23 ஜூன் 2014

பயங்கரவாதிகளுடன் கோத்தபாய,அமெரிக்கா வைத்த சூடு!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளத்தில், பிரசுரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சவின் ஒளிப்படம் ஒன்று கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அளுத்கம, பேருவளைப் பகுதிகளில், கடந்த 15ம் திகதி நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, கடந்த 16ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் கீழ், கருத்துப் பகுதியில், பொது பல சேனாவின் பொதுச்செயலர் அத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோருடன் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச நிற்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் கீழ், இலங்கை பொதுபல சேனா தீவிரவாதிகளுடன், அதிபரின் சகோதரர் - பாதுகாப்புச்செயலர் கோத்தபய ராஜபக்ச என்று விளக்கக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கருத்துப் பகுதியிலேயே இடம்பெறுள்ள போதும், அமெரிக்க தூதரக இணைய கட்டுப்பாட்டாளருக்குத் தெரியாமல் இதனைப் பதிவேற்ற முடியாது என்று அரச தரப்பு விசனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசதரப்பினால், அமெரிக்க தூதரகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தப் படம் மற்றும் விளக்கக்குறிப்பை நீக்க அமெரிக்கத் தூதரகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அரசாங்கத்துக்கும், அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையிலான முறுகல் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்காவே பின்னணியில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக