான இந்திரேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் சகோதரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30ம் திகதி இந்திரேஸ்வரன் காணாமல் போயுள்ளார்.
31ம் திகதி நானுஓயா பிரதேசத்தில் இனந்தெரியாத சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர். இந்திரேஸ்வரன் நகை வியாபரத்தில் ஈடுபட்டு வந்தார் எனவும், காணாமல் போன சந்தர்ப்பத்தில் சுமார் 30 லட்ச ரூபா பணம் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன 30ம் திகதி இரவு 7 மணி வரையில் இந்திரேஸ்வரனின் செல்லிடப் பேசி இயங்கியதாகவும் அதன் பின்னர் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

02 நவம்பர் 2012

சிறீலங்காவின் பொய்களை நம்பவேண்டாம் என மன்னிப்புச்சபை வேண்டுகோள்!

மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்‍க முடியாதென சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என அச்சபை கோரியுள்ளது.
யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
சில தசாப்தங்களாகவே மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பாடத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மீண்டுமொரு தடவை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கின்றது!

News Serviceஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பா,அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை சர்வதேச த்தினை நோக்கி வலியுறுத்தி வருகின்றனர்.
வியாழக்கிழமை அமர்வில் பல நாடுகள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரவித்திருந்தன. இதற்கு பின்னர், முன்னரும் மூடியகதவுகளுக்குள் இடம்பெறுகின்ற விடயங்கள்தான், யாவற்றையுமே தீர்மானிக்கப் போகின்றன என அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாசுகி தங்கராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையின் நிறைவேற்றுக்காலம் சிறிலங்காவுக்கு 2013 மார்ச் மாதம் ஆகவுள்ள நிலையில், அந்தக் காலம் வரைக்கும் சர்வதேசத்தினை ஏமாற்றும் இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தினை, சிறிலங்கா கையாள்வதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் வாசுகி தங்கராஜா தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. இதன்போது, மனிதஉரிமைகளை மேம்படுத்தவும், மனிதஉரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றவும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்நிலையில் 2008ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியினை மையப்படுத்தி சிறிலங்காவின் நிலைவரம் விவாததற்திற்கு எடுக்கப்பட்டிருந்த நிலையில், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் அதற்கு பிந்தியநிலை முக்கியமானதாக கவனிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் சிறிலங்கா குறித்த விவாதம்பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6:30 மணிவரை இடம்பெற்றிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 99 உறுப்பு நாடுகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.
சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு வினர் சபையில் பிரசன்னமாகியிருந்ததோடு சிங்களதேசத்தின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோர்களை மீள் குடியேற்றம் செய்தது, வடக்கே மிதி வெடிகளை அப்புறப்படுத்தியது, உள்நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டு சிறிலங்கா அரச பிரதிநிதிகள் தங்களை நியாயப்படுத்த முனைந்திருந்தனர்.
அமெரிக்காவின் கருத்து :
சிறிலங்கா அரசு தான் ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத்தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய யோசனைகளையோ திட்டங்களையோ அது முன்வைக்கவில்லை என அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
முன்பு போர் நடந்த இடங்களில் நடக்கும் இராணுவ மயமாக்கல் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். காணமல் போவது குறித்து பேச்சுரிமை பாதிப்பது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். சிறிலங்கா அரசு படிப்பினைக் குழுவின் ஆக்கபூர்வ பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். அரசு சாரா நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை சிவிலியன்களுக்கு அளிக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்கப் பிரதிநிதியின் கருத்து அமைந்திருந்தது.
இந்தியாவின் கருத்து :
சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதோடு அதிகாரப்பரவலாக்கல் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியிருந்தது.
வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்து தனது கவலையினைத் தெரிவித்திருந்த இந்தியா சுதந்திரமான முறையில் வடக்கில் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டுமென வலியுறுத்தியிருந்தது.
பிரான்சின் கருத்து :
2006ம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரென்சு தொண்டமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களுக்கான நீதிவிசாரணை குறித்து கடுமையான நிலைப்பாட்டினைத் பிரான்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.
மூன்றாம் உலக சிறிய நாடுகள் பலவும் சிறிலங்காவுக்கு பாராட்டுபத்திரம் வாசித்திருந்த நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அங்கத்துவம் பெறவேண்டும் மற்றும் சர்தேச சுயாதீன விசாரணை போன்ற பல விடயங்கள் சில நாடுகளினால் முன்வைக்கப்பட்டிருந்தமை, சிறிலங்காவுக்கு கசப்பானதகவே அமைந்திருக்கும் என ஜெனீவா சென்றிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அமர்வில் உறுப்பு நாடுகளினால் முன்வைக்கபட்ட கருத்துக்களின் அடிப்படையில் , இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இணைந்து அறிக்கையொன்றினை தயாரித்து பரிந்துரைத் தீர்மானத்தினை எதிர்வரும் 5ம் நாள் திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கும்.
சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும் இந்த பரிந்துரைத் தீர்மானத்தினை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பொறிமுறைக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சூழலுக்குள் சிறிலங்கா அகப்படுமா என்பதுதான் இன்றைய பலரது கேள்வியாகவுள்ளது.

நாதம் ஊடகசேவை

01 நவம்பர் 2012

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சீனாவின் ஆட்டிலறிகள்! புலிகளுக்கு கிடைத்தது எப்படி?

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்டிலறிகளை இலங்கைப் படையினர் நேற்று கைப்பற்றினர். இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இந்த ஆட்டிலறிகள் மூன்றரை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாதது குறித்து இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்காலில் இலங்கைப் படையினர் 3 ஆண்டுகளாக தொடர் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.
நிலம் புயலினால், காட்டிக்கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்ற விசாரணையை இராணுவத் தரப்பு இப்போது ஆரம்பித்துள்ளது.
இவை விடுதலைப் புலிகளால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையா என்று கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை, முதல்முறையாக ஒரே தடவையில் விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகளை கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அந்தப் பகுதியில் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஒரு 130 மி.மீ ஆட்டிலறி மற்றும் நான்கு 152 மி.மீ ஆட்டிலறிகளே மீட்கப்பட்டுள்ளன. இவற்றுடன், சக்திவாய்ந்த 120 குதிரைவலுக் கொண்ட இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கடற்புலிகளின் படகு ஒன்றையும் சிறிலங்காப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தரைதட்டியுள்ள ஜோர்தானிய கப்பலுக்கு அருகில் இவை கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், 'நிலம்' புயலினால் அவை வெளித் தெரிய ஆரம்பித்ததை அடுத்து அவற்றைத் தாம் மீட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு!

சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு -மனித உரிமை மீறல்கள்கள் இப்போதும் தொடர்கின்றன -போருக்கான காரணங்கள் தீர்க்கப்படாதேயுள்ளது. இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் கூட ஒழுங்காக தீர்க்கப்படாதுள்ளது.இலங்கை பன்மைத்துவம் மிக்கதொரு நாடு என்பதைக் கூட ஏற்றுக்கொள்ள தயாராகவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் பகுதிகளில் இராணுவ மயப்படுத்தல்கள் நில அபகரிப்பு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்வென பிரச்சினைகள் நல்லாட்சிக்கான எவையுமே இங்கு அமுல்படுத்தப்படவில்லை.சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு தொடர்கின்றது.கடந்த கால மனித உரிமை மீறல்கள்கள் இப்போதும் தொடர்கின்றன எனவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
கடந்த கால தவறுகள் தொடர்பில் குற்றவாளிகள் இனங்காணப்படவேண்டும்.அத்துடன் வகை பொறுப்பு கூறப்படவேண்டும்.தேசிய மொழிக்கொள்கை அமுல்படுத்தப்படவேண்டும். ஆனால் அதை அமுல்படுத்த அரச கரும மொழிகள் ஆணைக்குழு தவறிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மொழிக்கொள்கையினை அமுல்படுத்த உள்ளுர் அமைப்புக்களையும் ஊடகங்களையும் ஒருங்கிணைப்பதெனும் தலைப்பில் இச்செயலமர்வு ஏற்பாடாகியிருந்தது.