07 நவம்பர் 2012

13வது இருந்தால் வடக்கில் கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்கும் - விமல், சம்பிக்க புலம்பல்

13வது இருந்தால் வடக்கில் கூட்டமைப்பு காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்கும் - விமல், சம்பிக்க புலம்பல்அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே 13வது திருத்தத்தை ஒழிக்க பாடுபடுவோம் என அமைச்சர் விமல் வீரவன்சவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்துள்ளனர்.
13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்படுவோம் என்ற கோரிக்கையை முன்வைக்கும் பொருட்டு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து இன்று (07) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச,
இலங்கையின் ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை அரசுக்குள் இருந்து கொண்டே ஒழிக்க ஜாதிக ஹெல உறுமயவுடன் கைகோர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் அவர்களை கட்டுப்படுத்த 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் இன்று குறித்த திருத்தச் சட்டம் தோல்வியை கண்டுள்ளதால் அதனை தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாண சபை தேர்தலை நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் வெற்றிபெற்று காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் கேட்டு நீதிமன்றம் செல்லக்கூடிய அபாயம் உள்ளதால் 13வது திருத்தத்தை ரத்து செய்வது சிறந்தது என இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதனால் அரசுக்குள் இருந்து கொண்டே 13வது திருத்தத்தை இரத்து செய்ய மேலும் அரசியல் குழுக்களை இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக