21 ஜூன் 2014

பாணந்துறையில் முஸ்லீம் ஆடை நிறுவனம் எரிந்தது!

பாணந்துறை
இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள பாணத்துறை நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான ’’நோ லிமிட் ‘’ எனும் ஆடை வர்த்தக நிறுவனமொன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று அதிகாலை இலங்கை நேரப்படி 3.15 அளவில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் கட்டிடம் முற்றும் அழிந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ அணைப்பு படையினரின் உதவியுடன் காலை 5.00 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இந்தக்
கட்டிடம் முற்றாக நாசமடைந்துவிட்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன இது மின்சாரம் காரணமாக ஏற்பட்டதா இல்லாவிட்டால் சதி வேலையா என்பதைக் கண்டறிவதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் உதவியை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இந்த தீ விபத்து காரணமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறிய அவர் இழப்பு தொடர்பாக இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
முஸ்லிம் மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வரும் பாணந்துறை நகரில் இந்தத் தீ விபத்தின் பின்பு பதட்ட நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக போலிஸ் அதிரடி படையினரின் உதவியுடன் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாவாந்துறை
எனவே சில ஊடகங்கள் மற்றும் சமுக வலைத் தளங்களினால பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கிம் பாணதுறைப் பகுதிக்கு சென்று, அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார்.இதேவேளை இன்று அதிகாலையில் நாவாந்துறையில் உள்ள ஒரு பள்ளிவாசலும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக