12 செப்டம்பர் 2013

எழிலனை எவரும் ஒப்படைக்கவேயில்லை-சிங்களப்படை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட எவரும் தம்மிடம் சரணடையவோ, எவரையும் தாம், யாரிடம் இருந்தும் பொறுப்பேற்கவோ இல்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்து வரும், எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களின் மீதான விசாரணையிலேயே, சிறிலங்கா இராணுவம் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
2009ம் மே மாதம் 18ம் நாள் எழிலன் உள்ளிட்ட பெருமளவு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள், அரசின் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில், சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இவர்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்ததாகவும், மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறும் உறவினர்கள் வவுனியா மேல்நீதிமன்றில் முறையிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவ தரப்பில் இழுத்தடிப்புகளின் பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே, தம்மிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆட்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் முன்னிலையான
மூத்த சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் நீதிபதியிடம் கோரினார்.
இதையடுத்து, இதுதொடர்பான விசாரணையை நடத்தி கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, மேலும் 7 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் குறித்து, வரும் ஒக்டோபர் 23ம் நாள் சிறிலங்கா இராணுவத் தரப்பைப் பதிலளிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக