11 நவம்பர் 2012

கேர்ணல் பரிதி மீதான தாக்குதல் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசு அறிக்கை!

தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் சனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக்கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என தாம் கருதுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி (நடராஜா மதீந்திரன்) மீது நடந்தேறிய படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் மக்களைப் போராட்டம் நோக்கி அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பரிதி அவர்கள் மீது மேற்கோள்ளப்பட்ட இப் படுகொலைத் தாக்குதல் புலம்பெயர் மக்கள் தம் கையிலெடுத்துள்ள சனநாயக அரசியல்வழிவகையில் அமைந்த விடுதலைப்போராட்டம் மீதான தாக்குதல் என்றே கருதப்படவேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்படுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் :
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரும,; தமிழீழ விடுதலைச் செயல்வீரருமான திரு பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் பாரிஸ் நகரில் 08.11.2012 அன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த செய்தியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகுந்த துயரும் தார்மீகக் கோபமும் அடைகிறது.
சிங்களத்தால் ஈழத் தமிழர் தேசம் மீது மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின் அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலையினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் காலகட்டத்தில் இப்படுகொலை இடம் பெற்றிருக்கிறது.
அண்மைக் காலமாக சிறிலங்கா அரசு புலத்துவாழ் தமிழ் மக்கள் மீது இலக்கு வைத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இக் கொலை நடைபெற்ற விதம், இக் கொலைக்கு இருந்திருக்கக்கூடிய நோக்கம், இக் கொலையின் ஊடாக எட்ட முனைந்திருக்கக்கூடிய இலக்கு ஆகிய சூழ்நிலைச் சாட்சியங்கள் ஆவன சிறிலங்கா அரசால் ஏவிவிடப்பட்ட நன்கு பயிற்றப்பட்ட கொலையாளிகளே இக்கொலையின் பின்னணியில் உள்ளார்கள் என்பதனை வெளிப்படுத்துகின்றன.
தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் ஜனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்;புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக் கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என நாம் கருதுகிறோம்.
புலம்பெயர் மக்களைப் போராட்டம் நோக்கி அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பரிதி அவர்கள் மீது மேற்கோள்ளப்பட்ட இப் படுகொலைத் தாக்குதல் புலம் பெயர் மக்கள் தம்கையிலெடுத்துள்ள அரசியல் ஜனநாயக வழிவகையில் அமைந்த விடுதலைப்போராட்டம் மீதான தாக்குதல் என்றே கருதப்படவேண்டும்.
இப் படுகொலையினைப் புரிந்தவர்களையும், இப் படுகொலைக்கான காரணங்களையும் விசாரணைகள் மூலம் கண்டறிந்து குற்றவாளிகளை நீதியின்முன் காலதாமதமின்றி நிறுத்துமாறும் நாடு கடந்த அரசாங்கம்; பிரான்ஸ் நாட்டுக் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இக் கோழைத்தனமான படுகொலையினை மிகவன்மையாகக் கண்டனம் செய்வதோடு தாயக விடுதலைப்பணியில் தன்னுயிரை ஈகம் செய்த பரிதி அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கங்களைச் செலுத்தி நிற்கிறது.
இவரது இழப்பினால் துயருறும் மனைவி, மகள், உற்றார், உறவினர், நண்பர்கள் தோழர்கள், மக்கள் ஆகியோருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது கரங்களை இணைத்துக் கொள்கிறது.
இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக