17 ஜூன் 2014

இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால்!

எப்போதாவது நடந்தே தீரும் என்ற தமிழ் மக்களது எதிர்பார்ப்பு, இப்போது ஆரம்பமாகியுள்ளது. இதைக் கொண்டாட முடியாது. அதிக சோகத்தையும் வெளிப்படுத்த முடியாது. எதிர்த்துக் குரல் எழுப்பவும் முடியாது. ஏனென்றால், நாங்கள் கொல்லப்படும்போதோ… எரிக்கப்படும்போதோ… தொலைக்கப்படும்போதோ… குதறப்படும்போதோ… அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவே இல்லை. இன்னமும் மோசமாக… சிங்கள எசமானர்களது வேட்டையில், அவர்களும் கணிசமான அளவில் பங்கேற்றிருந்தார்கள்.
இந்த வேளையில், ஜெர்மனிய சிந்தனையாளரான மார்டின் நீய்மொய்லர் அவர்களது ‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்’ என்ற கவிதை வரியே ஞபகத்திற்கு வருகின்றது.
‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்…
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’கிட்லரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ‘சராசரி’ மனிதனைப் பற்றிய கவிதை அது. அவன் எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை. காரணம் பயம்… சுயநலம்… அறியாமை என்று எதை வேண்டும் என்றாலும் கொள்ளலாம். அவன் அவ்வாறே இருந்து விட்டால் அவனுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய உலகத்திற்கும் எந்த தீங்கும் வந்து விடாது என்றே அவன் நம்பினான். அந்த நம்பிக்கையிலையே அவன் குருடனாய் நாட்களை கடத்துகின்றான். ஆனால் பயங்கரமான போர் நடந்துக் கொண்டு இருக்கும் போர்க்களத்திலே கண்களை மூடிக் கொள்வதால் மட்டுமே குண்டுகள் நம்மைத் தாக்காது சென்று விடுமா என்ன? அதே போல் அவன் எந்த அநியாயம் தனக்கு நேராது என்று நம்பிக்கொண்டு இருந்தானோ அதே அநியாயம் அவனுக்கு நேரும் பொழுது அவனுக்கு ஆதரவான குரலுக்காக சுற்றியும் அலைகின்றான். ஆனால் பாவம்… புதைக்கப்பட்டவர்கள் பேச மாட்டார்கள் என்பதனை அவன் அறியும் காலமும் வருகின்றது. ‘ஐயகோ… நான் என்று அடுத்தவர்களுக்காக வாய் திறக்க மறுத்தேனோ அன்றே நான் புதைக்கப்பட்டு விட்டேனே! அன்று வராத வார்த்தை இன்று நிச்சயம் பயனில்லை’ என்றவாறே அவன் தனது முடிவை நோக்கி செல்கின்றான்.சிங்கள இனவாதக் கொடூரங்கள் தமிழர்களது வாழ்வையும், வளத்தையும் அழித்த காலத்தில் சக மனிதர்களாக… தமிழர்களாக… கொஞ்சமேனும் இரக்கமற்றவர்களாக, பாறைகளாக இறுகியே கிடந்தார்கள். ‘முதலில் அவர்கள் தமிழர்களுக்காக வந்தார்கள்… நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தமிழன் அல்ல இஸ்லாமியன்!!!’ என்றே எண்ணியிருந்தார்கள்.
இயேசு நாதரைப் போலவே, தமிழர்களும் இவர்களுக்காக இரக்கப்பட்டார்கள். ‘இதன்பொருட்டு… நாளை இவர்கள் தண்டிக்கப்படலாகாது…’ என்றே பிரார்த்தித்திருந்தார்கள். தமிழர்களது பலம் அழிக்கப்பட்டால், அதன் பின்னர் சிங்கள இனவாத பூதம் இவர்களை நோக்கித் திரும்பும் என்ற வரலாற்றுப் பார்வையை இழந்திருந்ததனால், இன்று, இஸ்லாமியத் தமிழர்களை சிங்கள இனவாதம் இன்னொரு கொலைக் களத்தில் நிறுத்தியிருக்கின்றது.
ரஷ்யப் பிரமாண்டம் பொருளாதாரப் பூகம்பத்தில் சிக்கித் தவித்திருந்த காலத்தில், மத்திய கிழக்கின் எண்ணை வள செல்வந்த நாடுகள் கைகொடுத்திருந்தால், இத்தனை பேரழிவுகள் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியிருக்காது. எதிர்த்து நிற்கும் பலம் எதுவுமற்ற நிலையில், வல்லவன் வெட்டியதே வாய்க்கால் ஆக, மத்திய கிழக்கில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமிய மக்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டதை தமிழர்கள் யாரும் நியாயப்படுத்தியதில்லை. எனினும், கிழக்கில் நடைபெற்ற அத்தனை கூட்டுப் படுகொலைகளிலும் இஸ்லாமிய இயக்கங்களது பங்கேற்பினை மறுதலிக்கவும் முடியாது. சிங்களத்து இனவாதத்திற்குள் உள்வாங்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களே தமிழர்களைக் கருவறுக்கும் ஊடுருவலையும், புலனாய்வு நடவடிக்கைகளையும் சிங்களத்திற்காகச் செய்து முடித்திருந்தார்கள்.
தமிழர்களை இதற்கு மேல் நொருக்க முடியாது என்ற நிலையில், சிங்களத்தின் இனவெறிப் பாய்ச்சல் இஸ்லாமிய சமூகத்தை நோக்கியதாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை வரலாற்றுப் பாடங்களாகக் கொள்வோம். கிறிஸ்தவர்களும், இந்துக்களும் போல், மதம் தாண்டிய தமிழர்களாக… மனிதர்களாக இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இல்லையேல்… இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாததாகிவிடும்!

சுவிசிலிருந்து கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக