05 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு! காத்திருக்கும் அதிர்ச்சி!!

News Serviceஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 14வது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை இன்று இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்தே வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது.
கடந்த வியாழக்கிழமை 1ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வில் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்த விவாதம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, ஈரான் உள்ளிட்ட ஒரு பகுதி நாடுகள் இலங்கையின் அறிக்கையை ஆதரித்து கருத்துகளை வெளியிட்டன. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தன.
அத்துடன், போர்க்குற்றங்களுக்கு நம்பகமான முறையில் பொறுப்புக் கூறுதல், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துல், அரசியல்தீர்வு காணுதல், நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகளை தவிர்த்தல், வடக்கில் படைவிலக்கம், உயர்பாதுகாப்பு வலய நீக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தன.
இந்தநிலையில், இலங்கையின் அறிக்கை மற்றும் நாடுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கைத் தீர்மானம் இன்று மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறவுள்ள அமர்வில் முதலில் பெரு தொடர்பான அறிக்கையின் மீதும் அடுத்து இலங்கை தொடர்பான அறிக்கை மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த அறிக்கையில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது. மனித உரிமைகள் நிலை, பொறுப்புக் கூறல், மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை நடத்தாமை, வடக்கில் இராணுவக் குவிப்பு போன்ற விடயங்களில் இலங்கை மீது அதிகளவு அழுத்தங்களைக் கொடுப்பதாக இன்று சமர்ப்பிக்கப்படும் அறக்கை அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக