சாலை விபத்தில் மரணம் அடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.டெல்லியில் விமான நிலையம் அருகே காலை 6.20 மணியளவில் நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்த கோபிநாத் முண்டே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சைப் பலனின்றி காலை 7.20 மணிக்கு அவர் உயிரிழந்தார். முண்டேவின் மரணத்தை அடுத்து அவரது உடல் பரிசோதிக்கப்பட்டது. உள்காயம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பரிசோதனையை அடுத்து அவரது உடல் ராணுவ வாகனம் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முண்டேவின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தனர். கோபிநாத் முண்டேவின் உடல் நாளை மகாராஷ்டிரா மாநிலம் பராலியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக