28 ஜூன் 2014

தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!

தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில். அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.இப்படி எங்கும் வியாபித்துள்ள சினிமாவை வைத்தே ஈழ ஆதரவுக் குரல்களை முடக்கிப் போட முயற்சித்துள்ளார் இலங்கை அதிபரும், தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றியவருமான ராஜபக்சே. ஈழப் போருக்குப் பின் தமிழ் உணர்வாளர்கள், போராட்ட இயக்கங்களை வலுவிழக்கச் செய்யும் அத்தனை வழிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். புலம்பெயர் தமிழர்களால்தான் ஈழத்துக்கு விடிவு என்றெண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த மக்களுக்குள் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். ஒரு நாட்டில் ஆயிரம் இலங்கை தமிழர்கள் இருந்தால், அவர்களுக்குள் 1001 குழுக்கள் உருவாகியிருக்கின்றன. இவர் தலைமை அவருக்குப் பிடிக்காது... அவர் தலைமை இவருக்குப் பிடிக்காது... என தமிழ் நண்டுகளாக அவர்களை பிளவுபட வைத்த ராஜபக்சே, அவர்களில் பலரை தனது பைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார். பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களோ, ஈழப் போராட்டம் தங்கள் சம்பந்தமே இல்லாத சமாச்சாரம் என்ற ரீதியில் கோட்டு சூட்டுடன் கொழும்பு போய் ராஜபக்சே, கோத்தபாயக்களுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வர்த்தக கூட்டாளிகளாகவும் மாறியுள்ளனர். ஆக, புலம்பெயர் அமைப்புகளின் வேர்களை கலகலக்க வைத்த ராஜபக்சேவால், நெருங்கவே முடியாத இடமாகத் திகழ்வது தமிழகம்தான். இங்கே இன்னும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த கோரத்தின் தாக்கம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் தமிழக முதல்வரும் முழுமையாக ராஜபக்சே மற்றும் அவருக்கு ஆதரவு தருவோரை எதிர்த்து வருகிறார். மற்ற யாரைக் காட்டிலும் ராஜபக்சேவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது ஜெயலலிதாதான். தமிழகத்தில் தன் ஆதரவுத் தளத்தைப் பதிக்க அரசியல் பயன்படாது என்பதைப் புரிந்து கொண்ட ராஜபக்சே, சினிமா மூலம் அதைச் சாதிக்க முனைந்துள்ளார்.அதன் முதல் கட்டமாகவே தனது வர்த்தக கூட்டாளியான லைக்கா மொபைல்காரர்களை அய்ங்கரன் கருணா மூலம் கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன முணகல்கள் எழுந்ததோடு சரி. இப்பதோது சர்வம் லைக்கா மயம். முதல் படமே விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி. போதாக்குறைக்கு ஏ ஆர் முருகதாஸ் கிட்டத்தட்ட லைக்கா நிறுவனத்தின் பிஆர்ஓவாகவே மாறியிருக்கிறார். லைக்கா புரொடக்ஷனில் படம் பண்ண இளம் இயக்குநர்கள், பிரபல இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம் ஏஆர் முருகதாஸ். அதுமட்டுமல்ல, பிரபல நிறுவனங்களுடன் லைக்காவும் இணைந்து பெரிய படம் பண்ண தயாராக உள்ளது என்று பேசி வருகிறார். லைக்காவுடன் தன் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் படம் பண்ணும் என்று கூறிவருகிறார் முருகதாஸ். இன்னொரு பக்கம் சிங்கள சினிமாவையே தமிழகத்தில் திரையிட, தன் முகவர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார் ராஜபக்சே. அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று தமிழ் அமைப்புகள் சொன்னபோது, சினிமா வேறு இனப்பிரச்சினை வேறு என்று வெட்டி நியாயம் பேசி, அனைவரையும் பார்க்க வைத்திருக்கிறது அறிவு ஜீவிகள் எனும் பெயரில் வக்கிரங்களைப் படைக்கும் ஒரு கூட்டம். ஆக தமிழ் சினிமாவில் ராஜபக்சேவின் முதல் முயற்சி மகா வெற்றிகரமாக நிறைவேறிய, மகிழ்வோடு மேலும் மேலும் கோடிகளைக் கொட்டத் தயாராகி வருகிறார்கள் லைக்கா மாதிரி நிறுவனங்கள், தமிழர் போர்வையில் சிங்களத்துக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும் வியாபாரிகள்! சொல்வதற்கில்லை.. இன்று டெல்லிக்கு வந்து பெண்களுடன் ஆனந்தக் குளியல் போட்டு கும்மாளமாய் திரும்பிய நாமல் ராஜபக்சேவை வைத்து, நாளை பிரமாண்டமாய் ஒரு தமிழ்ப் படம் உருவாகலாம்... அதை முருகதாஸ்கள் பெருமிதத்தோடு இயக்கவும் செய்யலாம்.
நேற்றிருந்தவர் இன்றில்லாததுதானே சினிமா உலகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக