13 நவம்பர் 2012

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடிமயர்த்த நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகிறது. இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் பிள்ளையான் குழுவும் இதனை செயற்படுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 75வீதம் தமிழர்களும், 24வீதம் முஸ்லீம்களும் ஒரு வீதம் சிங்களவர்களும் உள்ளனர். இதனை மாற்றியமைத்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் இணைந்தால் பெரும்பான்மையாக வரும் வகையில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை மட்டக்களப்பில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக 6ஆயிரம் சிங்கள ஊர்காவல்படையினருக்கு மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை பிள்ளையான் முதலமைச்சராக இருந்த நேரத்தில் கிழக்கு மாகாணசபையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண காணி விவசாய அமைச்சராக இருந்த பிள்ளையான்குழுவை சேர்ந்த நவரத்தினராசா என்பவரே இதற்கான சகல உதவிகளையும் வழங்கியிருந்தார். சிங்கள ஊர்காவல்படையினரை மட்டக்களப்பில் குடியேற்றுவதற்கு உதவியளித்ததற்கு பிரதி உபகாரமாகவே கிழக்கு மாகாணசபையில் மகிந்த ராசபக்சவினால் அவர் நியமன உறுப்பினராக இம்முறை நியமிக்கப்பட்டார்.
தற்போது மட்டக்களப்பு கரையோரப்பகுதியில் பாசிக்குடாவிலும், சவுக்கடியிலும் 5ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தியத்தகண்டிய பகுதியிலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஏறாவூர்பற்று, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுக்குள் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளராக சிங்களவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்திட்டம் பூர்த்தியடைந்தால் கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக