மோதல்களின் போது பாலியல் வல்லுறவைத் தடுக்கும் சர்வதேச மாநாட்டில் இலங்கை குறித்த விவாதத்துக்கு ஏன் இடமளிக்கவில்லை?- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளன பிரித்தானிய ஊடகங்கள். பிரித்தானியாவின் லண்டனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த மாநாடு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நாவின் சிறப்பு தூதுவரும் பிரபல நடிகையுமான ஏஞ்சலினா ஜோலி ஆகியோரின் இணைத் தலைமையில் ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் 140 வரையான நாடுகள் பங்கேற்றுள்ள போதும், இலங்கை இதனைப் புறக்கணித்துள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாட்டில், சிரியா, கொங்கோ உள்ளிட்ட நாடுகளில் பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதும், இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இலங்கையில் போரின் போது, பாலியல் வன்முறைகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ள போதும், அதற்கான ஆதாரங்கள் பல கிடைத்துள்ள போதும், இந்த மாநாட்டில், இலங்கை விவகாரம் குறித்த விவாதம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று பிரித்தானிய ஊடகங்கள் விசனம் வெளியிட்டுள்ளன. பாலியல் ரீதியாக வன்முறைக்குட்படுத்தப்பட்ட பலர் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையிலும், போரின் போது இசைப்பிரியா பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியான போதிலும், இன்னும் இத்தகைய குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் உள்ள போதிலும் இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் கவனிக்கப்படாமல் போயுள்ளது குறித்தும் இந்த ஊடகங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலக மாநாடு ஏன் மறந்து போனது என்றும் இந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக