28 ஜூன் 2014

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் சவக்குழி தோண்டுகிறார் கோத்தபாய!

News Serviceபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது சகோதரரான ஜனாதிபதிக்கு மாத்திரமல்லாது அவரது அரசாங்கத்தின் அரசியலுக்கும் சவக்குழியை தோண்டும் நிலைக்குச் சென்றுள்ளதாக ராவய பத்திரிகையின் ஆசிரிய ஆலோசகர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். கோத்தபாயவின் இராணுவ நிழலானது வடக்கு கிழக்கு மக்கள் மீது மாத்திரமல்லாது முழு நாட்டிலும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அன்புக்குரிய தம்பி விரும்பியதைச் செய்வதற்கு இடமளித்துள்ள கொள்கையானது முழு நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.பாதுகாப்புச் செயலாளர் சில அடிப்படைவாத சக்திகளை பாலூட்டி வளர்த்து விட்டதுடன் நின்று விடாமல், அவற்றிற்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளார். இதற்கு பொதுபல சேனா சிறந்த உதாரணமாகும். பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் இயற்கைக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சின் பலத்தில் மேற்கொண்டு வரும் ஒன்றாக இருக்கின்றது. அவரது பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு அமைதியாக வேடிக்கை பார்த்தது.பாதுகாப்புச் செயலாளருடன் ஞானசார தேரருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி அனைவரும் அறிந்திருந்ததே இதற்கு காரணமாகும். நாட்டை இராணுவ மயமாக்கலுக்கு தள்ளுவதே கோத்தபாய ராஜபக்ஷ நாட்டுக்கு மேற்கொண்டு வரும் மிகவும் கெடுதியான நடவடிக்கையாகும். சிவில் அதிகாரிகள் வகிக்க வேண்டிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தல், இராணுவ அதிகாரிகளை தூதுவர் பதவிகளுக்கு நியமித்தல், கல்வித்துறையை இராணுவமயப்படுத்தியமை ஆகியவற்றுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டை இராணுவமயத்திற்குள் தள்ளியுள்ளதுடன் சிவில் அரசியல் நிறுவனங்களை அழித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவே வழக்கு விசாரணைகளை நடத்தாது குற்றவாளிகளை கொலை செய்யும் கொடூரமான சம்பிரதாயத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக அடிப்படைகளுக்கு முரணான பாசிசவாத செயல் எனவும் விக்டர் ஜவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக