16 ஜூன் 2014

களுத்துறைக் கலவரத்தில் முஸ்லீம்கள் மூவர் படுகொலை!

களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பொதுபல சேனாவுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலில், பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு நேற்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன.
அந்தக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற போதே அந்த மோதல்கள் வெடித்துள்ளன. இதில் முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்கள் மீது கல் வீசப்பட்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தனர். ஆனால், இந்தச் சம்பவங்களில் எவை முதலிலும், எவை பின்னரும் நடந்தன என்பது தெரியவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்றுமாலை அளுத்கமையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்ர் புருவளை நகரிலும் வன்முறைகள் பரவியதால் அங்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தெகிவளையில் உள்ள முஸ்லிம்களின் கடை ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் கல்வீசித் தாக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளுர் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தான் தனது சொந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்பட்டதாக உள்ளூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கிறது. பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக