05 நவம்பர் 2012

கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான விடயத்தில் முரண்படுவது கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பாக எழுந்துள்ள வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்களின் தற்போதைய உரிமைப்போராட்டத்தை மலினப்படுத்திவிடக் கூடாதென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை வண.எஸ்.ஜெ.இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,தற்போது நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசு தப்பினாலும் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறும் கூட்டத்தில் பதிலளிக்கும் கடப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு கட்டாயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொள்வதற்காக ஜெனிவா வந்திருந்த இம்மானுவேல் அடிகளார் அங்கு இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்களிடம் இலங்கையின் தமிழர் அரசியல் நிலைவரங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பது,மனித உரிமைகள் குறித்து இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது, மீள்குடியேற்றம் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவது அனைவரினதும் கடமை என்று குறிப்பிட்ட இமானுவேல் அடிகளார்,உலக நாடுகள் இவை தொடர்பில் கவனத்தை செலுத்தியிருக்கும் ஒரு சூழ்நிலையில் நமது ஒற்றுமை சிதைந்து போய்விடக் கூடாதென்றும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான விடயத்தில் முரண்படாமல் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பென்றும் இம்மானுவேல் அடிகளார் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக