வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார் தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்.கோபாலசுவாமி. இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்துக்குப் போதியளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொழும்பில் தமது தேர்தல் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்ட பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக் கூறினார். தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சியால் அரச ஊழியர்கள் பயன்படுத்தப் பட்டமையைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரான காலப் பகுதிகளிலும் உதவிகள், இலவசங்கள் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதான தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் சட்ட உதவியாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் கூறியிருந்தமையை இந்தச் செய்தயாளர் சந்திப்பில் கோபாலசுவாமி மேற்கோள்காட்டினார். தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் நேரடியாகவும், சிவிலிலும் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமை, அச்சுறுத்தியமை போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தை தமது உத்தியோகத்தர்களால் நேரடியாக அவதானிக்க முடியாமல் போனமைக்கு மன்னிப்புக் கோரினார். இந்தத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமானதாகவும் நடைபெற்றதா என்று இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, வாக்களிப்பு நிலையத்துக்குள் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் பதிலளித்தார். இலங்கை தேர்தல் திணைக்களத்துக்கு அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் போதுதான் மிகச் சிறப்பாக செயற்பட முடியும் என்றும் கோபாலசுவாமி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக