30 செப்டம்பர் 2013

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக மோதும் மகிந்த கூட்டணி!

வடக்கு மாகாணசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று கோரி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, 7 ஆசனங்கள் கிடைத்துள்ளன.எனினும், இதில், ஈபிடிபிக்கு, யாழ்ப்பாணத்தில் ஒன்றும் கிளிநொச்சியில் ஒன்றுமாக இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வவுனியாவில் இரண்டு, யாழ்ப்பாணத்தில் ஒன்று என மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தலா 1 ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிக ஆசனங்களை வென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தநிலையில், அங்கஜனை விட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற வகையில், தமது கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

29 செப்டம்பர் 2013

மஹிந்தரை திக்குமுக்காட வைத்த பான் கீ மூன்!

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்காவின் அரசியலமைப்புக்குட்பட்ட தேர்தலை நடத்திய மஹிந்த அரசாங்கம் படுதோல்வி கண்டது.
பாரிய தோல்வி முகத்துடன் நிவ்யோர்க் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பலதரப்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என மஹிந்தவிடம், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. செயலாளரின் கேள்விக்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, போர் முடிவடைந்த 4 வருட காலப்பகுதிக்குள் வட மாகாண அபிவிருத்திக்காக 300 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் ஒதுக்கப்படும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி என்ற வகையில் தான், அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனிடம், ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்துள்ளாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 செப்டம்பர் 2013

வடக்கு மாகாண தேர்தல் சதித்திட்டம்-வைகோ

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். 13வது சட்டத் திருத்தத்தை தமிழர்கள் ஏற்காத சூழலில் அச்சட்டத்தை இல்லாது செய்வதற்காக இலங்கை ஐனாதிபதி அரசு களம் இறங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காக்க தவறிய பான் கி மூன் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டுமெனில் அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்பதுடன் இலங்கை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

27 செப்டம்பர் 2013

பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்தே தமிழர்கள் வாக்களித்துள்ளனர்-சம்பிக்க

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடைந்ததன் ஊடாக அரசாங்கம் அரசியல் ரீதியான தவறை செய்துள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்த இன சுத்திகரிப்புக்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையாகும். எனினும் வடக்குத் தேர்தலானது வடக்கில், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றாமல் இன சமநிலையற்ற நிலையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது. அத்துடன் இது தமிழ் சுயாட்சிக்கு கைகெடுப்பது போன்ற செயல்.இதன் முடிவுகள் படுபயங்கரமானதாக இருக்கும். பிரபாகரனின் புதிய நாசிசவாதம் இந்த தேர்தலுடன் முன்னோக்கி வந்துள்ளது. இதனால் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைவதுடன் நாடுகடந்த தமிழ் அரசுக்கான ஒருங்கிணைவும் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து ஈழத்தை உருவாக்க சர்வதேச ரீதியில் ஆதரவை பெறுவதற்கான விடயங்களை வடபகுதி மக்கள் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழ் சமூகம் ஜனநாயக சமூகம் அல்ல. பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்தே வாக்களித்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ் செய்திகளுக்கு அமைய மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மக்கள் பேசுவதற்கான சுதந்திரமில்லை.மேலும் இந்த தேர்தல் மூலம் வெளிநாட்டு தூதரங்கள் இலங்கையின் வடக்கை ஆளுகை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை ,இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ் நாடு அரசாங்கம் போன்ற வெளிநாட்டு சக்திகள் வடக்கு மற்றும் தென் பகுதி மக்கள் ஐக்கியமாக இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தன என்றார்.

26 செப்டம்பர் 2013

முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனம்!

முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனத்தை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நடைபெற்று முடிந்த வட மாகணாசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றில் ஒரு ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அயூப் நஸ்மீன் என்பவருக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளது. ஏனைய போனஸ் ஆசனம், ஐந்து மாவட்டங்களி;லும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தலா ஒரு ஆண்டு வீதம் மாகாணசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளது.
வட மாகாணசபைக்காக முதலமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். இதன் அடிப்படையில் அமைச்சர்களை
நியமிப்பது குறித்து இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

25 செப்டம்பர் 2013

இன்று ஐ.நாவில் நவநீதம்பிள்ளை வாய்மொழி அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று முற்பகல் 10 மணிக்கு இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளார். கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கைக்குப் பயணம் செய்த நவநீதம்பிள்ளை, இந்தவாய் மொழி மூல அறிக்கையில் தனது இலங்கை பயணத்தின் போது அவதானித்த விடயங்கள் மற்றும் மனித உரிமை விடயங்களை முன்னேற்றுவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறு பான்மை இனங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடருக்கு முன்னர் இலங்கை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் பற்றி இன்றைய உரையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு இடம்பெறவுள்ள அவரின் வாய்மொழி மூல அறிக்கையைத் தொடர்ந்து உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதற்குப் பதிலளித்து உரையாற்றுவார். வெள்ளிக்கிழமையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நிறைவுபெற உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

24 செப்டம்பர் 2013

வடக்கில் ராணுவ அச்சுறுத்தல் உள்ளமை உண்மை!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார் தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்.கோபாலசுவாமி. இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் போதியளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொழும்பில் தமது தேர்தல் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்ட பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக் கூறினார். தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சியால் அரச ஊழியர்கள் பயன்படுத்தப் பட்டமையைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரான காலப் பகுதிகளிலும் உதவிகள், இலவசங்கள் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதான தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் சட்ட உதவியாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் கூறியிருந்தமையை இந்தச் செய்தயாளர் சந்திப்பில் கோபாலசுவாமி மேற்கோள்காட்டினார். தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் நேரடியாகவும், சிவிலிலும் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமை, அச்சுறுத்தியமை போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தை தமது உத்தியோகத்தர்களால் நேரடியாக அவதானிக்க முடியாமல் போனமைக்கு மன்னிப்புக் கோரினார். இந்தத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமானதாகவும் நடைபெற்றதா என்று இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, வாக்களிப்பு நிலையத்துக்குள் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் பதிலளித்தார். இலங்கை தேர்தல் திணைக்களத்துக்கு அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் போதுதான் மிகச் சிறப்பாக செயற்பட முடியும் என்றும் கோபாலசுவாமி கூறினார்.

23 செப்டம்பர் 2013

முன்னர் எப்போதுமே காணா சரித்திர வெற்றி-இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வெற்றி நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அமோக வெற்றி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று தெரிவித்தார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு, யாழ். ரில்கோ விடுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 80 வீதமான ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான ஆசனங்களை கூட்டமைப்பு தனதாக்கி உள்ளது என்றும் அவர் அறிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வெற்றியானது 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வெற்றியிலும் பார்க்க மகத்தானது என்று அவர் மேலும் கூறினார். " வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வெற்றியும் சிறப்பானது தான். எனினும் அது தொகுதி வாரியான தேர்தலின் கீழ் கிடைத்த வெற்றி. மாகாண சபைத் தேர்தலில் இப்போது கிடைத்திருக்கும் வெற்றி, விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்கீழ் பெற்ற வெற்றி. இவ்வாறு விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தின் கீழ் கிடைத்த வெற்றி என்பது நிச்சயம் 1977 இல் பெற்றுக்கொண்ட வெற்றியை விடவும் மேலானது.'' மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகத் தெளிவாகவே உள்ளது. ஐக்கியமான பிளவு படாத நாட்டுக்குள் பாதுகாப்போடும் சுயமரியாதையோடும் கெளரவத்தோடும் போதிய சுயாட்சியைப் பெற்று தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக, கலாசார அபிலாஷைகளை அடையவே விரும்புகின்றனர். இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளை, அரசும் தனது பங்களிப்பை முழுமையாக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் சந்தித்த பலவிதமான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வடமாகாண தமிழ் மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என அனைவரையும் வற்புறுத்தி கேட்கிறோம். எமது மக்கள் முழுமையாக எம்மை ஆதரித்ததற்காக எங்கள் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அவர்கள் தமது அபிலாஷைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்வோம்''என்றார் சம்பந்தன்.

22 செப்டம்பர் 2013

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சீருடையினர்!

நெல்லியடி பிரதேச செயலகத்தை அண்மித்து அரச தரப்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சீருடையினர் சுவரொட்டிகள் ஒட்டியபோது அதனைத் தட்டிக் கேட்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கழுத்தில் பிடித்துத்தள்ளி சீருடையினர் அவரைத் தாக்க முயன்றதாகவும் தான் பொலிஸ் பொறுப்பதிகாரி என்று கூறியதை அடுத்து அவரைச் சீருடையினர் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆயினும் அங்கு நின்ற நான்குக்கும் மேற்பட்ட பொலிஸாரை கையில் அகப்பட்ட தடிகளாலும், கை கால்களாலும் தாக்கியுள்ளனர் சீருடையினர். நிலைமை மோசமடைந்ததனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்து சீருடையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரே இந்தச் சம்பவம் இடம் பெற்றது. எனினும் இந்தச் சம்பவம் வெளியே தெரியாத வாறு மூடி மறைக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாகவே சீருடையினர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தனர். இதன் போது அந்த வழியே ரோந்து சென்ற பொலிஸார் அதனைத் தட்டிக் கேட்டபோதே அவர்கள் மீது சீருடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்ற போது அவர் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோதே பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 150 இற்கும் மேற்பட்ட சீருடையினர் அங்கு நின்றிருந்துள்ளனர். இது தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியிருந்தார். எனினும் இறுதியில் "அதுபற்றி தற்போது கூற முடியாது'' என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

21 செப்டம்பர் 2013

அஞ்சல் வாக்களிப்பு: வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சி பெருவெற்றி!

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குமான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து மாவட்ட அஞ்சல் வாக்களிப்பிலும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றுள்ளது.

அஞ்சல் வாக்களிப்பில் அதிகபட்சமாக யாழ்.மாவட்டத்தில் 86 வீதமான வாக்குகளை தமிழரசுக் கட்சி அள்ளியுள்ளது.

மன்னார் மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 1300 வாக்குகள் -70.19 %
ஐ.ம.சு.மு. - 408 வாக்குகள் -22.03 %
முஸ்லிம் காங்கிரஸ் – 135 வாக்குகள் -7.29 %
ஐ.தே.க. - 07 வாக்குகள்
பதிவான வாக்குகள் - 1869
நிராகரிக்கப்பட்டவை –17
செல்லுபடியானவை – 1852

யாழ்.மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 7625 வாக்குகள் - 86.30 %
ஐ.ம.சு.மு - 1099 வாக்குகள் - 12.44 %
ஐ.தேக. - 35 வாக்குகள்
சுயே.குழு.6 -16 வாக்குகள்
சுயே.குழு.7 -12 வாக்குகள்
பதிவான வாக்குகள் - 8949
நிராகரிக்கப்பட்டவை – 114
செல்லுபடியானவை – 8835

வவுனியா மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 901 வாக்குகள் - 66.94 %
ஐ.ம.சு.மு. - 323 வாக்குகள் -24.00 %
ஐ.தே.க - 65 வாக்குகள் - 4.83 %
முஸ்லிம் காங்கிரஸ் – 24 வாக்குகள்
ஜேவிபி -15 வாக்குகள்
ஜ.க -12 வாக்குகள்
சுயே.குழு.6 - 05 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 1,371
நிராகரிக்கப்பட்டவை – 25
செல்லுபடியானவை – 1,346

கிளிநொச்சி மாவட்டம் - அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 756 வாக்குகள் - 82.26 %
ஐ.ம.சு.மு - 160 வாக்குகள் - 17.41 %
ஐ.தே.க - 01 வாக்கு
ஜ.ஐ.மு -01 வாக்கு
இ.தொ.க -01 வாக்கு
பதிவான வாக்குகள் - 929
நிராகரிக்கப்பட்டவை – 10
செல்லுபடியானவை – 919

முல்லைத்தீவு மாவட்டம் - அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி - 646 வாக்குகள் - 81.26 %
ஐ.ம.சு.மு - 146 வாக்குகள் - 18.36 %
ஐ.தே.க - 02 வாக்குகள்
ஜனநாயக கட்சி – 1 வாக்கு
பதிவான வாக்குகள் - 800
நிராகரிக்கப்பட்டவை – 05
செல்லுபடியானவை – 795

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் இன்று (21) நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் யாழில் 60 வீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகளவான வாக்குகள் பதியப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவுகள் மாலை 4 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது வாக்கெண்ணும் பணிகளுக்காக யாழ். மத்திய கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
இம்முறை யாழில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து பஸ்கள் மூலம் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
அதேவேளை, நெடுந்தீவில் இருந்து வழமையாக ஹெலி மூலம் எடுத்து வரப்படும் வாக்கு பெட்டிகள் இம்முறை கடற்படையின் படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பஸ்கள் மூலமே வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.
வழமையாக யாழ். மாவட்ட செயலகத்திலேயே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும். ஆனால் இம்முறை யாழ். செயலகம் திருத்தி அமைக்கப்பட்டதனால் அங்கு போதிய இட வசதிகள் இல்லாத காரணத்தால் யாழ். மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் யாழ். மத்திய கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையம் அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த போதிலும் பின்னர் அதற்கு சம்மதித்தனர்.
அதேவேளை, இன்று முழுவதும் யாழில் நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் பெருமளவான வன்முறை சம்பவங்களில் இராணுவத்தினரே ஈடுபட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் வன்முறைகள் இடம்பெற்று இருக்காவிடின் இன்னும் அதிகளாவான வாக்குகள் பதியப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்த பின் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 89 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வாக்கெண்ணும் நிலையங்களில் முதற்கட்டமாக தபால் மூலமான வாக்கு எண்ணப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தை தவிர வேறெந்த அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குப்பதிவு தொடங்கியது!


விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பெரும் இனப்படுகொலையுடன் முடிந்தது. அதன்பிறகு, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு தொடங்கியது. அத்துடன் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. 3 மாகாணங்களிலும் மொத்தம் 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 24 ஆயிரம் போலீசார் உள்பட 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மிக அதிக அளவில், யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த கட்சிக்கு முக்கிய போட்டியாக, அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது ராணுவத்தினர் மிகவும் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக, தமிழர் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. சில தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் பிரசாரம் செய்து வந்தனர். ராணுவமே சில வேட்பாளர்களைக் களமிறக்கியும் உள்ளது. இந்திய ஓட்டுப்பெட்டி இலங்கையில் மரத்தினால் ஆன ஓட்டுப்பெட்டிகளை தேர்தலுக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.வரலாற்றுச் சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி, மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு முதன் முதலில் 1988-ம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தனித் தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரம் அடைந்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது.


20 செப்டம்பர் 2013

துப்பாக்கிகளின் நிழலில் தேர்தல் வாக்களிப்பு!

சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் வடபுலத்தில் சிறிலங்கா அரச நிர்வாக கட்டமைப்பின் ஒர் அங்கமான வட மாகாண சபைத் தேர்தல் நிலைவரம், அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
துப்பாக்கிகளின் நிழலின் கீழ் இலங்கைத் தமிழர்களின் வாக்களிப்பு என தனது வர்ணனையினை வரைந்துள்ள அனைத்துலக செய்திநிறுவனமான (AFP) ஏஎவ்பி, இராணுவ அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் அழிவுகள் மற்றும் போருக்கு பிந்திய அதிகாரப் பகிர்வு முயற்சிகளுக்கு மத்தியில், வட இலங்கையில் உள்ள தமிழ் வாக்காளர்கள் தங்களுக்கான அரை அதிகார சபைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கோட்டையாக அன்று விளங்கிய இப்பகுதியில், அனைத்துலக அழுத்தங்களின் காரணமாக இந்த தேர்தலை சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துகின்றார் எனவும் ஏஎவ்பி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
போர் குற்றங்கள் குற்றச்சாட்டுக்கள் பின்தொடர்கின்ற நிலையில் ,பல லட்சம் மக்களை சுற்றி இராணுவம் தன்னுடைய இருப்பை இப்பகுதியில் பராமரித்து வருவதாகவும் அச்செய்திக்குறிப்பில் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழர்களின் வாக்களிப்புக்கு இராணுவ வெளியேற்றத்தினை தமிழர் தரப்பு வேண்டி நிற்பதாக மற்றுமொரு அனைத்துலக செய்தநிறுவனமான ரொய்ரெர்ஸ் செய்தி வரைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

19 செப்டம்பர் 2013

சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக் கொடியா?நவிபிள்ளை கேள்வி

இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.
இந்தச் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அது அகற்றப்படவேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை என்று அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியிருக்கிறார்.
இதே விஜயத்தின் போது, இந்த சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டிருப்பது பற்றிய பிரச்சினையிலும் நவி பிள்ளை , நல்லிணக்கம் மற்றும் அனைத்தினங்களையும் ஒன்றிணைத்தல் தொடர்பான கூட்டமொன்றில், கேள்வியொன்றை எழுப்பியதாக வரும் சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்திருக்கும், அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில், இந்த கொடி விவகாரத்தை நவி பிள்ளை விவாதித்தாகக் கூறினார்.
“ இலங்கை காலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமானதா என்று ஆணையர் கேட்டார். மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் இதை மற்றவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு செயலாகப் பார்க்கலாம்”, என்றும் அவர் கூறினார்.
இதற்கு மாறாக இலங்கை அரசு, இந்த சதுக்கத்தில் , தேசியக் கொடியை பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். தேசியக்கொடி, அனைத்து இலங்கையர்களுக்கும் , அவர்கள் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மீறி, சொந்தமானது, அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி, என்று நவி பிள்ளை ஆலோசனை வழங்கினார் என்று ரூபர்ட் கால்வில் கூறினார்.

நன்றி:பி.பி.சி தமிழ் 

அனைத்துலக கண்காணிப்புக் குழுவினர் அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து அனைத்துலக தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பு நிலையங்களை அடைவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக, அனைத்துலக தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவினர் யாழ்ப்பணத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்துள்ள வாக்களிப்பு நிலையங்களைப் பார்வையிட்டதுடன், அங்கு வாக்களிக்கச் செல்வதற்கு வாக்காளர்களுக்கு வசதியுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து கருத்து வெளியிட்ட அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர்,
“காங்கேசன்துறைத் தொகுதியில் உள்ள 11 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
இவர்களில் பலர் தாம் வதியும் இடத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்தை அடைய 30 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த வாக்காளர்கள் இலகுவான முறையில் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

18 செப்டம்பர் 2013

கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து சுயேட்சைக்குழு தேர்தலில் இருந்து விலகல்!

திரு.கி.சிவாஸ்கரனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட சுயேட்சைக்குழு இல.8, ஜம்புக்காய் சின்னத்தில் வடமாகாணசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. தற்பொழுது எமதுகுழு போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறுவது உறுதி என்பதை அரசாங்கம் உள்ளிட்ட சகலரும் உணர்ந்துள்ளமையை மக்கள் சந்திப்பினூடாகவும், ஊடக அறிக்கைகளின் மூலமும் அறிந்துகொண்டுள்ளோம். இந்நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்விற்கும் இடையூறாக இல்லாமல் கூட்டமைப்பின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் நாம் தேர்தலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம்.
நடைபெறவுள்ள தேர்தல் உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் முக்கியமான தேர்தலாகக் கணிக்கப்படுவதாலும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் அவர்களது உரிமைகள் தொடர்பாகவும் இத்தேர்தலானது பல மாற்றங்களை உருவாக்கும் என்ற அடிப்படையிலும் மாகாணசபையை மிக அதிகப்படியான பெரும்பான்மையுடன் வெல்ல வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் நீண்ட நெடிய துயரமிக்க வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு தமது முழு உரிமைகளுடன் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அவற்றிற்கான இடத்தைக் கொடுக்கும் முகமாகவும் நாம் இத்தேர்தலிலிருந்து விலகுகின்றோம்.
இன்றுவரை எமக்கு ஆதரவாகப் பரப்புரைகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது ஆதரவாளர்கள் அனைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டுமென்று வேண்டுகின்றோம்.

17 செப்டம்பர் 2013

கூட்டமைப்பே வெற்றி பெறும்-யாழ்,ஆயர்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நெதர்லாந்து தூதுவரிடம் அடித்துக் கூறினார் யாழ்.மறை மாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை."முன்னரும் தமிழ் மக்களின் கட்சியே வெற்றி பெற்றது. இந்த முறையும் தமிழ் மக்களின் கட்சிதான் வெல்ல வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்'' என்று அவர் மேலும் கூறினார்.வட மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நெதர்லாந்துத் தூதுவர் லூயிஸ் பியர் மற்றம் தூதரக அரசியல் விவகாரச் செயலாளர் மீனி லங்கோ ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.இவர்கள் நேற்று மாலை யாழ்.ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்புக் குறித்து யாழ்.ஆயர் தெரிவித்தமை வருமாறு:நெதர்லாந்து அற்கு நான், முன்னரும் தமிழ் மக்களின் கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. அவ்வாறு தான் நடைபெற வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெல்லும் என்று கூறினேன். மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் இருக்கின்றனர். இந்ரசின் நிதியுத வியில் புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் யாழ். கோட்டையின் நிர்மாணப் பணிகளுக்காக தூதுவருக்கு நன்றி தெரிவித்தேன். இதனை அரசிடம் ஒப்படைக்காமல் யாழ்.மாநகர சபையிடம் ஒப்படைத்தால், எல்லா மக்களும் சென்று வரக் கூடியதாக இருக்கும் என்று கூறினேன். நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர் என அவர்களிடம் தெரிவித்தேன். இதன் போது வட மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்று நெதர்லாந்துத் தூதுவர் என்னிடம்ட கேட்டார். அததத் தேர்தல் இரா ணுவத்தினரின் தலையீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.இங்கு சுமுகமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றே தாங்களும் விரும்புவதாகத் தூதுவர் என்னிடம் தெரிவித்தார் என்றார்.நெதர்லாந்து தூதுவர் நாளை வரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

16 செப்டம்பர் 2013

வெளிநாட்டில் இருப்பவர்கள் மூன்றாம் நபர்களாம்!விக்னேஸ்வரனின் விளக்கம்

தமிழரும் சிங்களவரும் கணவன் - மனைவி போன்றவர்கள் என்று தான்,'த ஹிந்து' நாளிதழுக்குக் கூறவில்லை என்றும், தனது கருத்தை குறித்த நாளிதழ் திட்டமிட்டு திரிபுபடுத்தியுள்ளதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், 'தி ஹிந்து' நாளிதழுக்கு அளித்த செவ்வி தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
“ அண்மையில் 'த ஹிந்து' நாளிதழுக்கு செவ்வி வழங்கியிருந்தேன்.
அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகிறது.
'த ஹிந்து' நாளிதழ் செய்தியாளர் என்னிடம் 10 -12 கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அத்தனை கேள்விகளுக்கும் நாள் அளித்த பதில்களில் ஒன்றாவது வெளிவரவில்லை.
இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார்.
அந்த செவ்வியில் நான், தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்றும் கூறியிருந்தேன்.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல்கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது நலனுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு பாவிப்பது ரெனிஸ் பந்து அடிப்பது போல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் பிரிவினையை ஒரு தீர்வாக கூறுவது, ஒரு கணவன்- மனைவி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் மணநீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.
இதில் கணவன் - மனைவி என்று நான் தமிழரையும் சிங்களவரையும் குறிப்பிடவில்லை. மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவே அவ்வாறு குறிப்பிட்டேன்.
மூன்றாம் நபர் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன் - மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ, அதுபோலத் தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிந்தியாவில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்று கூறினேன்.
தென்னிந்திய மக்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கு எனக்குப் பல நண்பர்கள் இருக்கின்றனர்.
அவர்களது அனுசரணையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாணசபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது.
அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக 'த ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது, மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

15 செப்டம்பர் 2013

விக்னேஸ்வரனை முதல்வராக்கக் கூடாது!

விக்னேஸ்வரன் 
தமிழினத்தை கொச்சைப்படுத்தும் சி. வி. விக்னேஸ்வரனுக்கு வடமாகாண முதலமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. சி. வி. விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழர் விரோத பத்திரிகையான "இந்து" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தமிழக மக்களை ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிட வேண்டாம் எனக் கேட்டுள்ளார்.
இலங்கையில் நடப்பது சிங்களவருக்கும் தமிழர்களுக்குமான குடும்பப்பிரச்சனை என்றும் இப்பிரச்சனையில் அயலவர்களான தமிழக மக்களை தலையிட வேண்டாம் என்றும் தமிழக மக்களை அவமானப்படுத்தியும் அலட்சியப்படுத்தியும் உள்ளார்.
சில வாரத்திற்கு முன் இந்தியாவில் வெளியாகும் மற்றொரு பத்திரிகைக்கும் இதே கருத்தை தெரிவித்தார்.
கொழும்பில் பிறந்து வளர்ந்து சிங்களவர்களுடன் ஒன்று பட்டு வாழும் விக்கினேஸ்வரனுக்கு தமிழர்கள் பட்ட அல்லல்களையும், துயரங்களையும், வேதனைகளையும், அழிவுகளையும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்களின் எழுச்சி நடவடிக்கைகளைக்கூட விக்னேஸ்வரன் கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மரணித்த தியாகிகளின் உணர்வுகளைப்பற்றி சிங்களவர்களுடன் உல்லாசமாக வாழும் விக்னேஸ்வரனுக்கு எப்படித் தெரியும்.
தமிழர்களின் அடிப்படை உணர்வுகளையும் துயரங்களையும் வேதனைகளையும் தெரியாத விக்னேஸ்வரனை எமது முதலமைச்சர் ஆக்குவது எமக்கு நாமே தூக்கு கயிறு மாட்டுவதற்கு சமம்.
முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமானால், கற்பழிக்கப்பட்ட எமது தாய்க்குலத்துக்கு நியாயம் வேண்டுமானால், 90,000 விதவைகளுக்கு மானம் வேண்டுமானால், விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கப்படக் கூடாது.
வேட்பாளர் விக்னேஸ்வரனே தமிழர்களை அவமானப்படுத்தும் போது, முதலமைச்சராக அவர் வந்துவிட்டால், அவர் செய்யும் தமிழின விரோத நடவடிக்கைகளை எவரும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். இதற்கு ஒரே வழி விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராக வருவதை தடுப்பதேயாகும்.
"வெள்ளம் வரும்முன்பே அணைகட்டுவோம்-விக்னேஸ்வரனை முதலமைச்சராக வராமல் தடுப்போம்".

14 செப்டம்பர் 2013

வடக்கு மக்களை மிரட்டுகிறார் பசில்-விக்கிரமபாகு

வடக்கு மக்களை அச்சுறுத்துவதற்காகவே வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தில் இருந்து தான் விலக போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்குள் சென்றால் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகளை நிறுத்த போவதாக அமைச்சர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
வடக்கின் வசந்தம் தொடர்பான நிதியத்தை வைத்திருக்க வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ வடபகுதி மக்களிடம் கூறியுள்ளார். மத்தியஸ்தர் ஒருவரிடம் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தை ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளதன் பின்னணியில் வடக்கு மாகாண சபைத் தேர்தலே இருக்கின்றது.
அரசாங்கம் வழங்கும் நிதியுதவி தொடர்ந்து கிடைக்க வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் தெரிவித்திருப்பது அருவருக்கதக்கது என்பதுடன் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் விக்ரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்
.

13 செப்டம்பர் 2013

ஐந்து முனைகளிலிருந்து சிங்களம் மீது தாக்குதல்!

தமிழர்களின் பிரதேசமாகிய வடக்கின் ஐந்து முனைகளிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மீது கடும் தாக்குதல் நடத்தப்படவுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய களமாக யாழ்.மாவட்டமே திகழப்போகின்றது. இங்குதான் நாங்கள் ஆட்லறிகள், பீரங்கிகள் போன்ற மிகப் பெரிய ஆயுதங்களை வைத்துத் தாக்கவுள்ளோம்.
எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஓடப்போகின்றார்கள் என்று வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் ரி.பிரகாஸ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அராலி மாவத்தை விளையாட்டுக் கழகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணம் என்பது தமிழ் மக்களுக்கு சொந்தமானது. இந்த மாகாணத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும். தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடிய அனைத்து திறமைகளையும் கொண்டிருக்கின்றனர். இந்த மாகாணத்தை கடந்த காலத்தில் வான்படை, தரைப்படை, கடற்படை போன்ற சகல கட்டமைப்புகளுடனும் தமிழர்கள் ஆட்சி செய்தார்கள். அதேபோன்று இனிவரும் காலத்திலும் இந்த மாகாண சபையை நாங்களே ஆட்சி செய்ய வேண்டும்.
இங்கே எமது வீடுகளை, எமது சனசமூக நிலையங்களை, எமது திணைக்களங்களை நாங்களே ஆட்சி செய்கின்றோம். அதேபோன்று எமது மாகாண சபையையும் நாங்களே ஆட்சி செய்ய வேண்டும். நாங்கள் தென்னிலங்கையின் ஆட்சியைக் கேட்கவில்லை. அங்குள்ள சிங்கள மக்களுக்கு தெரிந்த சின்னங்கள் வெற்றிலையும் யானையும் மணயும் தான்.
ஆனால், எமது மக்களுக்கு தெரிந்த சின்னம் வீடு. இந்த வீட்டுக்கு நேரே புள்ளடியிடுகின்ற பாரிய தாக்குதலை தமிழ் மக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தவுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த தாக்குதலைத் தொடுக்கவுள்ளனர். இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் அரச தரப்பு ஒடவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி எமது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் ஆட்சி அமைவது உறுதி. தமிழ் மக்கள் இதற்கான ஆணையை வழங்கத் தயாராகிவிட்டனர் என்று தெரிவித்தார்.

12 செப்டம்பர் 2013

எழிலனை எவரும் ஒப்படைக்கவேயில்லை-சிங்களப்படை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட எவரும் தம்மிடம் சரணடையவோ, எவரையும் தாம், யாரிடம் இருந்தும் பொறுப்பேற்கவோ இல்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும், எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களின் மீதான விசாரணையிலேயே, சிறிலங்கா இராணுவம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
2009ம் மே மாதம் 18ம் நாள் எழிலன் உள்ளிட்ட பெருமளவு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள், அரசின் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில், சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இவர்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்ததாகவும், மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் உறவினர்கள் வவுனியா மேல்நீதிமன்றில் முறையிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவ தரப்பில் இழுத்தடிப்புகளின் பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே, தம்மிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆட்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் முன்னிலையான
மூத்த சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் நீதிபதியிடம் கோரினார்.
இதையடுத்து, இதுதொடர்பான விசாரணையை நடத்தி கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, மேலும் 7 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் குறித்து, வரும் ஒக்டோபர் 23ம் நாள் சிறிலங்கா இராணுவத் தரப்பைப் பதிலளிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 செப்டம்பர் 2013

சோனியாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை!

அமெரிக்காவில் சிகிச்சைக்காகச் சென்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, 1984 டில்லி சீக்கியர் படுகொலை வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் ஒன்று விசாரணைக்கான அழைப்பாணை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து பதிலளித்த இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி, இந்த வழக்கு குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.
ஆனால் சோனியா காந்தி தேசிய வழிகாட்டுதல் கவுன்சிலின் தலைவர் என்ற வகையில் அவருக்கு இந்திய அரசும் அனைத்து சட்டரீதியான உதவிகளையும் தரும் என்றார்.
சீக்கியர்கள் படுகொலை சம்பவம் குறித்த பல்வேறு வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன, சஜ்ஜன் குமார் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு மீது அரசே மேல் முறையீட்டைச் செய்திருக்கிறது.
ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்கு நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
ஆனல் அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு விளம்பரத்துக்காகத் தொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவு
அமெரிக்காவில் ஒரு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் மருத்துவமனைக்கோ அல்லது அவருடன் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளிடமோ இந்த அழைப்பாணையை வழங்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு என்ற காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் அமைப்பு ஒன்று, இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறது.
சோனியா காந்திக்கு எங்கு சென்று சிகிச்சை பெறுகிறார் எதற்காக சிகிச்சை பெறுகிறார் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

10 செப்டம்பர் 2013

மகிந்தவும் சரத்தும் சர்வதேச நீதிமன்றில் ஏறும் காலம் தொலைவில் இல்லை!

சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளிகள் என்பதை நாங்கள் நேரடியாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த இருவரும் அப்பாவித் தமிழ் மக்களை கொண்று குவித்து யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதிற்கு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றங்களை ஒப்புக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. சரத் பொன்சேகா யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருக்கும் போதே அதிகமான இளைஞர்கள் யுவதிகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டனர். அதே போன்று ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். அதற்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளது. காலம் வரும் போது, அதை உரியவர்களிடம் கையளிப்போம் என திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,யாழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்கள் யாரும் சிங்கள இராணுவத்திடம் சரணடையவில்லை என சரத் பொன்சேகா கூறியமை குறிப்பிடத்தக்கது.
பலத்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

09 செப்டம்பர் 2013

இந்து முறைப்படி திருமணம் செய்தார் இஸ்லாமிய ஆசிரியர்!

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
இது குறித்த மேலும் தெரியவருவதாவது
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியர் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுடன் காதல்வயப்பட்டிருந்தார். கிராம மக்களின் கவனத்தை ஈர்த்த காதலர்களது விடயம் தீருமண பதிவுக்கு முடிவானது. குறித்த காதலன் தமிழ் பெண்ணை திருமணம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்து கரம்பிடித்துக்கொண்டுள்ளார்.
இதன் படி இவர்களுக்கான திருமணத்தை இந்துமத முறைப்படி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் நடாத்திவைத்துள்ளார்.

08 செப்டம்பர் 2013

முஸ்லீம்கள் குறித்து பேச கூட்டமைப்புக்கு அதிகாரம் உண்டு!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர் நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரஸ்தாபித்திருந்தமை வரவேற்கத்தக்க ஒரு விடயம். முஸ்லிம்கள் குறித்து கரிசணை காட்டி, கருத்துகளை வெளியிடும் அரசியல் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
நவிபிள்ளை முஸ்லிம் காங்கிரஸைக் கூடச் சந்திக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முஸ்லிம்கள் தொடர்பில் நவிபிள்ளையிடம் எடுத்துரைதத்தாகவும் ஆனால், இதில் ஏதேனும் சதி இருக்கலாம் என்ற தோரணையில் சிலர் கருத்துகளை வெளியிட்டு குழப்ப நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது தொடர்பில் கேட்டபோதே வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமை ஆணையர் இலங்கை வந்திருந்தபோது, அவரைச் சந்திப்பதற்கான வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தோம். இருப்பினும் அது கைகூடவில்லை. இது தொடர்பில் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசியல் கட்சிகளைச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டியது இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குரிய பணியாக இருந்தது. இந்த நிலையில் தமது அலுவலகத்தால் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்க முடியாமல் போனதாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலக உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், இது தொடர்பில் நாம் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்து எதனையும் வினவவில்லை. இந்தப் பிரச்சினையை பெரிதாக நாங்கள் கருதவும் இல்லை. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் அவர்கள் நவிபிள்ளையைச் சந்திப்பதற்கு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகமோ அல்லது இலங்கை வெளிவிவகார அமைச்சோ அனுமதி வழங்கியிருக்கலாம். அது வரவேற்கத்தக்க விடயமே. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நாயகம் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்காதிருந்தால் அவரது விஜயம் அர்த்தமற்றதாகப் போயிருக்கும். கட்சி என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கினால் ஏன் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று நாம் எந்தத் தரப்பையும் கேட்கவும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் மக்களின் பாரிய சக்தியாகும் என்பதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அவர்கள் அனுமதி கேட்காமலேயே அழைக்கப்பட வேண்டியவர்கள்.
நிலைமைகள் இவ்வாறிருக்க, இந்த விடயத்தில் நாமே அலட்டிக் கொள்ளாத நிலையில் வேறு சில முஸ்லிம் கட்சிகளும் சில அமைப்புகளும் எங்களுக்காக அறிக்கை விடும் தேவை அவர்களுக்குரியதல்ல.
எங்களைச் சந்திப்பதற்கு நவிபிள்ளை எந்த விதத்திலும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அமைச்சர் ஹக்கீமை அமைச்சர் மட்டத்தில் நவிபிள்ளை சந்தித்த போது வழமைக்கு மாறான முறையில் முஸ்லிம்கள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் அவராகவே கேட்டறிந்து கொண்டதனை நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம். இதனை விட நாம், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் 44 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றினையும் அவரிடம் வழங்கியுள்ளோம். அத்துடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவரிடம் பிரஸ்தாபித்துள்ளது.நிலைமை இவ்வாறிருக்க இந்த விடயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் அறிக்கை விடுவது என்பது கேலிக்குரியது.
செல்லாக் காசாகப் போயுள்ள தங்களது வங்கரோத்துக் கட்சிகளைச் சந்திக்க நவிபிள்ளை மறுத்தார் என்பதற்காக அதனைப் பிரசாரப்படுத்துவதற்கு எமது கட்சியையும் உள்வாங்கிக் கொள்ளும் தேவை பிற கட்சிகளுக்கு வேண்டப்படாத ஒன்றாகும்.
தமிழை பெரும்பான்மையாகப் பேசும் பிராந்தியங்களில் வாழும் இரு சிறுபான்மைச் சமூகங்களை அதிருப்திக்குள்ளாக்கி பிரச்சினைகளை மேலும் வளர்க்க விரும்பும் இவ்வாறான வங்கரோத்துவாதிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்.
புத்தளம் பள்ளிவாசலில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தவர் அமரர் தந்தை செல்வா என்பதனை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நினைவு கூருகிறது என்றும் ஹஸன் அலி தெரிவித்தார்.

07 செப்டம்பர் 2013

கூட்டமைப்புக்கு அமோக வரவேற்பளித்தனர் யாழ்,வணிகர்கள்!

யாழ். நகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று (07) காலை 10 மணியளவில் நகர் புற கடைகளை சுற்றி வலம் வந்தனர்.
நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு யாழ். நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று கடை உரிமையாளர்கள் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
யாழ். நகர வர்த்தக சங்க தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இ.ஜெயசேகரன் தலைமையில் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோரே நகர் புற கடைகளை சுற்றி வந்து தமக்கான ஆதரவை திரட்டி கொண்டனர்.
இதன்போது கடை உரிமையாளர்கள் ஊழியர்கள் இவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, வெடி கொளுத்தி, வரவேற்றனர்.

கெல்லம் மேக்ரே பொய் சொல்கிறாராம்!

70 ஆயிரம் பொதுமக்கள் இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதாக செனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரே வெளியிட்டுள்ள தகவல் முற்று முழுதான பொய்யான தகவல் என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மெக்ரே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார். முன்னர் 40 ஆயிரம் என கூறினார். தற்போது அந்த எண்ணிக்கையுடன் மேலும் 30 ஆயிரத்தை சேர்த்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 09 ஆம் திகதி தனது வாய்மொழிமூலமான அறிக்கையை முன்வைதற்கு முன்னர் இப்படியான பொய்களை அவர் உலகத்திற்கு கூறிவருகிறார் என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கெல்லம் மெக்ரே வடக்கில் நடைபெற்ற போரின் போது எடுக்கப்பட்டதாக கூறும் சில புகைப்படங்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளார். இலங்கை 70 ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்துள்ளதால், பிரித்தானியா இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துக்கொள்ள கூடாது என மெக்ரே வலியுறுத்தியுள்ளார்.

03 செப்டம்பர் 2013

வடக்கில் படைகளை வெளியேற்றுவோம்-விக்னேஸ்வரன் சூளுரை

வடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான இளைப்பாறிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து வடமராட்சி, அல்வாய் மாலி சந்தி, மைக்கல் மைதானத்தில் நேற்று மாலை மாபெரும் பிசாரக் கூட்டம் நடைபெற்றது. கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது: வடமராட்சிப் பிரதேசம் அறி வுக்குப் பெயர் போனது, இப் பிரதேச மக்கள் அறிவில் நம் பிக்கை கொண்டவர்கள். சதாவதானி, அட்டாவதானிகள் பிறந்த பிரதேசம் இது. அன்றைய காலத்தில் வேற்றுமைக்கு இடம்கொடுத்தோம். அதனால் செல்வநாயகமா, பொன்னம்பலமா என அன்று பிரிந்து நின்றோம். அந்த வேற் றுமைகளை இக்காலத்தில் களைந்து அறிவு மூலம் ஒன்று படுவோம். வடமாகாண சபைத் தேர்தல் மூலம் நாம் தமிழர்கள் என உலகுக்கு எடுத்துச்சொல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதே சங்களான ஐம் மண்களைக் கொண்ட வடக்குத் தமிழ் மக்களை கொண்ட தனி அலகாகும். இத் தனி அலகு தமிழர்களுடையது என இத்தேர்தல் மூலம் உலகுக்குச் எடுத்துச் சொல்ல வேண்டும். போரின் பின்னர் ஜனநாயக முறைப்படி எமது பிரதிநிதிகளை நாம் தெரிவு செய்வோம். இத்தேர்தலில் பாரம் பரியம் மிக்க மக்களின் அன்புக்கு பாத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசின் அடிவருடிகள் போட்டியிடுகிறார்கள். அரசோடு சேருங்கள் அதனால் நன்மைகள் பல பெறலாம் என அரச அடிவருடிகள் கூறுகின்றார்கள். இதனால் அரசுக்கு நன்மையே தவிர தமிழ் மக்களுக்கு அல்ல என்பதை எம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசுடன் இணையும் மக்களைப் பற்றிய எண்ணம் அரசுக்கு கிடையாது. இராணுவம் இருப்பதால் தமிழ் மக்களின் நிலையில் மாற்றம் அடைகிறது. தமிழ் மக்களின் கலை , கலாசார, பாரம்பரிய விழுமியங்கள், கல்வி என்பன சீரழிக்கப்படுகின்றன. பெண்களின் நிலையும் மோசமடைகின்றது. தமிழ் மக்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நான் சிறுவனாக இருக்கும் போது திருகோணமலையில் மூன்றில் ஒரு பகுதி சிங்களவர்களே இருந்தார்கள். இன்று அவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு சிங்கள குடியேற்றம் அதிகரித்துள்ளது. எனவே அதிக பெரும்பான்மையை இத்தேர்தலில் பெற் றுக்கொண்டால் தமிழர்களின் கோரிக்கைகளை உலகறியச் செய்ய முடிவதுடன் இராணு வத்தையும் வடக்கிலிருந்து வெளியேற்றலாம் என்றார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, ஈ.சரவ ணபவன், சுரேஷ் பிரேமச்சந் திரன், முத ன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.

02 செப்டம்பர் 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்றி!

நாட்டில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கையறு நிலையிலிருந்த முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு இந்த நன்றியையும், பாராட்டுதலையும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள் தூண்டி விடப்பட்டு, முஸ்லிம்கள் மீதான அடாவடிகள் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
ஹலால் பிரச்சினை என்றும், ஹபாயாவென்றும் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகள் இறை வணக்கத்திற்கான பள்ளிவாசல்களை மூடியும், தாக்குதல் நடத்தியும் காட்டுதர்பாராக இன்று உருவெடுத்துள்ளது.
நாட்டில் 24 பள்ளிவாசல்கள் வரை தாக்கப்பட்டும், அதனை கண்டும் காணாத நிலையில் பொறுப்பு வாய்ந்த அரசு மௌனம் காத்து வருகின்றது.
சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து ஜனநாயகம், நல்லிணக்கம் பேசும் அரசு தவறியுள்ளது.
இனவாதத்தைத் தூண்டி மதப் பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளைத் தடை செய்யவோ, அவைகளது செயற்பாடுகளுக்கெதிராக நீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ இன்றுவரை அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல்,
இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளெனப்படுவோரும் உறுதியான, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அவ்வப்போது வீறாப்பான அறிக்கைகளை விட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றித் தம் கதிரைகளையும், சுகபோகங்களையும் காப்பாற்றிக் கொண்டே வருகின்றனர்.
முஸ்லிம்களின் தனிப்பெரும் கட்சியெனத் தம்பட்டமடிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கூட அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதிலேயே கண்ணாகவிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் மதஸ்தலங்களுக்கும் இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து அரசை விட்டு வெளியேறி சர்வதேச கவனத்தை ஈர்க்கவும், இதன் மூலம் தகுந்த பாடத்தைப் புகட்டவும் முஸ்லிம் காங்கிரஸ் முன்வர மாட்டாதா? என்ற ஆதங்கம் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ளது.
ஆனால் அரசை விட்டு வெளியேறுவதால் அரசுக்கு நட்டமில்லையென்ற கையாலாகாத்தனக் கருத்தை வெளியிடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, அரசு எம்மை வெளியேற்றினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென்ற உசுப்பேத்தும் வீர வசனங்களையும் பேசுகின்றது.
இவ்வாறெல்லாம் கையறு நிலையில் முஸ்லிம் மக்கள் கவலையிலிருக்கும் தறுவாயில்தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
திராணியற்ற முஸ்லிம் தலைமைகள், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வருவதில் வழக்கம் போல் மௌனம் காத்தன.
ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெறும் போதெல்லாம் தம் சகோதர இனத்திற்காகக் குரல் கொடுக்கத் தவறாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இன்றும் குரல் கொடுக்கத் தவறவில்லை.
அன்று சிறீமாவோ ஆட்சியில் புகழ் பூத்த முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் புத்தளம் பள்ளிவாசல் படுகொலைக்காக தந்தை செல்வா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
காலியில் நடந்த கலவரம் தொடர்பில் அன்று எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அண்ணன் அமிர்தலிங்கம் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தார்.
அந்த வரலாற்று வரிசையில் இன்று முஸ்லிம்களுக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குரல் கொடுத்து வருகின்றார்.
இந்த வகையில் வக்கற்ற முஸ்லிம் தலைமைகள் மௌனம் காக்க, இன்றைய முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளமை முஸ்லிம்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
இதற்காக நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அத்துடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனும் அமைப்பு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளமை பாராட்டத்தக்கதாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு

01 செப்டம்பர் 2013

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு-மவோயிஸ்ட் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக மவோயிஸ்ட் தலைவர் ஒப்புதல்தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அதன் அடிப்படையில் தொடர்புகளை நியாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், மவோயிஸ்ட்களின் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் தைரியமான இயக்கம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அடக்குமுறைகளுக்கு எதிராக புலிகள் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எவ்வாறான உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது பற்றிய துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.