06 ஜூன் 2014

மகிந்தவின் தந்திரம் மோடியிடம் எடுபடாது!

யாழில் மகிந்தர்
அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்கு அழுத்தத்தை பிரயோகித்திருப்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒருவித கசப்பு தன்மையை தோற்றுவித்திருப்பதாக நவசமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இதே வேளை இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கிடம் ஏமாற்று வாக்குறுதிகளை வழங்கி அவரை ஏமாற்றி வந்தது மோடியிடம் செல்லுபடியாகாது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ உணர்ந்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
கொம்பனித்தெருவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற் கண்டவாறு தெரிவித் தார்.
விக்கிரமபாகு கரு ணாரத்ன இங்கு மேலும் கூறுகையில்,
இலங்கையை பொறுத்த வரையில் சிறுபான்மையினர் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்ற போதிலும் மாகாணத்துக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படாது முட்டுக்கட்டை போடப்பட்ட நிலைமை காணப்படுகின்றது.
வடமாகாண சபையானது அரசாங்கத்தின் பிடிக்குள்ளேயே இருந்து வருகின்றது. இதனால் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாக மாறியிருக்கின்றது.இது ஒரு புறம் இருக்க வடக்கில் நில அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அங்கு பல்லாயிரக்கணக்கான காணிகள் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டன. தற்போது புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுபோதாதமைக்கு தெற்கில் இருந்து சிங்கள மக்களும் வடக்கில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு வெளிநாட்டு சக்திகளை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றது.
ஆனால் கூட்டமைப்பு இதனை தவிர்த்து தமக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடத்துவதன் மூலம் தமது எல்லைகளை எட்டமுடியும். கூட்டமைப்பு அவ்வாறு செயற்பட்டால் நவசமசமாஜக்கட்சியும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக