ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று முற்பகல் 10 மணிக்கு இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளார். கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கைக்குப் பயணம் செய்த நவநீதம்பிள்ளை, இந்தவாய் மொழி மூல அறிக்கையில் தனது இலங்கை பயணத்தின் போது அவதானித்த விடயங்கள் மற்றும் மனித உரிமை விடயங்களை முன்னேற்றுவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறு பான்மை இனங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடருக்கு முன்னர் இலங்கை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் பற்றி இன்றைய உரையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு இடம்பெறவுள்ள அவரின் வாய்மொழி மூல அறிக்கையைத் தொடர்ந்து உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதற்குப் பதிலளித்து உரையாற்றுவார். வெள்ளிக்கிழமையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நிறைவுபெற உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை நவநீதம்பிள்ளை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக