04 நவம்பர் 2012

சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்: தருஸ்மன்

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம் என்று இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார்.இலங்கை
தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரான இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் இலங்கை பற்றிய அனைத்துலக ஆவர்தன பரிசீலனையை தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பதை நாம் அவதானித்து வருகின்றோம். அதனை ஆராய வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது.
அதேபோல மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இலங்கை என்ன சாதித்துள்ளது என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம். அதுமட்டுமன்றி இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்;தில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்று விளக்கமளிக்கப்பட வேண்டும். இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப் படுவதே பொறுப்புக் கூறுதல் என்பதன் அர்த்தமாகும்.
அதுமட்டுமின்றி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். நானும் நிபுணர் குழுவின் இரு உறுப்பினர்களும் இந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக