29 நவம்பர் 2012

பங்கு போட்டுக்கொள்ள பண்டமல்ல,விடுதலை வேட்கையின் வீரியமே மாவீரர்!

தமிழரின் தாயக விடுதலைக்கான பயணமானது புதிய உலக ஒழுங்குக்கு அமைய வடிவங்களை மாற்றியமைத்து நெறி பிறழாது இலக்கு நோக்கி பயணிக்கவேண்டிய இன்றைய சூழலில், எதிரியானவன் எம்மையும் எமது இலட்சியத்தையும் பலவீனப்படுத்துவதற்கு மிகத்துல்லியமான செயல்திறன் வாய்ந்த உத்திகளை பயன்படுத்துகின்றான்.
இவற்றை புரியாது எம்மில் பலர் அவனது செயற்பாட்டிற்கு துணை போவது மிகவும் வருந்தத்தக்கது. இந்நிலை மாறி காத்திரமான கருத்துருவாக்கம் ஒன்று ஏற்பட வேண்டுமென்ற வேணவாவில் இப்பத்தி பிரசுரமாகின்றது.
எதிரிகளை அழிப்பதற்கு சாம, தான, பேத, தண்டம் என நான்கு வழிமுறைகள் உன்ளன. சிறிலங்கா அரசு இதில் கடைசி இரண்டையும் மிக நேர்த்தியாகக் கையாண்டு வருகிறது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்று கூறும் விதத்தில் பரிதியின் (ரீகன்) படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப்படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்ட அரசு சார்பான ஊடகங்கள் புலிகளின் இரு பிரிவினருக்கிடையிலான மோதலே இது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டன.
உள்நாட்டில் இடம்பெற்ற நீதி அமைச்சின் செயலாளர் மீதான தாக்குதல், லலித் – குகன் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் கடத்தல், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார், மற்றும் அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல்கள், உள்ளூராட்சி சபைக்கான புதிய கட்டட மாற்றம், சொந்தக் காணியில் மீண்டும் மீளக் குடியமரக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டோர் மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவங்கள் எல்லாவற்றையும் இனந்தெரியாதோரே மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட இவ் ஊடகங்கள் பிரான்ஸில் நடைபெற்ற இச்சம்பவத்தில் மட்டும் குற்றவாளிகள் இன்னார் என குறிப்பிட முடிந்தது எவ்வாறு?
0இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே மித்ர பேத வழிமுறையை அரசு மேற் கொண்டு வருகிறது. 1986 – 1987 காலப்பகுதியில் ” தமிழீழத்தின் குரல் ” என்ற வானொலி மூலம் இயக்கங்களுக்கிடையே பரஸ்பரம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
இதன் மூலம் போராட்டம் மீதான சலிப்பை ஏற்படுத்தி கணிசமானோரை போராட்ட அரங்கிலிருந்து வெளியேறும் சூழலை உருவாக்கியது. வடமராச்சியில் மேற்கொள்ளப்பட்ட ” ஒப்பரேசன் லிபரேசன் ” நடவடிக்கையின் போது மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அதே வானொலி அறிவுறித்தியபோதுதான் அதனை இனங்கண்டனர் எம் மக்கள்.
இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்திலும் இதே வழிமுறையில்தான் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியின் இல்லத்தில் ஈ .என் .டி.எல் .எப் வினராலும், யாழ் அசோகா ஹோட்டலில் தற்போதைய யாழ் எம் . பி சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலும், மட்டுநகரில் வாவிக்கரை சாலையில் தற்போது தமிழ்தேசியத் கூட்டமைப்பின் பணிமனையாக இயங்கிவரும் இல்லத்தில் தற்போது மாகாணசபை உறுப்பினராக விளங்கும் இரா .துரைரத்தினம் தலைமையிலும் ஈ . பி .ஆர் .எல் .எப் வினரால் தமிழரின் உயிர்கள் பலியிடப்பட்டன.
1990 யில் ராஸிக் குழு, பிளாட் போன்றவையும் தொடர்ந்து கப்பம் கோரி பிள்ளையொன்றைக் கடத்திய வழக்கில் மதுரைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டக்ளஸ் குழுவினரும் தமிழினப் படுகொலைக்கென்றே களமிறக்கப்பட்டனர்.
மட்டக்களப்பை பொறுத்தவரை சத்துருக்கொண்டான் படுகொலை, பண்டாரியா வெளியில் கப்டன். லக்ஸ்மனை கழுத்து வெட்டி படுகொலை செய்தமை ஆரையம்பதியில் திருமதி.பூரணலச்சுமி சின்னத்துரை, வர்த்தகர் தம்பிராசா, அவரது மகன் குருகுலசிங்கம், மகள் மலர் உட்பட எழுவரின் படுகொலைகள் போன்றவற்றுக்கு டெலோவின் உதவியை நாடியது அரசு அதேபோல வவுனியாவில் புளொட்டின் மலர்மாளிகை படுகொலைகள் பிரசித்தம்.
இதன் பின்னர் சமாதான காலத்தில் பேச்சுவார்த்தைக்கென வெளிநாடு சென்ற கருணாவுக்கு திறமையான முறையில் வலை விரித்தது அரசு ” உங்களைப்போல ஒரு தளபதி எங்களோடுடிருந்தால் எங்களது இராணுவம் எங்கேயோ போயிருந்திருக்கும்” என்று குழையடித்ததில் ஆள் விழுந்து தான் போனார்.
பிரபாகரன் தான் ஒன்று. நாங்கள் எல்லோரும் சைபர்கள் இந்த சைபர்கள் ஒன்றுக்கு பின்னால் இருந்தால்தான் அவற்றுக்கு பெறுமதி ஒன்றுக்கு முன்னால் எத்தனை சைபர்கள் போட்டாலும் வேலையில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செய்த கூத்துகள் பகிரங்கமானவையே.
பின்னர் கோடரிக்காம்பாகி அவர் தமிழின அழிப்புக்குத் துணைபோனதும் எவரும் மறக்க முடியாதவை. வட கிழக்கு உட்பட அனைத்துத் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவராக பிரபாகரன் விளங்கினார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார். இன்று இரண்டுமே வெறுமை நிலையில், எனினும் மாவீரர்களின் தியாகங்களை கௌரவப்படுத்தலாவது எஞ்சியிருக்கவேண்டும் என மாவீரர்களின் பெற்றோராகிய நாம் எதிர் பார்க்கிறோம்.
பிரான்சைப் பொறுத்தவரை ஏற்கெனவே நாதன், கஜன் ஆகியோரைப் பலியெடுத்தது சிறிலங்கா அரசு. ஏவியது அரசு என்றாலும் அதில் அம்பாக இருந்தது தமிழ்க் கரங்களே. இப்போதும் அதே மண்ணில் பருதியின் படுகொலை நிகழ்ந்துள்ளது.
1983 ஆண்டு முதல் விடுதலைக்காக இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. குறிப்பாக மன்னார் மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் நிறைந்தவர் இவர். நாயாற்று வெளியில் விக்ரரை இலக்கு வைத்துக் காத்திருந்தது சிறிலங்கா இராணுவம் வழமையாக ஜீப்பின் முன் பக்கம் இருந்து பயணம் செய்யும் அவர் அன்று முன்சென்ற மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தார்.
பதுங்கியிருந்த இராணுவத்தை அவர் கடந்து சென்றார். பின்னால் வந்த ஜீப்பின் மீது படையினர் தாக்குதல் நடத்தினர். விக்டர் வழமையாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருந்த ரோஸ்மன் என்ற போராளி வீரச்சாவை எய்தினார். தொடர்ந்து மோதல் ஆரம்பமானது, அச் சமயம் ரீகன் மடுவில் தனது அணியினருடன் தங்கியிருந்தார். சண்டை ஆரம்பமானதை அறிந்த அவர் தனது அணியினருடன் ஓட்டமாகவே விரைந்தார்.
துப்பாக்கிகள் குண்டுகளுடன் சுமார் 25 கிலோ மீற்றர் ஓடி வருவதென்றால் இலேசான விடயமா ? இவர்கள் வந்து சேர்வதற்கிடையில் படையினர் ஓட ஓட விரட்டப் பட்டுவிட்டனர். ஆயினும் எமது ஒரு அணிக்கு ஆபத்து என்றால் அடுத்த அணி துடித்த அந்த காலங்கள் என்றும் உணர்வு பூர்வமானவை. இன்று ரீகனை படுகொலை செய்தது எமது பொது எதிரியே. ஆனால் அதனை எம்மில் ஒரு பகுதியினர் மீது பழிபோட்டு தமிழரைக் கூறுபடுத்த முனையும் சிறிலங்கா அரசின் முயற்சிக்கு நாம் பலியாகக் கூடாது.
எமது மாவீரர் பட்டியலின் இறுதிப்பெயராக ரீகனின் நாமமே இருக்கட்டும். பிள்ளைகளும் இழந்தவர்கள் என்ற வகையில் வகையில் மாவீரரின் பெற்றோராகிய எமது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமென புலம்பெயர் தமிழர்களை வேண்டுகின்றோம்.
தமிழன் ஓரணியாக நின்று மாவீரர்களை போற்றினான் என்ற நிலை மீண்டும் உருவாக வேண்டும் இரத்தமும் சதையுமாக நடைபெற்ற இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் எமது பிள்ளைகளின் தியாகங்கள் அர்த்தமற்றுப் போய் விடக்கூடாது. அதனைப் பெறுமதியாக்குவது உங்கள் கையில் தான் உள்ளது.
எங்கள் பிள்ளைகள் களத்தில் போராடும் போது இவ்வாறு பிரிந்து நின்று மாவீரர் நாளை அனுஷ்டிப்பீர்கள் என எண்ணவில்லை. இழந்த எம் பிள்ளைகளின் பெயரால் கேட்கிறோம், சுடரேற்றும்போது அருகருகே நின்ற மாவீரர் குடும்பங்களைப் பங்கு போடாதீர்கள்.
போராட்டத்தை நேசிக்கும் நடுநிலையாளர்கள் மாவீரர் நாளைப் பொறுப்பெடுக்கவேண்டும். இதற்கான முயற்சிகளை காசி ஆனந்தன், நெடுமாறன், திருமதி அடல் பாலசிங்கம் போன்றோர் முன்னெடுக்க வேண்டும். இந்த மாவீரர் நாளில் அது முடியாமல் போனாலும் அடுத்த நாளிலிருந்து இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படவேண்டும்.
2013 ஆண்டு மாவீரர் நாளாவது பழையபடி ஒரே இலக்குடன் நடைபெறட்டும். அதுதான் நீங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் கௌரவம். அந்த வகையில் மாவீரர் நாள் உறுதியெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.

தாயாக விடிவிற்காய் தமது உடல் பொருள் ஆன்மா என அத்தனையும் ஆகுதியாக்கிய மான மறவர்களின் பெற்றோர் உரித்துடையோர் சார்பாக தயாளன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக